• JUST IN | சுட சுட

யோகக்கலை இந்தியாவில் தோன்றவில்லை: நேபாள பிரதமர் சர்மா ஒலி!





இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களை தொடர்ந்து சொல்லிகொண்டே வருகிறார் நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி. இந்திய வரைபடத்தில் ஆரம்பித்து பல்வேறு விவகாரங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். ‘’ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை; அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்’’ என அறிவிப்பு செய்தார்.

அந்த வகையில் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில், யோகா இந்தியாவில் தோன்றவில்லை என்றும் அக்கலை முதன்முதலில் நேபாளத்தில்தான் தோன்றியது எனவும் கூறி மற்றுமொரு சர்ச்சையை சர்மா ஒலி கிளப்பியுள்ளார். மேலும் யோகக்கலை தோன்றியபோது, இந்தியா என்றொரு ஒன்றுபட்ட நாடே இருக்கவில்லை என்று அதிரடியாக அவர் பேசியதற்கு பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

யோகக்கலை முதன்முதலில் நேபாளத்தில்தான் உருவானது. அது தோன்றியபோது இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல பகுதிகளாக பிரிந்திருந்தது. அப்படியானால் நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதற்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று விட்டார். நமது நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்க தவறிவிட்டோம்.

-இவ்வாறு சர்மா ஒலி பேசினார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :