• GLITTERS | பளபள

தமிழக பொருளாதாரம் எதை நோக்கிச் செல்கிறது?


-ராஜ்மோகன் சுப்ரமண்யன்

தமிழகத்தின் பொருளாதரத்தை மேம்படுத்த நிபுணர் குழுக்கள் அமைப்பது அவசியமா? அவர்களால் செய்யக் கூடியது என்னென்ன? விரிவாகப் பார்ப்போம்..

தமிழ்நாட்டின் பொருளாதாரம் எதன் மீது பயணிக்கிறது ? தமிழகத்துக்கு வருவாய் கிடைப்பது சேவைத்துறை மூலம் 45% , தொழில்துறை மூலம் ம் 34%, மற்றும் வேளாண்மைத் துறை மூலம் 21% என்கிறது 2013 -2014 ஆண்டின் ஒரு புள்ளிவிவரம். அதற்கு பிறகு சரியான புள்ளிவிவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.

தமிழகத்தின் அன்றைய முதலவர் செல்வி ஜெ.ஜெயலலிதா ‘’விஷன் 2023’’ என்றொரு தொலைநோக்கு திட்டத்தை வடிவமைத்தார். இத்திட்டத்தினை உருவாக்கும் பணியில் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் சி.ரங்கராஜன் போன்ற மேதைகள் இருந்தனர். தொடர்ந்து உலக முதலீட்டாளர் மாநாடு எனும் பெரும் விழாவை சுமார் 100 கோடி செலவு செய்து நடத்தினார். இதன் மூலம் 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் குவிந்ததாக சொல்லப்பட்டது. எனினும் தொடர்ந்து பல நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதே தவிர பெரும் பலன் கிடைத்ததாக தெரியவில்லை.

தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பல பகுதிகள் குறிப்பிட்ட தொழிலின் அடையாளமாக இருந்து வந்தன. உதாரணமாக - ஜவுளி சார்ந்த தொழில்களுக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்கள் முதன்மை பெற்றன. அதேபோல் இரும்பு உருக்கு ஆலைக்கு சேலம், கோழிப்பண்ணைகள் மற்றும் முட்டைகளுக்கு நாமக்கல் மாவட்டம், குழாய் கிணறு அமைக்கும் தொழில், போக்குவரத்து கனரக வாகனங்கள் இயக்கும் தொழில்களூக்கு கரூர், அச்சு மற்றும் பட்டாசு தொழில்களுக்கு சிவகாசி, தோல் பதனிடும் தொழிலுக்கு திருச்சி, வேலூர், மின் உதிரி உற்பத்தி, மீன் பிடித்தொழில் மற்றும் மின்சார உற்பத்திக்கு தூத்துக்குடி, மீன்பிடித் தொழிலுக்கு நாகப்பட்டினம் என தமிழ்நாட்டின் தொழில் அடையாளம் மிகப் பெரியது.

அதே போன்று ஓசூர் என்றால் பெரும் தொழிற்பேட்டைகள் புகழுடன் விளங்குகிறது. அசோக்லேலாண்ட், டிவிஎஸ், டைட்டான் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டின் முதுகெலுமாக திகழ்கிறது. சென்னை அதன் சூழ் பகுதிகளில் மட்டும் பார்சூன் 500 என்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன. சிப்காட் சார்பில் 8-க்கும் அதிகமான தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலேயே முதல் முறையாக ஆட்டோமொபைல் காரிடர் எனும் வாகன உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழிற்வழிசாலை தமிழ்நாட்டில்தான் அமைந்துள்ள.

ஹுண்டாய், போர்டு, யமஹா, நிசான், பிஎம்டபிள்யூ என உலகின் புகழ்பெற்ற பிராண்டுகள் இந்தியாவில் இருந்து உற்பத்தியாவது தமிழ்நாட்டின் பெருமை.

இப்படி தொழில்வளம் சிறப்பான நிலையில் இருக்கும் அதே சூழலில் தஞ்சை உட்பட எட்டு டெல்டா மாவட்டங்கள் முழுக்க முழுக்க உணவு உற்பத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த பகுதி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரவலாக விவசாயத்தொழில் நடந்து வந்தாலும் அது இந்த தொழில் வளர்ச்சியின் காரணமாக ஒரு மந்த நிலையை நோக்கி நகர்ந்து இப்பொழுது 21% என்ற நிலையில் இருக்கிறது.

பொருளாதார தாராளமயக்காலுக்கு பிறகு இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் பெறுகிறது. ஏனெனில் இதே காலகட்டத்தில்தான் கல்வியில் தனியாருக்கு முன்னுரிமை கொடுத்து ஏராளமான தொழிற்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெருகின. இதன் காரணமாக மனிதவளமும் அபாரமாக உயர்ந்தது.

சேவைத்துறை எனப்படும் ஐடி துறை தமிழ்நாட்டின்மீது குறிவைத்தபோது அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி இந்தியாவிலேயே முதல் முறையாக டைடல் பார்க் எனும் தொழிற்பூங்காவை உருவாக்கினார். அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் கலைஞருக்கும் இடையே இருந்த அரசியல்ரீதியான நட்பும், நீண்டகால அனுபவமும் இதனை செயல்படுத்த உதவின.

இன்றைய தேதிக்கு தமிழநாட்டில் 12 மாவட்டங்களில் 21 சிப்காட் தொழிற்பேட்டைகளும் 7 சிறப்பு பொருளாதார மண்டலமும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றனர்.

இது தவிர டான்சிட்கோ எனப்படும் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக 121 தொழிற்பேட்டைகள் ,அதாவது 41 நேரடியான அரசு தொழிற்பேட்டைகளும் 80 அரசு ஊக்குவிப்புடன் தனியார் தொழிற்பேட்டைகளும் இயங்கி வருகின்றன. சென்னைக்கு அருகே மகேந்திரா சிட்டி எனும் தனியார் தொழிற்பேட்டை என ஐடி,ஜவுளி, கனரகம, மின்னனு உற்பத்தி,வாகன உற்பத்தி, விவசாயம், மரபுசாரா எரிபொருள் உற்பத்தி,விமான உதிரிபாகம், உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தியாகின்றன.

இப்படி எல்லாவகையில் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்த தமிழ்நாடுதான் இப்பொழுது பொருளாதாரத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இதன் முக்கிய காரணம் - மத்திய அரசின் தவறான தொழில்கொள்கை. மற்றும் தமிழ்நாட்டில் கலைஞர், ஜெயலலிதா போன்று ஆளுமை மிக்க தலைவர்கள் அரசு நிர்வாகத்தில் இல்லாதது!

மத்திய அரசு இரண்டு பெரும் தவறுகளை செய்தது . முதலாவது பணமதிப்பிழப்பு. இரண்டாவது ஜிஎஸ்டியை முறையாக வடிவமைக்காமல் அமல்படுத்தியது. ஜிஎஸ்டி எனும் வரி ஒரு எளியவழிமுறை. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளமாக்க முடியும். எனினும் அதனை செயல்படுத்திய விதமும், அதில் இருக்கும் சிக்கல்களும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை முற்றிலும் முடக்கி போட்டு விட்டன.குறிப்பாக திருப்பூர்,கோவை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த ஜவுளிசார் தொழில்கள் முற்றிலும் முடங்கின. பெரும்பாலான நிறுவனங்கள் வங்கதேசத்திற்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டன.

தமிழ்நாட்டிலும் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கியநாடுகளுக்கு குழுவினருடன் பயணித்து முதலீட்டாளர்களை சந்தித்தார். இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெகு விமர்சியாக 2019-ல் நடத்தினார் எடப்பாடி. இதன் மூலம் 3 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டு ஒப்பந்தங்கள் உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால் அதில் ஒரு10 சதவீதமாவது நடைமுறைக்கு வந்ததா என்பது கேள்விக்குறி.

இப்படிப்பட்ட சூழலில்தான் திமுக தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றிருக்கிறது. முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்றவர் மட்டுமல்ல அவரின் அமைச்சரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு போன்ற திறமையான அமைச்சர்களை நியமித்திருக்கிறார். இப்படி உறுதியாக முதல்வர் ஸ்டாலின் களமிறங்கி இருக்கும்போது, ஏன் புதிதாக இந்த ஐந்து பேர் தலைமையிலான பொருளாதார குழு ?

இதற்கு முன்பு ஒரு பத்து பேர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது எதற்காக? இந்த குழுக்களால் அரசுக்கு செலவுகள்தானே ஏற்படும்? இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? –இப்படி இதன் சாதக பாதகங்களை பார்ப்போம்..

( தொடரும் )

Comments

Mohana Krishnan k.s. says :

Expert.group.badly required No expenditure .it.iis.free of cost

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :