• GLITTERS | பளபள

தலைநிமிருமா தமிழ்நாடு..?


ராஜ்மோகன் சுப்ரமண்யன்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல விஷயங்கள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்ட 5 பேர் கொண்ட பொருளாதார நிபுணர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த 22-ம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

உண்மையில் தமிழகத்தின் தற்போதைய நிதி நிலமை என்ன? பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் என்னென்ன? விரிவாகப் பார்ப்போம்..

கடந்த வாரம் (ஜூன் 20) செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் விலை நிர்ணயிப்பதில் மத்திய அரசு செய்து வரும் கோளாறுகளை விளாசித் தள்ளினார். ஜிஎஸ்டி குளறுபடி, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசின் பாரபட்சம் என தொடர்ந்து பட்டியலிட்டார். அந்தவகையில் தமிழ்நாட்டின் கடன் சுமை தற்போது 5.5 லட்சத்திற்கும் மேல் என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதுகுறித்து வெள்ளையறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ! தமிழ்நாட்டின் நிதிநிலைமை மிக மோசமாகதான் இருக்கிறது.

இத்தனை பெரிய நிதி சுமையுடன்தான் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. இதன் மூலம் கடன் சுமை சுமார் 8000 கோடி அதிகரிக்கலாம். தொடர்ந்து 14 ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்பட்டது இதன் மூலம் கடன் தொகை ரூ.2000 கொடி வரை அதிகரிக்கலாம். இது தவிர பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பால்விலை குறைப்பு என்ற அறிவிப்புகள் மூலம் மாநில வருவாயில் துண்டு விழுந்து கொண்டிருக்கிறது. இப்படி நலத்திட்டங்கள் என பெயரில் ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களில் செயல்படுத்திய திட்டங்கள் மூலம் கூடுதலாக ரூ.10000 கோடிக்கும் மேல் கடன் சுமை ஏறிவிட்டது.

இது தவிர தேர்தலின் போது பல கவர்ச்சிகரமான திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது திமுக.

கேஸ் விலையில் மாதம் ரூ.100 குறைப்படும்,

குடும்ப பெண்களுக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1000,

பெட்ரோல் மற்றும் டீசலில் விலைக் குறைப்பு

இப்படி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் தேவைப்படும். ஏற்கனவே ஐந்தரை லட்சம் கோடிக்குமேல் கடனில் உள்ளது மாநிலம். இந்த கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அடுத்து மாநிலத்தின் நிர்வாகத்தை நடத்த பொருள் ஈட்ட வேண்டும்.

தற்போது வரும் வருவாய் வட்டி கட்டவும் நிர்வாகத்தை நடத்தவும் பற்றாக்குறை நிலவும் வகையில் உள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். இந்த நிலையில் மேற்கண்ட திட்டங்களை எல்லாம் செயல்படுத்த ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தேவைப்படும். வருவாய்க்கு வாய்ப்பில்லாத இந்த செலவுகள் மூலம் அடுத்த ஐந்து வருடத்தில் தமிழ்நாட்டின் கடன் சுமை பல லட்சங்களை தாண்டக் கூடும். இது தோராய கணக்குதான்.

இன்றைய தேதிக்கு தமிழ்நாடு அரசுக்கு மூன்று சவால்கள் இருக்கின்றன.

முதல் சவால் - சரிந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலையை தூக்கி நிறுத்த வேண்டும். அதாவது ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமான கடன் சுமை மேலும் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும்.

அடுத்து - ஒருபுறம் கடன் அடைக்கவும் இன்னொருபுறம் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் புதிய வருவாய் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மூன்றாவது - தேர்தலில் அறிவித்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் எதிர்கட்சிகள், சமூக ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இத்தனை சவால்களை சமாளிக்க ஒற்றை ஆளாக முன் நிறுத்தப்படுகிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சரியான முறையில் செலுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அவரின் தேர்தல் அறிக்கையில் 500-க்கும் அதிமான திட்டங்கள் இருந்தன. அந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனில் தங்குதடையின்றி பொருள் வளம் பாயவேண்டும். அது மாநிலங்களில் இருந்து ஈட்டுவதில் மட்டும் முடியாது. மத்திய அரசின் உதவி வேண்டும். வெளிநாட்டின் முதலீடுகள் வேண்டும். வருவாயையும் செலவும் சரியான முறையில் மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப சம விகிதத்தில் போய் சேர வேண்டும். இதற்காக முதல் கட்டமாக பல துரித நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே நிதியமைச்சராக நிதி மேலாண்மையில் திறன்மிக்க பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நியமித்தது அவரின் பலம். எனினும் பிடிஆர் பேசும் விஷயங்கள் சர்ச்சையாக மாறுவது கொஞ்சம் பின்னடைவு என்றாலும் குறைத்து பேசும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.

கடந்த 17-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டில்லியில் பிரமதர் நரேந்திர மோதியை சந்தித்து தமிழ்நாட்டிற்கு என்ன தேவை என்பதை தெளிவாக அறிவுறுத்தி வந்திருக்கிறார். இதில் தமிழ்நாட்டுக்கு இடர்பாடு தரும் திட்டங்களை கடுமையாக மறுத்து பதிவு செய்துவிட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை ஆராய தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் டாக்டர் ஜெயரஞ்சன் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைத்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிக்காட்ட ஐந்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக கடந்த 22-ம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த 5 பேர் கொண்ட பொருளாதார நிபுணர் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டபோலோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமண்யன், ராஞ்சி பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜீன் டிரேஸ் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் பேராசிரியர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் ஆவர்.

இந்த ஐந்து பேரும் உலக அளவில் புகழ் பெற்றவர்கள். பொருளாதாரத்தில் வெவ்வேறு கோணங்களில் ஆராய்ச்சிகள் செய்து அதன் மூலம் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் செய்ய பரிந்துரை செய்தவர்கள். இவர்களால் தமிழ்நாட்டிற்கு என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது ? தமிழ்நாட்டின் வளர்ச்சிப் போக்கு எப்படி இருக்கும் ? இவர்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டியவை என்ன ? செய்ய கூடாதவை என்ன ? இவற்றை பற்றி அடுத்தடுத்து இரண்டு பகுதிகளில் பார்ப்போம்

(தொடரும்)

Comments

T. Rathineswamy says :

விறுசிறுப்பான அலசல். அடுத்தடுத்த கட்டுரைகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். - லதானந்த்

Rahav says :

Very effective and essential

Sujatha Venkatakrishnan says :

Very good analysis.

Padmini says :

Let us wait and see

கேஆர்எஸ் சம்பத் says :

அமைக்கப்பட்ட குழு திறமை வாய்ந்தவர்கள். நிச்சயமாக தமிழகம் தலை நிமிரும். சந்தேகமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :