• தீபம் - ஆன்மீகம்

லிங்கத்தின் மீது கால் பதித்து பூஜிக்கும் ஹம்பி சிவன் கோயில்!


- பா.கண்ணன், புதுதில்லி

கர்நாடக மாநிலம், பெல்லாரி ஜில்லாவின் ஹாஸ்பேட் நகரிலி ருந்து 13 கி.மீ. தொலைவில், துங்கபத்திரை நதிக்கரையில் கட்டடக் கலையிலும், சிற்பக்கலையிலும் புகழ் பெற்று விளங்கு கின்றன உலகப் புகழ் பெற்ற ஹம்பி திருக்கோயில்கள்.

விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய ஹம்பி தற்போது சிதிலமடைந்த நிலையில் தொல்பொருள் துறை பராமரிப்பின் கீழ் உள்ளது. இங்குள்ள மூன்று அல்லது நான்கு முக்கியமான ஆலயங்களில் மட்டுமே நித்திய பூஜைகள் நடந் தேறுகின்றன. அதில் ஒன்றுதான் ஹேமகூடம் மலைத்தொடரின் தென்பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி லக்ஷ்மிநரசிம்மர் கோயிலுக்கு அருகே உள்ள பத்வி லிங்க ஆலயம்.

15ஆம் நூற்றாண்டில் இங்கு வசித்த ஓர் ஏழை வேளாளப் பெண் (பத்வி என்றால் கன்னட மொழியில் ஏழை அல்லது வறுமை. லிங்கம் = சிவரூபம்) இந்தச் சுயம்பு லிங்கத்தை ஆராதித்து வந்ததை அறிந்த விஜயநகர ராயர் வம்சத்து ஆனேகுந்திப் பாளையக்காரர் ஈசனுக்கு உறுதியான திருக்கற்றளி ஒன்றை அவளை முன்னிலைப்படுத்தி எடுப்பித்தார். அதற்கு, ‘வறிய வரைத் தடுத்தாட்கொள்ளும் இறைவன்’ எனப் பொருள்படும்படி, ‘பத்வி லிங்கம்’ எனப் பெயரிட்டார்.

சிறிது காலம் நடந்த தினப்படி பூஜைகள் பாமினி சுல்தான்களின் படையெடுப்பால் நின்றுபோயின. ஆலயக் கருவறை கோபுரம் சிதைக்கப்பட்டு வானம் பார்க்கும் ஈசனாக மாறிவிட்டார். கடந்த நாற்பது வருடங்களாகத்தான் மறுபடியும் பூஜைகள் முறையாக நடைபெற்று வருகின்றன. கற்றளியின் மத்தியில் பூமியில் பதிந்துள்ள பிரம்ம பாகம், அதன்மேல் ஆவுடையாருடன் கூடிய விஷ்ணு பாகம். மேலே ருத்ர பாகம் லிங்கத் திருமேனியாக ஒரு முழுமையான கருமை நிறக் கல்லினால் ஆன ஈசன் சுமார் பத்தடி உயரம் கொண்டு அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மத்தியில் கோடு வரிச் சித்திரமாக முக்கண்கள் செதுக்கப்பட்டுள் ளன. கருவறையின் அஸ்திவாரத்தில் பம்பா நதியின் நீரூற்று இருப்பதாகக் கருதப்படுவதால் குளம் போல் நீர் நிரம்பியே காணப்படுகிறது. அர்ச்சகரைத் தவிர வேறு எவரும் உள்ளே செல்ல அனுமதியில்லை.

1980ல் ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமிகள் விஜயம் செய்தபோது சேதமடையாமல் இருக்கும் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்வதைத் தொடரலாம். மேலும், புதிதாக சீர்திருத்தம் செய்வது முடியாதென்பதால் லிங்கத்தின் மீதேறி பூஜை செய்வதில் தவறேதுமில்லை என்றும் வழிகாட்டினார். அதற்கிணங்க, ஆனேகுந்தி ராஜ சந்ததியினர் ஹம்பி சத்திய நாராயணா ஆலயத்தில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணபட் என்பவரையே இக்கோயிலுக்கும் குருக்களாக நியமித்தனர்.

சிவமோகா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவின் கசரஹல்லி கிராமத்தைச் சேர்ந்த இவர் செய்தப் பாக்கியம்தான் எப்படிப் பட்டது! பரமாச்சார்யாரின் கருணைப் பார்வையில், பிரம்மா, விஷ்ணு மீது கால் வைத்து, ஆவுடையாரைப் பிடித்தவாறு ஈசனுக்கு குளத்து நீரைக் கொண்டு அபிஷேக ஆராதனையை தினமும் கடமைத் தவறாமல் நிறைவேற்றுவது அவர் செய்த பூர்வபுண்ணிய பலன் அல்லவோ! மிகவும் எளிமையாக வாழ்ந்த சிவபக்தர். ஆலயத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களிடம் அன்பாகப் பேசி பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு முதல் கோயிலுக்கு வந்துப் பூஜை செய்வதை நிறுத்திவிட்ட நிலையில், இரு மாதங்களுக்கு முன் சிவலோக பிராப்தி அடைந்தார். தற்போது அவரது மகன் அப்பணியைத் தொடர்கிறார்.

விரூபாட்சீஸ்வரர் ஆலயத் தலைமைக் குருக்கள் சிவபட் சிவாச்சார்யார் கூறுகையில், ’’குளத்து நீரில் ஏணியோ வேறு ஏதாவது பிடிமானமோ வைக்க முடியாது. லிங்கத் திருமேனி மீது கால் பதித்து பூஜை செய்வதை அவமதிப்பாகக் கருதாமல் செய்பவரின் முழு ஈடுபாட்டைப் போற்ற வேண்டியது அவசியம்" என்கிறார் சரிதானே.

Comments

Meenakshi says :

கொடுத்து வைத்தவர் புண்ணியாத்மாவான அமரர் கிருஷ்ண பட்! எவருக்கும் எளிதில் அடைய முடியாத அனுபவம். சுருக்கமான ஆலய வரலாறும், பெயர் விளக்கமும் அருமை.

Dorai says :

படிக்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் பெரியவாளின் அருட்கடாட்சம்! கட்டுரை தெளிந்த நீரோட்டம் போல் உள்ளது. இம்மாதிரியானக் கட்டுரைகளை அடிக்கடி வெளியிடுங்கள்.

R. நாராயணன்,மும்பை says :

கண்ணன் சார், உங்கள் கட்டுரையைப் படித்தேன். வெகு உத்தமம். நானும் இவ்விடம் போயிருக்கிறேன். படாவி லிங்கம் என்றே எல்லாரும் சொல்வது எவ்வளவு தவறு என்று இப்போது புரிந்தது! மகா புண்ணியம் பண்ணியவர் காலஞ்சென்ற கிருஷ்ண பட்!

MONAGUR NAGARAJAN RAVIKUMAR says :

Amazing history! unparalleled dedication by Krishna Bhatt! ! Exemplary commitment and devotion shown by Royal Family! All these have been passionately and sincerely brought out by the author Kannan.Linking of this ritual of stepping on Brahma and Vishnu to perform Rudra abishekam to Periavah is the icing on the cake ! Keep up.

Desikan Doraisamy says :

Very interesting history traced in s lucid style by Mr.Kannan. It is an amazing country with such historical background. Only when someone takes interest to unravel it commoners come to know about it.

RajiRadha says :

This priest died .sometime back . I have already written about this temple in gnana alayam RajiRadha

பா.கண்ணன்,புது தில்லி says :

ராஜிராதா அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். ஒரே விஷயம் பற்றியக் கட்டுரை இரு வேறு இதழ்களில் வெளியாக வாய்ப்பு இருக்கலாம்,அல்லவா? ஈயடித்தான் காப்பியாகத் தான் இருப்பது அப்பட்டத் தவறு. நானும் ஞான ஆலயத்துக்குக் கட்டுரை எழுதுபவன் தான். 2018-ல் ஹம்பி சென்று வந்த பின் அதைப் பற்றி நான்கு ஐந்து கட்டுரைகள் இரு இதழ்களிலும் எழுதியுள்ளேன். மேற்படி கோவில் ஈஸ்வரனை எல்லாரும் "படாவி லிங்கம்" என்றே சொல்லுகையில் "பத்வி" என்பதே சரியானச் சொல் எனக் குறிப்பிட்டிருக்கிறேன், அதையும் கவனியுங்கள். எனது கட்டுரைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த அன்பர்களுக்கு மிக்க நன்றி.

RajiRadha says :

Shri Pa . Kannan, i know you very well and your writing. I am not criticizing your article. I just wanted to inform that the Priest has died few months back.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :