• தீபம் - ஆன்மீகம்

வேதங்கள் வழிபட்ட ஆரண்யம்!


- வி.பி.அர்த்தநாரி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் கடற்கரைப் பட்டினம். இது தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற தலம். வேதங்கள் நான்கும் இங்கு சிவபெருமானை வழிபட்டதால் இப்பெயர் வழங்கலாயிற்று. பெருமானின் திருநாமம் வேதபுரீஸ்வரர். இவர் திருமறைக்காடர், மறைக்காட்டு மணாளர் என்றும் வழங்கப்படுகிறார்.

கருவறையில் சிவலிங்கத்துக்குப் பின்னால் வேதபுரீஸ்வரர் அம்பாளுடன் திருமணக் கோலத்தில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. ’வீணா வாத்ய விதூஷணி’ என்பது அம்பாளின் திருநாமம். அம்பாள் கரங்களில் வீணையை வாசிப்பது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அகத்திய முனிவருக்கு இத்தலத்தில் திருமணக் கோலத்தில் காட்சி அளித்தாராம் சிவபெருமான். அகத்தியருக்கு தனிக்கோயில் அருகிலேயே அமைந்துள்ளது. இக்கோயிலில் அருளும் துர்கை அம்மனை ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் தல புராணம் கூறுகிறது.

அம்பாளுக்கு தனிச்சன்னிதி உண்டு. ’யாழினைப் பழித்த மொழியாள்’ என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதி தேவி அம்பாளின் முன்னால் அமர்ந்து யாழினை மீட்டி, ஈசனின் புகழை இசையாகப் பாடினாளாம். அம்பாள் அதற்கு, ‘ஆஹா... சபாஷ்’’ என்று சொன்னாளாம். அம்பாளின் குரல் இனிமை தனது வீணை இசையை விட மிகவும் இனிமையாக இருந்ததால் வெட்கப்பட்ட சரஸ்வதி தன் வீணையை உறையிலிட்டு மூடி விட்டாளாம். எனவே, அம்பாளுக்கு இந்த அழகிய திருநாமம் வழங்கலாயிற்று.

தேவாரம் பாடிய திருநாவுக்கரசரை பற்றி ஒரு செய்தி வழங்கப்படுகிறது. திருநாவுக்கரசர் இவ்வாலயத்துக்கு வந்தபொழுது ஆலயக் கதவுகள் மூடி இருந்ததாம். இறைவனை கண்டுகளிக்கும் ஆவலால் அவர் ஒரு பதிகம் பாட,. உடனே கதவுகள் திறந்துகொள்ள ஆண்டவன் காட்சி தந்தாராம்.

கருவறையில் ஒரு எலி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த தீப விளக்கில் இருந்த நெய்யைச் சுவைக்கப் பாய்ந்தது. எலியின் வால் அணையப் போகும் திரியில் படவே, திரியை அது தூண்டி விட்டதும் தீபம் நன்றாக சுடர்விட்டு எரியத் தொடங்கியது. இந்த நற்செயலால் அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்து, சேர நாட்டை சிறப்பாக ஆண்டதாக தல புராணம் கூறுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :