• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

52. என்ன சேதி?


- அமரர் கல்கி

என்ன சேதி? - 52

புது வருஷம்

வெள்ளியன்று பிறந்திருக்கும் பார்த்திப வருஷம் தமிழ் மக்களுக்கு எல்லாவிதத்திலும் மங்கள வருஷமாக விளங்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம். புது வருஷத்தில் தமிழர்கள் சகல செளபாக்கியங்களையும் அடையட்டும். தமிழ் மொழி சிறந்து வளரட்டும். தமிழ் மொழிக்குத் தொண்டு செய்யும் திருக் கூட்டத்தாரின் முயற்சிகள் வளர்ந்தோங்கட்டும். தமிழ் நாட்டிலுள்ள தேசத் தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்காம லிருக்கட்டும். அவர்களுக்குள் சிநேகபாவம் வளரட்டும். தமிழ்நாட்டில் தமிழர் சுயாட்சி செலுத்தும் நாள் நெருங்கி வரட்டும். “வெற்றி யெட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே” என்ற தேசீய மகாகவியின் வாக்கு உண்மையாகட்டும்.

ஜின்னாவுக்கு ஓய்வு

சென்ற சில வருஷ காலமாக இந்திய முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவராய் விளங்கிவரும் ஜனாப் ஜின்னா வேலை மிகுதியினால் தேக நலம் குன்றி மூன்று மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் நேரிட்டிருப்பது அறிந்து வருந்துகிறோம். என் உடம்புக்குப் பலவீனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஓய்வுதான் தேவை!” என்பதை ஜனாப் ஜின்னா தமது அறிக்கையில் வற்புறுத்திக் கூறியிருக்கிறார். ஜனாப் ஜின்னாவுக்கு வேறொன்றுமில்லாவிட்டாலும், அவருடைய பலவீனமே நமக்கு வேண்டிய கவலை அளிப்பதற்குப் போதுமானது. முக்கியமாக, தேசத்தில் அரசியல் நெருக்கடிகளும் சிக்கல்களும் அதிகமாகி வரும் இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த நெருக்கடிகளையும் சிக்கல்களையும் தீர்ப்பதற்குப் பெரிதும் அவசியமான முஸ்லிம் சமூகத் தலைவர் பலவீனமடைந்து மலை வாசத்துக்குப் போக நேர்ந்தது பற்றி எப்படிக் கவலைப்பபடாமலிருக்க முடியும்?

பிடிவாதத்தின் பலன்

ஜனாப் ஜின்னாவின் கட்சி தேசத்தில் பெரிதும் பலவீனம் அடைந்திருக்கும் சமயத்தில் அவருடைய தேகபத்தின் பலவீனமும் சேர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். காங்கிரஸ்வாதிகள் மாகாண சர்க்கார்களைக் கை நழுவ விட்ட காலத்திலிருந்து ஜனாப் ஜின்னாவின் கட்சி தேசத்தில் நாளுக்கு நாள் பலம்பெற்று வந்தது. சமரசப் பேச்சுக்காக மகாத்மா காந்தி ஜனாப் ஜின்னாவைத் தேடிப் போனபோது, முஸ்லிம் லீக் தலைவரின் பலமும் செல்வாக்கும் உச்ச நிலையை யடைந்திருந்தது என்று சொல்லலாம். அச்சமயம் ஜனாப் ஜின்னா உச்சசாணிக் கிளையிலிருந்து கொஞ்சம் கீழிறங்கி வந்து சமரசம் செய்து கொண்டிருந்தால், தேசம் இதற்குள்ளாக விடுதலை அடைந்திருக்கும். ஜனாப் னின்னாவும் பெரும் நஷ்டத்தை அடையப் போகிறார் என்று அன்றைக்கே நாம் சொன்னோம். அந்தப் படியே (அதாவது நாம் சொன்னதற்காக அல்ல - காரண காரியம் என்ற இயற்கை நியதிப்படி) அன்று முதல் ஜனாப் ஜின்னாவின் பலமும் செல்வாக்கும் நாளுக்குநாள் தேசத்தில் குன்றி வந்திருக்கின்றன.

பலம் பெருகட்டும்

ஜனாப் ஜின்னாவைத் தேடி மகாத்மா öசென்றபோது ஐந்து மாகாணத்தில் முஸ்லிம் லீக் மந்திரிகள் ஆட்சி செலுத்தி வந்தார்கள். அவ்வளவு மந்திரிகளும் ஜனாப் ஜின்னாவின் தலைமையைப் பரிபூரணமாக ஒப்புக்கொண்டு காரியங்களை நடத்தி வந்தார்கள். ஆனால், இப்போதைய நிலைமை என்ன?

எல்லைப்புற மாகாணத்தில் முஸ்லிம் லீக் மந்திரிசபை வீழ்ந்து காங்கிரஸ் மந்திரி சபை ஏற்பட்டுவிட்டது.

சிந்து மாகாணத்தில் ஜனாப் ஜின்னா இட்ட கட்டளையை நிறைவேற்றி வந்த மந்திரிசபை வீழ்ந்து, காங்கிரஸ் ஆதரவு கொண்டு நடைபெறும் மந்திரி சபை நடந்து வருகிறது.

அஸ்ஸாமிலும் அதே மாதிரி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்ட மந்திரி சபை ஏற்பட்டு விட்டது.

இதெல்லாவற்றுக்கும் சிகரமாக, வங்காளத்தில் ஸர் நாஜிமுடீனின் லீக் மந்திரிசபை தொபுகடீரென்று விழுந்து, அதற்குப் பதிலாக 93வது பிரிவின் யதேச்சதிகார ஆட்சி ஏற்பட்டு விட்டது.

அம்மம்மா! என்ன வீழ்ச்சி! எத்தகைய வீழ்ச்சி!

இதையெல்லாம் ஜனாப் ஜின்னா தமது மலைவாச ஓய்வின்போது சிந்தித்துப் பார்ப்பாராக. சிந்தித்துப் பார்த்து, மனதைத் தெளிவுபடுத்திக் கொண்டு மகாத்மாவுடனும் காங்கிரஸுடனும் சமரசம் செய்து கொள்வது என்ற தீர்மானத்துடன் திரும்பி வருவாராக. மேற்படி தீர்மானத்தை அவர் வாசித்தவுடனே, தேசத்தின் பலம் வளரும்; லீக்கின் பலமும் வளரும்; ஜனாப் ஜின்னாவின் தேக நிலைமையும் நிச்சயமாக அபிவிருத்தியடைந்துவிடும்.

நாமக்கல் கவிஞர் நிதி

நாமக்கல் கவிஞர் நிதிக்குப் பணம் கொடுக்க விரும்பும் அன்பர்களும், பணம் வ‹லிக்க விரும்பும் அன்பர்களும் பலர், “அதற்கு அளிக்கப்பட்ட அவகாசம் போதாது” என்று தெரியப்படுத்தியதின் பேரில், அவர்களுடைய விருப்பத்துக்குக் கிணங்க, கவிஞருக்குப் பணமுடிப்பு அளிக்கும் தேதியைத் தள்ளிப் போட்டிருக்கிறது. ஆனால், ரொம்ப நாள் தள்ளிப்போடுவதாக உத்தேசமில்லை யென்று அறிகிறோம். அப்புறம் ஆறின கஞ்சி பழைய கஞ்சியாகிவிடும் என்பதைக் கவிஞரின் அன்பர்களுக்கெல்லாம் ஞாபகப்படுத்துகிறோம். கூடிய சீக்கிரத்தில் அவரவர்களுடைய அன்பைச் செயலில் காட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்.

(15.4.1945 கல்கி தலையங்கத்திலிருந்து...)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :