• SPARKLES | மினுமினு

அன்றொரு நாளிலே.. இரவில்..!


சிறுகதை: சிவகுமார், மெல்போர்ன்

நட்சத்திரக் குழந்தை-1

முகுந்தனுக்கு ’தான் ஏன் அந்த டெஸ்ட் எடுக்கணும்.. இப்ப இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகணும்’ என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது... இருப்பினும் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

வேலூரில் முகுந்தன் வேலூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரே மகன்! இப்போது வயது 45. படிப்பில் படு சுட்டி! 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில்,

பள்ளியில் முதல் மதிப்பெண்... மாநிலத்தில் இரண்டாவது மதிப்பெண்.

கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் குறிப்பிட்ட கடவுள் நம்பிக்கை இல்லை. கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் இல்லை. சிறு வயது முதலே பிரபஞ்சத்தின் மீதும் மரபணுவின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது..

சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் முகுந்தனுக்கு இன்னும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது. வேலூரை அடுத்த அரியூரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் தேதி மாடு விடும் திருவிழா அமர்க்களமாக நடக்கும். இது தென்மாவட்டங்களில் போன்ற ஜல்லிக்கட்டு இல்லை. இது காளை விரட்டு விழா... இதில் குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வேகமாக ஒரு காளை கடக்கிறது என்பதை பொறுத்து பரிசுகள் வழங்கப்படும். இதில் மூஞ்சூர்பட்டு கேசவன் என்பவருடைய மாடு ரொம்ப பிரபலம்... அந்த தூரத்தில் வரும்போதே மக்கள் தெறித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுவார்கள்! அவ்வளவு மூர்க்கமான மாடு!

இந்த விழாவை அந்த வருடம் நண்பர்களுடன் சென்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் முகுந்தன். அந்த மாட்டை புகைப்படம் எடுக்கும்போது தவறுதலாக கேமரா கீழே நழுவி, மாட்டருகே சென்று விழுந்தது. முகுந்தன் ஓடிச்சென்று கேமராவை எடுக்க, சுற்றி இருந்த அத்தனை பேரும் பதறினார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

முகுந்தன் அருகில் வந்த அந்த மாடு, முகுந்தன் முகத்தைப் பார்த்துவிட்டு சாந்தமாக தள்ளிப் போய்விட்டது. இந்த நிகழ்ச்சி பல மாதங்கள் வரை பரபரப்பாகப் பேசப்பட்டது.

பின்னர் அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தர். மூர்க்கமான அந்த மாடு எப்படி தன்னிடம் சாதுவாக நடந்து கொண்டது? ‘’எனக்கு மாட்டிடம் பயம் ஏதும் இல்லை. அதனால் அதற்கும் என்மீது பயம் இல்லை.” என்று நினைத்தார்.

பிறகு பயோ கெமிஸ்ட்ரி படித்து முடித்த், பின்னர் முதுநிலை பட்டப்படிப்பை ஆஸ்திரேலியா மெல்பர்னிலுள்ள மொனாஷ் யூனிவர்சிட்டி முழு ஸ்காலர்ஷிப்புடன் படித்தார். பின்னர் தன்னுடைய நீண்ட நாள் விருப்பமான மரபணு பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான்.

ஓய்வு நேரங்களில் கிலேட்டன் கல்லூரி வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது சில பறவைகள் அருகில் வந்து தன் மீது அமர்ந்தது விசித்திரமாக இருந்தது. ஏதோ பூர்வ ஜென்மத்து வழக்கம்போல் அவைகள் நினைப்பதும் ஓரளவுக்கு புரிந்தது. சிறிது குழப்பமாக இருந்தாலும் ஆராய்ச்சியின் சுமை அதிகமாக இருந்ததால் இவைகளை பற்றி அதிகமாக நினைக்க நேரமில்லை!

நட்சத்திரக் குழந்தை-2

மாதங்கள் கடந்தது ஜெனட்டிக் சயின்ஸில் ஆராய்ச்சி டாக்டர் பட்டம் வாங்கியது பெரிதல்ல... அதற்கான ஜீனோ பகுதி பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. வேறொன்றுமில்லை கஸ்டம் மேட் ’டிசைனர் பேபீஸ்” உருவாக்குவது பற்றிய ஆராய்ச்சி!

நமக்குத் தேவையான குணாதிசயங்களை கொண்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் வசதி!. மிகப் பெரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியது. முகுந்தன் கொடுத்த விளக்க அறிக்கையினால் அந்த எதிர்ப்பலைகள் அடங்கியது.

‘என்னுடைய இந்த ஆராய்ச்சியின் முடிவு மனித குலத்திற்கும், இயற்கையின் தன்னிலைக்கும், நாம் கொண்டுள்ள கடவுளின் சித்தாந்தத்திற்கும் எதிரானது அல்ல. என்று நீங்கள் கருதினால் நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் தடை விதிக்கும். நானும் இதை செயல்படுத்த விரும்பவில்லை’

ஆஸ்திரேலியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட முகுந்தனின் இந்த அறிக்கை... கடல் கடந்து உலகம் முழுவதும் பேசப்பட்டது. என்னதான் இந்த ஆராய்ச்சிக்கு நெகட்டிவ் இமேஜ் இருந்தாலும்... விஞ்ஞான உலகில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பும் இருந்தது.

இப்போது முகுந்தன் மரபணுவில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருவர். ஒரு சில நாட்களாக முகுந்தனுக்கு கனவா.. அமானுஷ்ய நினைவா என்று ஒன்றும் புரியாத சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.

வாழ்க்கையில் தான் இதுவரை கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்த்தார். பெரிய ஆச்சரியம் இதுவரை தனக்கு எந்த இடையூறு அல்லது தோல்வியே ஏற்பட்டதில்லை இது எப்படி? நாம் என்ன அவ்வளவு ஒரு ஸ்பெஷலான மனிதனா என்ற கேள்வி தினமும் துளைத்தது.

மிகவும் யோசித்து, இறுதியில் அந்த முடிவை எடுத்தார்... அதன்படி டெஸ்டும் செய்து கொண்டார், டெஸ்ட் ரிசல்ட்டும் வந்தது. உலகளாவிய குழப்பம் முகுந்தனின் சிறிய மூளைக்குகள் புகுந்து வாட்டியது.

இதோ மனதில் குழப்பத்தை நீக்க தாயகம் நோக்கி செல்கிறார். தாய்நாட்டில் வீட்டுக்கு வந்து சேர்ந்து முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாக கழிந்தன..

மூன்றாம் நாள் மதிய உணவிற்கு பிறகு தாயுடன் சாவகாசமாக பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தன் சந்தேகத்தைக் கேட்டார்.

‘’அம்மா.. நான் பிறப்பதற்காக ஏதாவது விசேஷ வேண்டுதல்கள் செய்தீர்களா?’’ –முகுந்தன் கேட்க, ‘’அப்படியெல்லாம் எதுவும் இல்லையே”” என்று வியந்தார் அம்மா.

’’நன்றாக யோசித்து சொல்லுங்கள் அம்மா.. அட்லீஸ்ட், ஏதாவது வித்தியாசமான சம்பவம் ஏதாவது நடந்ததா?’’ முகுந்தன் கேட்க, யோசனையுடன் அம்மா சொல்லத் தொடங்கினாள்.

’’ஆமாம் முகுந்தா.. நீ வயிற்றில் இருக்கும்போது ஒரு நாள் இரவு ஒரு கனவு கண்டேன். அதை உன் அப்பா தவிர யாரிடமும் சொன்னதில்லை’’ என்று சொல்ல ஆரம்பித்தாள் அம்மா.

’’அநத கனவில் வித்தியாசமான நான்கு உருவங்கள் என்னைத் தூக்கிச் சென்று ஒரு விசித்திரமான மருத்துவமனையில் என்னை ஏதோ செய்தது போன்று தோன்றியது. அதை உன் அப்பாவிடம் சொன்னபோது, இதுமாதிரி கனவுகள் வருவதெல்லாம் சாதாரணம். மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே என்றார். நானும் அதுபற்றி ஓரிரு நாட்களில் மறந்து விட்டேன். இப்போது நீ கேட்கும்போது சொல்லத் தோன்றியது’’ என்றாள் அம்மா.

முகுந்தன் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். ஆஸ்திரேலியாவில் தன் டெஸ்ட் ரிசல்ட் வித்தியாசமாக வந்ததற்கான காரணம் தெரிந்து விட்டது!

ஆமாம் முகுந்தன் தனக்குத்தானே செய்து கொண்ட மரபணு சோதனையில் மனிதர்களுக்கு இல்லாத வித்தியாசமான மரபணு கட்டமைப்பு அவரது உடலில் இருந்தது!

தானே ஒரு டிசைனர் பேபிதான் என்று உணர்ந்தார் முகுந்தான்!
Comments

Ravindran says :

முகுந்தன் நம் உடன்பிறப்பு அரியுர் மன்னின் மனம் வேலூருக்கே வர மனதில் என்ன ஓட்டம் இருகின்றதா?

கே ஆர் எஸ் சம்பத் says :

ஒரு வித்தியாசமான கற்பனை. மாறுதலாக அதே சமயம் இண்ட்ரெஸ்ட்டிங்- ஆக இருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :