• JUST IN | சுட சுட

தி ஃபேமிலி மேன் தொடர்: 3-ம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி?





சமீபத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடர்! இந்த சீரியலின் 1-ம் பாகம் 2019-ம் ஆண்டு வெளியான நிலையில், அண்மையில் அதன் 2-ம் பாகம் வெளியாகி வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்ரது.

கடந்த 4ம் தேதி தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-ம் பாகம் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானது. இதன் முன்னோட்டம் வெளியானபோதே ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் அவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்திருப்பதாகவும் எதிர்ப்பை சந்தித்தது. மேலும், இரண்டாம் பாகத்தில் நடித்த சமந்தா உள்ளிட்டோருக்கு எதிரான சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இதனால் வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் இந்த தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்க, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதினார். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் உருவானதால், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான ‘தி பேமிலி மேன்’ தொடரின் 2-ம் பாகம், கடும் எதிர்ப்பு காரணமாக ஹிந்தியில் மட்டுமே வெளியானது.

இந்த நிலையில்தான், ‘தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடரின் 3-ம் பாகத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 2-ம் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், இயக்குனர் ராஜ், டிகே ஆகியோர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசியதாக மனோஜ் பாஜ்பாய் தனியார் நிறுவனத்துக்கு பேட்டியில் அறிவித்திருந்தார். அப்படி விஜய் சேதுபதி நடிப்பது உறுதியானால் அவரும் சர்ச்சையில் சிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்து, பின்னர் பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த விலகுவதாக விஜய் சேதுபதி தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அந்த வகையில் விஜய் சேதுபதி ‘தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடரின் 3-ம் பாகத்தில் நடித்தால், அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று சொல்லப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :