• JUST IN | சுட சுட

திமுக தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!





தமிழகத்தில் திமுக அரசு புதிதாக பொறுப்பேற்று ஒரு மாதம் முடிந்த நிலையில் இன்று தமிழக சட்டமன்றக் கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இக்கூட்டத்தைத் துவக்கி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அந்த உரையில் முக்கிய அம்சங்கள் எதுவும் இல்லை என்றும், அவை ஏமாற்றமளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

திமுக தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியது. அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது திமுக அரசு கமிட்டி அமைத்துள்ளது.

தற்போது நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை சரியாக மேற்கொள்ளப் படுவதில்லை. மேலும் திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளான விவசாயிகள் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. மேலும் 5 சவரன் வரை நகைக் கடன் ரத்து என்னும் திமுகவின் வாக்குறுதி தொடர்பான அறிவிப்பும் இன்றைய ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்பது குறித்தோ, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழக்குவதாக திமுக கொடுத்த வாக்குறுதி பற்றியோ இன்று ஆளுநரின் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் ஆளுநரின் உரையில் சிறப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. அவரது உரை ஏமாற்றம் அளிக்கிறது.

-இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :