• தீபம் - ஆன்மீகம்

மன்னிப்பதே மனித குணம்!


- ராஜி ராதா

வாழ்க்கையில் மன்னிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. மன்னிப்பதே மனித குலத்தின் மிகப் பெரிய மாண்பு. அதனை நமது புராண கதாபாத்திரங்களும் நயம்பட செய்துக்காட்டி உள்ளனர்.

ஸ்ரீராமன் யுத்தத்தில் ராவணனை வெற்றி கொண்ட செய்தியை சீதையிடம் கூறுகிறான் அனுமன். அப்போது சீதை, “மிகவும் நல்லது. ஆனால், ராட்சசர்கள், ராட்சசிகளை ஒன்றும் செய்ய வேண்டாம். விட்டு விடச் சொல்லுங்கள்” என்கிறார்.

அதைக்கேட்ட அனுமன், “அது எப்படி? சிறையில் இருந்தபோது உங்களை ராட்சசர்களும் ராட்சசிகளும் நிச்சயமாய் பாடாய்படுத்தி இருப்பர். இந்த சூழலில்...” என இழுத்தான்.

உடனே சீதை, அனுமனுக்கு ஒரு கதையைக் கூறுகிறாள். “ஒரு நாள் காட்டில் புலி ஒன்று, வேடனைத் துரத்தியது. வேறு வழி தெரியாத வேடன் அடர்ந்து உயரமாய் வளர்ந்திருந்த மரம் ஒன்றின் மீது ஏறி தப்புகிறான்.

ஏறிய பிறகுதான், உச்சியில் ஒரு கரடி இருப்பதைப் பார்க்கிறான். வேடன் மரத்தில் ஏறியதைப் பார்த்த புலி, அங்கே கரடியையும் பார்த்துவிட்டது. உடனே அது கரடியிடம், ‘கரடியே... நாமெல்லாம் இந்தக் காட்டின் சொந்தக்காரர்கள். நமக்கெல்லாம் பொது எதிரி வேடன்தான். அதனால் அவனைப் பிடித்து கீழே தள்ளிவிடு’ என்றது.

அதற்குக் கரடி, ‘அவன் என்னிடம் அடைக்கலம் கேட்டு வந்துள்ளான். இந்தச் சூழலில் அவனை கீழே தள்ளிவிட்டு, உனக்கு இரையாக்குவது சரியாக இருக்காது. அதனால் நீ கூறியதை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன்’ எனக் கூறிவிட்டு, புலியின் பதிலுக்குக் காத்திராமல் தூங்க ஆரம்பித்தது.

அடுத்து, புலி வேடனிடம் பேசியது. ‘தூங்கும் கரடியை நீ கீழே தள்ளிவிட்டால், உனக்கு நான் பாதுகாப்பு கொடுத்து காப்பேன்’ என்றது.

வேடன் யோசித்தான்... ‘நாம் புலியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அதனைத்தான் செய்ய வேண்டும்’ என முடிவு செய்து, மரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கரடியை கீழே தள்ளிவிட்டான்.

கீழே தள்ளப்பட்டாலும், மரம் அடர்த்தியாக கிளை பரப்பி இருந்ததால் விழித்துக்கொண்ட கரடி, ஒரு கிளையை கெட்டியாகப் பற்றிக்கொண்டு தப்பி விட்டது.

இப்பவும், புலி மீண்டும் கரடியிடம் பேசியது... ‘இதோ பார்... நீ செய்த உதவியை மறந்து, வேடன் உன்னைக் கீழே தள்ளிவிட்டான். இருந்தும் நீ பிழைத்துக்கொண்டாய். இப்போதாவது வேடனை நீ கீழே தள்ளிவிடு’ என்றது.

அதற்குக் கரடி, ‘மனிதர்களின் இயல்பு தப்பு செய்வதுதான். அதைத்தான் அவன் செய்தான். அவன் தப்பு செய்தான் என்பதற்காக நானும் அதையே செய்ய மாட்டேன். சிறியவர்கள் செய்யும் குற்றங்களை பெரியவர்கள் மன்னித்து மறந்து விடுவர். ஆகவே, இப்பவும் நான் வேடனை மன்னித்துவிட்டேன். அதனால், அவனை கீழே தள்ளி விட மாட்டேன்’ எனக் கூறி விட்டது கரடி.

ஆகவே, மனிதர்களே சமயத்தில் தவறிழைக்கும் போது, ராட்சசர்கள் தவறு செய்வதில் ஆச்சரியமில்லை. கரடி போல் பெருந்தன்மையாக நடந்து, அவர்களை துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம். மன்னிப்பதே மனிதர்களின் பெரிய குணம்” எனக் கூறி முடித்தாள் சீதை. அதைக்கேட்டு வியந்து நின்றான் அனுமன்.

Comments

dil191981@yahoo.co.in says :

Very Good Article. Understood the importance of forgiving the people

selvaganapthy says :

Very Good Article. Understood the importance of forgiving the people

selvaganapthy says :

Very Good Article. Understood the importance of forgiving the people for mistakes

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :