எல்லோருக்கும் ஒரு காலம் வரும்! /> எல்லோருக்கும் ஒரு காலம் வரும்! />

  • தீபம் - ஆன்மீகம்

படித்ததில் பிடித்தது...
எல்லோருக்கும் ஒரு காலம் வரும்!


- சேலத்தான்

துவாரகையில் பல கெட்ட சகுனங்களை ஸ்ரீ கிருஷ்ணர் பார்த்தார். ’’பெரும் நாசம் விளையும் நேரம் வந்துவிட்டது. யாதவக் குலத்திற்கு ரிஷிகள் இட்ட சாபம் பலிக்கும் நேரம் வந்துவிட்டது. வயதில் முதிர்ந்தவர்களும், பெண்களும் குழந்தைகளும் சங்கத்துவாரம் என்னும் இடத்திற்குச் செல்லட்டும். மற்றவர்கள் பிரமாஸம் என்னும் புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்வோம்" - என்று யாதவர்களிடம் கூறினார்.

சில முனிவர்களும், நல்லோர்களும் தங்களிடத்திற்கு வந்தபோது யாதவர்கள் அவர்களை கேலி செய்தார்கள். தங்களில் ஒருவனுக்குப் பெண் வேடம் போட்டு, அவன் வயிற்றில் துணியைத் திணித்து, அவனைக் கர்ப்பவதி போல மாற்றினார்கள். அவனை ரிஷகள் முன்கொண்டு சென்று நிறுத்தி, ’’நீங்கள் பெரிய மகான்கள். இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது? ஆண் குழந்தையா? பெண்ணா?" என்றனர்.

அத்ரி முனிவர் கோபம் கொண்டு, இந்தப் பெண்ணுக்கு உலக்கை பிறக்கும். அந்த உலக்கையால் நீங்கள் ஒருவரை மற்றவர் அடித்துக்கொண்டு, யாதவக் குலமே அழிந்து போகும்" என்றார்.

பெண் வேடம் போட்டிருந்தவன் உலக்கையைப் பெற்றெடுத்தான். ’இதனால் நாசம் விளையுமே’ என்று அஞ்சிய யாதவர்கள், அந்த உலக்கையை உடைத்துப் பொடி செய்து தண்ணீரில் விட்டுவிட்டனர். அந்தத் தண்ணீர் பாய்ந்த இடத்தில் எல்லாம் கோரைப்புற்கள் முளைத்தன.

ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி சாபம் பலிக்கும் நேரம் வந்தது. யாதவர் களிடையே ஒரு சாதாரண விஷயத்திற்கு வாக்குவாதம் உண்டாயிற்று. கோரைப்புல் ஒவ்வொன்றும் ஒரு உலக்கையாய் மாறிற்று. அதைப் பயன்படுத்தி, அவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.

நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், தந்தை, மகன் என்று எல்லா உறவுகளையும் மறந்து, ஒருவரையொருவர் உலக்கையாக மாறிய கோரைப் புல்லால் தாக்கிக்கொண்டனர். கிருஷ்ணரும், பலராமனும் அவர்களைத் தடுத்தனர். ஆனால், முடியவில்லை. யாதவர்கள் பேரழிவைச் சந்தித்தனர்.

இந்த அழிவும் ஸ்ரீகிருஷ்ணர் உண்டாக்கியதுதான். பூமி பாரம் குறைப்பதற்கு அவதரித்த அவர் யாதவர்களின் அழிவைத் திட்டமிட்டார். யாதவர்கள் தாம் பெற்ற வெற்றியால் பெரும் கர்வம் கொண்டிருந்தனர். அதைத் தடுக்க பேரழிவு தேவை என்று ஸ்ரீகிருஷ்ணர் எண்ணினார். இதனுடன் ரிஷிகளின் சாபம் யாதவர்களின் அழிவுக்கு மேலும் காரணமாயிற்று.

பலராமர் சமுத்திரக் கரையில் அமர்ந்து தியானம் செய்து மேல் உலகம் சென்றார். ஸ்ரீகிருஷ்ணர் மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அவரது இடது பாதம் வலது தொடையின் மீது இருந்தது. அப்போது ஜரன் என்ற ஒரு வேடன் அங்கு வேட்டையாட வந்தான். அவன் கண்களில் கிருஷ்ணரின் இடது பாதம் தெரிந்தது.

அதை ஒரு மானின் முகம் என்று நினைத்து, அவன் அம்பு எய்தான். அந்த அம்பின் நுனியில் யாதவர்கள் அழிவுக்குப் பயன்பட்ட உலக்கையின் துகள்கள் ஒட்டிக் கொண்டு இருந்தன.

அம்பெய்த வேடன், அங்கு வந்து பார்த்தபோது தனது தவறை உணர்ந்தான். ’’பிரபுவே! என்னை மன்னியுங்கள். நான் பெரும் பாவம் செய்துவிட்டேன்" என்று அழுதான்.

ஸ்ரீகிருஷ்ணர், என்னுடைய எண்ணத்தின்படி எது நடக்க வேண்டுமோ, அது நடந்துவிட்டது. நான் திட்டமிட்டதை நீ செய்தாய். வருந்த வேண்டாம். பெரும் புண்ணியம் செய்தவர்கள் செல்லும் சுவர்கத்திற்கு நீயும் போவாய்" என்று வாழ்த்தினார்.

வேடன் மூன்று முறை ஸ்ரீகிருஷ்ணரை வலம் வந்து வணங்கினான். அவன் ஒரு தேவனாக மாறினான். வானத்திலிருந்து ஒரு விமானம் வந்து அவனை அழைத்துச் சென்றது.

கிருஷ்ணரை தேடிக்கொண்டு அவருடையே தேரோட்டி தாருகன் என்பவன் வந்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஸ்ரீகிருஷ்ணனின் கொடியாக இருந்த கருடன் ரதமாக வந்தது. சங்கு, சக்கரம் முதலியன

ஸ்ரீகிருஷ்ணரின் அந்த ரதத்தைப் பின்தொடர்ந்து வானுலகம் சென்றன.

ஸ்ரீகிருஷ்ணர், தாருகனிடம் ’’நீ துவாரகைக்குச் சென்று எஞ்சியிருப்பவர்களி டம் யாரும் இனி சண்டை போட வேண்டாம் என்று கூறு. துவாரகை அழியப்போகிறது. அது கடலில் மூழ்கப் போகிறது. அர்ஜுனன் வந்து எல்லோரையும் இந்திர பிரஸ்தத்திற்கு அழைத்துச் செல்வான்" என்று கூறினார்.

ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, அர்ஜுனன் வந்து மிஞ்சிய யாதவர்களை அழைத்துக்கொண்டு இந்திரப பிரஸ்தம் சென்றான். வழியில் சில திருடர்கள் வழிமறித்து அவர்களைத் துன்பறுத்தினர். அர்ஜுனன் தன்னிடமிருந்த அனைத்து ஆயுதங்களாலும் திருடர்களைத் தடுக்க முயன்றான். ஆனால், முடியவில்லை. இறுதியில் காண்டீபத்தை எடுத்து அம்பு எய்தான். ஆனால், அதுவும் பலமிழந்துவிட்டது.

வழியில் அர்ஜுனன் வியாசரை சந்தித்தான். பாரதப் போரில் பீஷ்மர், கர்ணன், அஸ்வத்தாமா, துரியோதனன் என்று பல வீரர்களை கொன்ற என்னால். இந்தத் திருடர்களை அழிக்க முடியவில்லையே" என்று வருந்திக் கூறினான்.

’’அதுதான் காலம். காலம் உனக்கு இப்போது பயன்படவில்லை" என்றார் வியாசர்.

ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் செல்வதைக் காண பார்வதி-பரமசிவன், பிரம்ம தேவன், இந்திரன் என்று பலரும் வந்தனர்.

தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள்.

சித்தர்கள், முனிவர்கள், தேவர்கள், ராக்ஷஸர்கள், அப்சரஸ்கள் என்று எல்லோரும் வந்து கூடினர்.

ஸ்ரீகிருஷ்ணர் தன் உலகான வைகுண்டம் அடைந்தார்.

- ’சோ’வின் இந்து மஹாசமுத்திரத்திலிருந்து...

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :