• TRENDING | பர பர

10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் காலடித்தடம்: இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!





இங்கிலாந்தில் 10 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் காலடி தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இங்கிலாந்தில் உள்ள கென்ட் என்ற நகரத்தில் ஃபோல்க்ஸ்டோன் என்ற பகுதியில் மலைக் குன்றுகளிலும் கடற்கரையின் முன்புற பகுதிகளிலும் இந்த காலடித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்ததாவது:

இங்கிலாந்தில் முதல்முறையாக இப்பகுதியில் டைனோசர்களின் காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை மொத்தமாக அழிவதற்கு முன்பாக இறுதியாக இந்த பகுதிகளில் சுற்றி திரிந்திருக்கும் எனக் கருதப் படுகிறது. அவை ஒன்றோடு ஒன்று நெருங்கி நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த காலடித்தடங்கள் மூலம் 10 கோடி வருடங்களுக்கு முன்பாக கிரெட்டேசியஸ் கால இறுதி பகுதியில் இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் பல வகை டைனோசர்கள் இருந்திருப்பது தெரிகிறது. இதில் அசைவத்தை உண்ணக்கூடிய 3 விரல்கள் உடைய டைரன்னோசாரஸ் ரெக்ஸ், பறவைகளின் தோற்றமுடைய சைவ உண்ணிகள், ஆங்கைலோசார்கள் என்ற கவச ஆடை போல வடிவமுடைய டைனோசர்கள் என்று பலவகைப்பட்ட டைனோசார்கள் இருந்திருக்கக்கூடும்.

மேலும் யானை காலடித்தடம் போன்று ஒரு சில காலடித்தடங்கள் இருக்கிறது. அது ஆர்னித்தோபோடிக்னஸ் என்ற இனத்தை சேர்ந்ததாக இருக்கும் என்று அடையாளம் கண்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் இகுவானோடன்கள் என்ற வகை டைனோசரின் காலடி தடமும் கண்டுபிடிக்கப்பட்டது. இது 10 மீட்டர் உயரத்தில் இரண்டு அல்லது நான்கு கால்களால் நடக்கக்கூடியது.

-இவ்வாறு அந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார். இங்கிலாந்தின் ஒரே பகுதியில் இவ்வளவு வகை டைனோசர்களின் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :