• தீபம் - ஆன்மீகம்

பிரதோஷமும் குழந்தைப் பேறும்


- ஆதினமிளகி, வீரசிகாமணி

பிரதோஷம் என்பது பகல் என்றும் இரவு என்றும் சொல்ல முடியாத மாலை ஆரம்பமாகும் நேரம்! சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயம்.

மகாமேருவை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு பக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். ஆலகால விஷம் தோன்றியது. அதைச் சிவபெருமான் எடுத்துச் சாப்பிட்டார். தேவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அது அப்பேர்ப்பட்ட கொடிய விஷம். அதிலிருந்து வரும் கெட்ட வாசனையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! எல்லோரும் சுருண்டு விழுகிற நிலைக்கு வந்து விட்டார்கள்.

அதை சிவபெருமான் சாப்பிட்டுக் கண்டத்தில் நிறுத்திக் கொண்டது மேலும் அவர்களுக்குப் பயத்தைக் கொடுத்தது. அப்போது தேவர்கள், தைரியம் கொள்ள வேண்டும் என்று சிவபெருமான் நினைக்கிறார். அதற்காக, நந்தியை பெரிய உருவம் எடுக்கச் செய்கிறார். அதன் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் நின்று தாண்டவம் ஆடுகிறார். அந்தச் சமயத்தில் சிவபெருமானை நந்தியின் இரு கொம்புகளுக்கு நடுவே பார்க்க வேண்டும். அந்த நேரம்தான் பிரதோஷம். அது மிகவும் விசேஷமான காலம்!

இதில் சனிப் பிரதோஷம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. அன்று முதலில் நந்தியைப் பார்க்க வேண்டும். அடுத்து, சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். மூன்றாவதாகத் தீர்த்தம் வெளிவருகின்ற இடத்தையும் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட விசேஷமானது சனிப் பிரதோஷம்.

பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்த தயிரை அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். நந்திக்கு தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள்.

நந்தியின் சிலை ஒருவகை கல்லால் ஆனது. தயிரானது அந்தக் கல்லின் மீது பட்டுக் கீழே விழும்போது, அந்தக் கல்லின் சக்தியானது தயிருடன் சேர்ந்து ஒருவித ரசாயனக் கலவையை உண்டாக்குகிறது. எனவே, அதனை அருந்தும் தம்பதியினருக்கு கரு உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

மேலும், பிரதோஷ காலம் என்று சொல்லப்படுகின்ற நேரம், 4.30 மணி முதல் 6 மணி வரை. அப்போது அபிஷேகம் செய்யும், தயிரைப் பருகும்போது, சூரியனின் வெப்பம் வெகுவாகக் குறைந்து அஸ்தமன மாகின்ற நேரமாயிருக்கும். ஆதலால் அந்த நேரத்தில் தயிரை உட்கொள்கின்றபோது சூரியனின் சக்தியும், அதனுடன் சேர்ந்து வேலை செய்வதால் நிச்சயம் குழந்தைப் பேறும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :