• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

51. என்ன சேதி?


- அமரர் கல்கி

51

என்ன சேதி?

மாணவர் யுத்தம்

நமது மார்ச் 4 இதழில் வெளியாகியிருந்த மாணாக்கரின் கடிதம் பற்றியும், அதற்கு நாம் எழுதியிருந்த பதிலைப் பற்றியும் பல கடிதங்கள் நமக்கு வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் வெளியிடுவதாயிருந்தால், ‘கல்கி’ பத்திரிகையை மாணாக்கரின் யுத்த அரங்கமாக மாற்றிவிட வேண்டியதாகும். மாணாக்கர்கள் தங்களுக்குள் அநாவசியமான விரோத பாவத்தையும் கட்சி வைஷம்யத்தையும் ஒழித்து ஒற்றுமையாகத் தேச நன்மைக்கான காரியங்களில் ஈடுபட வேண்டுமென்பதே நமது நோக்கமாதலால், காரசாரமான மேற்படி கடிதங்களை வெளியிடாமல் விடுகிறோம்.

அதோடு, மாணாக்கர் இயக்கம் சம்பந்தமாக மகாத்மா காந்தியின் விருப்பம் இன்னதென்று சமீபத்தில் ஆசிரியர் அகர்வால் வெளியிட்டிருப்பதையும் படித்துச் சிந்திக்கும்படி இருதரப்பு மாணாக்கர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

யுத்த காரணம்

உண்மையில் இந்த மாணவர் யுத்தத்தின் காரணம் என்ன, இதன் இலட்சியங்கள் யாவை, இரு தரப்பிலும் அணி வகுத்து நிற்பவர்களின் யோக்யதாம்சங்கள் என்ன என்னும் விஷயங்கள் நமது மற்ற நேயர்களில் அநேகருக்கு இன்னும் பிடிபடாமலே இருக்கலாம். நமக்குக்கூட இவை வெகுகாலம் வரை குழப்பம் விளைவித்து வந்தன. “மாணவர் சம்மேளனம் எது? மாணவர் காங்கிரஸ் எது? எது எப்போது ஆரம்பமாயிற்று? இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன? எது எந்தக் கட்சியை அல்லது எந்தக் கொள்கையை அவலம்பிப்பது?” என்பது சந்தேகத்துக்கிடமாகவேயிருந்தது. கடைசியாக, மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதுபோல் பின்வரும் விஷயங்கள் தெளிவாயின:-

(1) மாணவர் சம்மேளனம் என்பது ஒரு ஸ்தாபனம்; மாணவர் காங்கிரஸ் என்பது இன்னொரு ஸ்தாபனம்.

(2) மாணவர் சம்மேளனம் 1936-ம் ஆண்டில் ஆரம்பமாகித் தொடர்ந்து நடந்து வருவது; மாணவர் காங்கிரஸ் சென்ற 1944-ம் ஆண்டில் புதிதாக ஆரம்பமானது.

(3) மாணவர் சம்மேளனம் இந்தியப் பொது உடைமைக் கட்சிக்காரர்களின் ஆதிக்யத்தில் நடந்து வருவது; மாணவர் காங்கிரஸ், தேசீய காங்கிரஸ் மகா சபையின் கொள்கைகளைக் கலப்பின்றி ஸ்வச்சமாக அவலம்பிக்கிறவர்களால் ஸ்தாபித்து நடத்தப்படுவது.

சரி; மேற்படி இரு ஸ்தாபனங்களுக்குள்ளும் யுத்தத்துக்குக் காரணம் என்ன?” என்று கேட்டால், இப்போதெல்லாம் புதிதாக ஏற்பட்டு வரும் காங்கிரஸ் சங்கங்களிலிருந்து பொது உடைமைக்காரர்களை விலக்குவதற்கு என்ன காரணங்கள் உண்டோ, ஏறக்குறைய அவையேதான். அதாவது, சம்மேளனத்தைச்

சார்ந்த மாணவர்கள் தேசீய காங்கிரஸின் ஆகஸ்டு தீர்மானத்தை எதிர்த்தது, இந்த யுத்தத்தை (அதாவது உலக யுத்தத்தை) ‘ஜனங்களின் யுத்தம்’ என்று சொன்னது, ருஷிய ஸோவியத் ஆட்சி முறையைப் பாராட்டுவது முதலியவைதான்.

‘ஜனங்களின் யுத்தம்’

பொது உடைமைக் கட்சியார் இந்த யுத்தத்தை ‘ஜனங்களின் யுத்தம்’ என்று சொல்லி அதற்காகத் தீவிரப் பிரசாரம் செய்தது ஒரு வேண்டாத காரியம், அநாவசியமான ஆர்ப்பாட்டம் என்று நாம் கருதுகிறோம். நேரிடையாக யுத்தத்தில் ஈடுபட்ட ருஷியாவில் மேற்படி பிரசாரம் அவசியமயிருந்தது. இந்தியாவுக்கும் நேரில் யுத்தம் வந்திருந்தால், அப்போது ‘ஜனங்களின் யுத்தம்’ என்னும் பிரசாரத்துக்குப் பலம் இருந்திருக்கும். அவ்விதமின்றி, யுத்தம் வெளியிலேயே நின்றபோது, இந்தியாவின் ”தந்திரத்துக்கு பிரிட்டிஷார் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலைமையில், ‘ஜனங்களின் யுத்தம்’ என்ற கோஷம் ஜனங்களின் காதில் ஏறுவது கடினம்தான். மற்றப்படி பொது உடைமைக் கட்சியார் எத்தனையோ அரிய தொண்டுகள்

தேசத்துக்கும் தேச மக்களுக்கும் செய்திருந்தும், மேற்படி வேண்டாத பிரசாரத்தினால் பலருடைய வீண் வெறுப்புக்கு இடமாக நேர்ந்தது. இதை இந்தியப் பொது உடைமைக் கட்சியின் துரதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும். மேற்படி பிரசாரத்தினால்

யுத்தத்துக்கு எவ்வித லாப நஷ்டமும் உண்டாகவில்லை. இன்னும் சர்க்காருக்கோ ஜனங்களுக்கோ எந்தவித நன்மை தீமையும் ஏற்பட்டு விடவில்லை. மொத்தத்தில், வழியோடு போகிற தொல்லையை விலை கொடுத்து வாங்கிக்கொண்ட சமாசாரம்.

ஆனால், இந்த யோசனைக் குறைவுக்காக கம்யூனிஸ்டுகளை இவ்வளவு துவேஷிக்க வேண்டுமா, பழி வாங்க முயல வேண்டுமா, இங்கிலீஷ்காரர் களிடம் காட்ட முடியாத கோபத்தை இவர்கள் மேல் திருப்ப வேண்டுமா என்றால், “கூடவே கூடாது’ என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அது அநியாயம் என்பது மட்டுமல்லாமல், தேசத்தில் சுயநலமற்ற உண்மைத் தொண்டர்களுக்குள்ளே பிளவை உண்டு பண்ணி, தேச விடுதலைக்கு மற்றொரு மூட்டுக்கட்டை போடுவதாகும்.

சுயநல யுத்தம்

இந்த யுத்தத்தின் தலையில் ஒரு பெயரைச் சூட்டிவிட்டு, அதற்காக பிறகு நமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருப்பது போன்ற அபத்தமான காரியம் வேறொன்றுமில்லை. இதற்கு ‘ஏகாதிபத்திய யுத்தம்’ என்று பட்டம் சூட்டியதன் காரணமாகத் தேசீய காங்கிரஸ் பின்னால் எத்தனையோ முரண்பாடுகளுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. “இராஜ்யத்தை எங்களிடம் கொடுத்தால் ஜப்பானுடன் முழு பலத்துடன் சண்டையிடுவோம்” என்றும், தேசீய சர்க்கார் ஏற்படுத்தினால் யுத்த முயற்சி பன்மடங்கு தீவிரமாக நடக்கும்” என்றும் காங்கிரஸ் தலைவர்கள் இடைவிடாது சொல்லி வந்திருக்கிறார்கள். இராஜ்யம் நம்முடைய கையில் வந்துவிட்டால் மட்டும் ஏகாதிபத்திய யுத்தம் அந்த க்ஷணமே பொது ஜனங்களின் யுத்தமாக எப்படி மாறிவிடும்?

உண்மையில், இந்த யுத்தத்தை சுயநல யுத்தம் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாயிருக்கும். யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லாத் தேசங்களும்( சென்ற வாரத்தில் சேர்ந்த தருக்கி உள்பட) ஏதோ ஒரு வகையில் சொந்த நன்மையை முன்னிட்டே சார்ந்திருக்கின்றன. இந்தியாவில் நாமும் நமது நன்மை அல்லது தீமையை மட்டும் முன்னிட்டு நமது யுத்தக் கொள்கையைத் தீர்மானித்திருந்தோமானால், எவ்வளவோ வீண் குழப்பங்களும் தொல்லைகளும் இல்லாமல் போயிருக்கும்.

நமது விண்ணப்பம்

ஆகக்கூடி, கடைசியாக, மாணக்கர்களை (இரு தரப்பாரையும்) நாம் வேண்டிக் கொள்வதென்னவென்றால், “ஜெர்மன் - ஜப்பான் யுத்தங்கள் எக்கேடாவது கெடட்டும்; நீங்கள் உங்களுடைய யுத்தத்தைத் தயவு செய்து நிறுத்துங்கள்!” என்பதுதான். அந்தப் பெரிய யுத்தமானது நம்முடைய ஆதரவினாலோ, எதிர்ப்பினாலோ பாதிக்கப்படக்கூடிய காலம் மலையேறிவிட்டது. உலகமெல்லாம் யுத்த நிறுத்தத்தை எதிர் நோக்கும் காலம் வந்துவிட்டது. யுத்தம் நின்றதும் உலகத்தின் நிலைமை தலைகீழாக மாறுமே, அந்தச் சந்தர்ப்பத்தில் தத்தம் நன்மைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று எல்லாத் தேசங்களும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் நாம் மட்டும் பழைய சண்டைகளைப் புதுப்பித்து நடத்திக் கொண்டிருப்பது எப்பேர்ப்பட்ட பைத்தியக்காரத்தனம்? எனவே, ஒன்றுபட்டு ஒற்றுமையாகத் தேசப் பணியில் ஈடுபடுங்கள். “இல்லை; இரண்டு ஸ்தாபனங்கள் தனித்தனியாக நடக்கத்தான் வேண்டும்” என்றால், அப்படியே நடத்துங்கள். ஆனால், ஒருவரையொருவர் திட்டுவதையும் தாக்குவதையுமாவது நிறுத்தி விடுங்கள் என்று கேட்டுக் கொள்கி@றாம். தேசத்துக்கு மாணக்கர்கள் செய்யக்கூடிய பெரிய சேவை இதுவேயாகும். மகாத்மாவின் யோசனைக்கிணங்க, ஆசிரியர் அகர்வால் கேட்டுக் கொள்வதும் இதுவேதான்.

(18.3.1945 கல்கி தலையங்கத்திலிருந்து...)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :