• TRENDING | பர பர

டோக்கியோ பாராலிம்பிக்: இந்திய அணி கேப்டன் மாரியப்பன் தங்கவேலு!





தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் மாரியப்பன் தங்கவேலு, இந்தமுறை இந்திய தேசிய மூவர்ணக்கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். டோக்கியோவில் கடந்த 2020ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதிவரை இப்போட்டிகள் நடக்கிறது. இதற்கிடையே டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளும் வருகிற 23-ம் தேதி தொடங்கி - ஆகஸ்ட் 8-ம் தேதிவரை நடக்கவுள்ளன.

பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டது குறித்து இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவர் தீபா மாலிக் கூறியதாவது:

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்தி, இந்திய அணியை மாரியப்பன் வழிநடத்துவார். 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில், மாரியப்பன் 1.89 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மாரியப்பனின் சாதனையைப் பெருமைப்படுத்தும் வகையில் டோக்கியோ 2021 பாராலிம்பிக்கில் தேசியக்கொடியை ஏந்திச் செல்ல இந்திய பாராலிம்பிக் குழு முடிவு செய்துள்ளது.

-இவ்வாறு தீபா மாலிக் கூறினார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :