அழகிய உவமைகளும்! - 1 /> அழகிய உவமைகளும்! - 1 />

  • தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும்
அழகிய உவமைகளும்! - 1


- லதானந்த்

பன்னிரு ஆழ்வார்கள் திருமாலை போற்றிப் பாடிய பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்கள் பாடிப் போற்றிய திருத்தலங்கள் 108. அவை, ‘வைணவ திவ்ய தேசங்கள்’ எனப் போற்றப் படுகின்றன. அந்த 108ல் பரமபதமும், பாற்கடலும் விண்ணுலகில் உள்ளன; பூமியில் தரிசிக்க இயலாதன.

ஆழ்வார்களது பாசுரங்களில் தமிழும், இறையுணர்வும் கலந்து மிளிர் கின்றன. பாசுரங்களில் பயின்றுவரும் பக்திச் சாரலுக்கிடையே அழகிய உவமைகள் ஆங்காங்கே இயல்பாகவும் நளினமாகவும் வந்து, படிப்போர்க்கு இறையுணர்வையும், தமிழுணர்வையும் அள்ளி வழங்குகின்றன.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் இயற்பெயர், ‘விஷ்ணு சித்தர்.’ திருவில்லிபுத்தூரில் பிறந்தவர்; கருடனின் அம்சமாகக் கருதப்படு பவர்; பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை இவர். கண்ணனின் பிறப்பு, வளர்ப்பு, ஆனிறைகளைக் கண்ணன் மேய்த்தது, பக்தர்களுக்கு அவன் அருள்பாலித்தது என்பனவற்றைப் பாடி மகிழ்ந்தார்.

பெரியாழ்வாரின் பாசுரங்களில் தவழும் உவமைகள் சிலவற்றைப் பார்ப்போம் :

தேவகியை பற்றிச் சொல்ல நினைக்கிறார் பெரியாழ்வார். அவரது குணங்கள் அத்தனையும் பட்டியலிட்டால் பாசுரத்தின் நீளம் அதிகமாகுமே? யோசிக்கிறார். சுருக்கமாக ஓர் உவமையைச் சொல்கிறார். ‘திருப்பாற் கடலில் பிறந்த மகாலட்சுமியை போன்ற தேவகி’ என்கிறார். இதிலேயே அனைத்தும் அடங்கி விடுகின்றன. கண்ணால் காணும் சாமுத்ரிகா லட்சணங்களோடு, மகாலட்சுமியின் தெய்வாம்சங்களும் ஒருங்கே நிரம்பியவர் தேவகி என்பதையும் எளிதாக நிறுவி விடுகிறார் பெரியாழ்வார்.

அதே பாசுரத்தில் கண்ணன் தமது குட்டிக் கைகளால் பாதத்தை எடுத்து வாயில் சுவைப்பதை விளக்கவரும்போது, பாதங்களைத் தாமரைக்கு உவமையாக்குகிறார். தாமரை புனிதத்துவம் வாய்ந்த மலர்; பூசைக்குரியது; புண்ணியம் தருவது;

அதனை ஸ்பரிசிக்கவோ மிக மென்மையானது. இத்தனை திருக்குணங்களை யும் பெற்ற தாமரை மலரை அதே குணங்கள் கொண்ட குழந்தை கண்ணனுடைய பாதங்களுக்கு இணையாக்குகிறார் பெரியாழ்வார்! அதோடு மட்டுமா? அந்தப் பேரழகுப் பெருமானின் பெருமைமிகு திருக்கோலத்தைக் காணவரும் கோபியரை பற்றிச் சொல்கையில், பவளம் போன்ற வாயுடையவர் என்கிறார். பவளம் சிவந்தது; விலை மதிப்பு மிக்கது; மாந்தரால் விரும்பப்படுவது. அப்படிப்பட்ட வாயுடையோரே! கோபியரே! வாருங்கள்; வந்து கண்ணனது திருக்கோலத்தைக் காணுங்கள் என்கிறார்!

‘சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்,
பாதக் கமலங்கள் காணீரே, பவள வாயீர்!
வந்து காணீரே!’

கண்ணனின் பாதத்தைப் பற்றிப் பாடிய பிறகு, கால் விரல்களைப் பற்றியும் சொல்லியாக வேண்டுமல்லவா? கோபியரை அழைத்து கண்ணனின் கால் விரல்களின் பெருமைகளை யசோதை கூறுவதாகப் பெரியாழ்வார் சொல்வதைப் பாருங்கள்... ‘முத்து, வைரம், மாணிக்கம், தங்கம் ஆகிய இவையனைத்தும் பதித்ததுபோல விளங்கும் பாத விரல்கள்’ என்கிறார். விலை மதிப்புமிக்க கற்களையும் உலோகத்தையும் மக்கள் விரும்புவது இயற்கைதானே? அவற்றின் பொலிவுக்காத்தானே அந்த விலை மதிப்பு? அப்படிப்பட்ட விலை மதிப்புமிக்கன அனைத்தும் ஒருங்கே இணைந்திருந் ததைப் போல மிளிர்ந்ததாம் கண்ணனின் பாத விரல்கள்!

இதோ அந்தப் பாசுரம் :

‘முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பெய்து தலைப்பெய்தால் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே, ஒண்ணு தலீர்!
வந்து காணீரே!`

(உவமைகள் தொடரும்)

Comments

Rithanya G V says :

லதானந்த் அவர்கள் எழுதியிருக்கும் ‘ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும்’ இனிமையான ஆரம்பம். பக்தியையும், இலக்கியத்தையும் குழைத்துத் தந்திருக்கிறார். வாழ்த்துகள். அன்புள்ள, ரிதன்யா ஜி.வி.

Mangalagowri says :

அழகான உவமைகளை அருமையாக எழுதி என்னைப் போன்ற பாமர மக்களுக்கு விளங்கவும் செய்துள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி

துடுப்பதி ரகுநாதன் says :

குழந்தையின் பாதம் கமலம் போல் இருப்பது சிறந்த உவமை! புதிய முயற்சி தொடரட்டும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :