• GLITTERS | பளபள

ஆனந்த வாழ்வுக்கு 5 விஷயங்கள்!


- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இன்று சர்வதேச யோகா தினம் (ஜூன் 21) என்பதையொட்டி சிறப்புக் கட்டுரை:

உலகில் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்த்தாலும் வாங்க முடியாத விஷயம் ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும்தான். துக்கம் அல்லது கவலை எப்படி நமது உடலில் உள்ள உயிராற்றலை விரயம் செய்யுமோ, அதே அளவிற்கு மகிழ்ச்சி என்று நாம் தரும் அழுத்தமும் உயிர்ச்சக்தியை விரயமாக்கும். எனவே, எப்பொழுதும் மனதை சமநிலையில் வைத்திருப்பதுதான் சிறப்பான, முழுமையான வாழ்க்கை.

இதற்கு மூன்று முக்கியமான விஷயங்கள் தேவை. ஒன்று உடல் நலன், இரண்டு மனநலன் மூன்றாவது உயிர்ச்சக்தியை நம் உடலில் தக்கவைத்துக் கொள்வது! இதுகுறித்து யோகிராஜ வேதாத்திரி மகரிஷி முழுமையான வாழ்க்கைக்கு வழிகாட்டும் எளிமையான ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.. 1.உடற்பயிற்சி, 2.தியானம், 3.காயகல்ப யோகம், 4.அகத்தாய்வு.. இவற்றுuடன் 5-வதாக மன உறுத. சரி..! ஒவ்வொன்றின் முக்கியத்து வத்தைப் பார்ப்போம்.

உடற்பயிற்சி : உடலின் அடிப்படையாக இருப்பது இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் மற்றும் உயிரோட்டம் என்கிற நான்கு ஓட்டங்கள்! இவற்றின் சமநிலை தவறினால், உடலில் பிரச்சனைகள் தோன்றும். எனவே, தினந்தோறும் ஒரு முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி தேவை. அது சிறிய அளவில் யோகாசனங்களாக இருக்கலாம். அல்லது உடலுக்கு ஊக்கம் தரும் வகையில் நீங்களே வடிவமைத்து கொண்ட உடற்பயிற்சி. இது எதுவும் முடியவில்லை எனில் ஒரு முப்பது நிமிட நடையும் பத்து நிமிட மூச்சுப் பயிற்சியும் போதும். உங்கள் உடலை எப்பொழுதும் அப்பொழுது மலர்ந்த பூவை போன்று புத்தம் புதிதாக வைத்திருக்கும். யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி தனது மனவளக்கலை பயிற்சியில் எளிய முறை உடற்பயிற்சிகளை அருளி உள்ளார்கள். இவற்றை எட்டு வயது முதல் எண்பது வயது வரை எல்லோரும் உடலை வருத்தாமல் செய்ய முடியும். இவற்றில் கை பயிற்சி, கால் பயிற்சி, கபாலபதி, மகராசனம், கண் பயிற்சி, தசை நரம்பு நார் பயிற்சி, அகுபிரஷர், உடல் தளர்த்தல், மூச்சுப் பயிற்சி என ஒன்பது பயிற்சிகள். இவற்றை அதிகபட்சம் 45 நிமிடங்களில் செய்து முடிக்க முடியும். இது நோயாற்ற வாழ்க்கையும் எப்பொழுதும் ஒரு ஆனந்தமான அதிர்வலையையும் தரக்கூடியது. அருகில் உள்ள மனவளக் கலை மையத்திற்குச் சென்றால் கட்டணமின்றி இந்தப் பயிற்சிகளை கற்றுக் கொள்ள முடியும்.

தியானம் : தியானம் மிக எளிமையாகவும் அதே நேரம் வலிமையாகவும் ஒரு தியான முறையை அருளியுள்ளார் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. குண்டலினி யோகத்தை எளிமைப்படுத்தி, “எளிய முறை குண்டலினி யோகம்” என்று நவீன காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்துள்ளார். வழக்கமாக குண்டலினி சக்தியை எழுப்ப ஆண்டுக்கணக்கில் பயிற்சி தேவை. ஆனால், இந்த முறையின் மூலம் ஒரு பயிற்சி பெற்ற குண்டலினி ஆசிரியர் வெறும் இருபது நிமிடங்களில் உங்களுக்குள் குண்டலினி எழுச்சியைச் செய்வார். சரி! தியானம் என்ன செய்கிறது? மிக எளிமை. நமது மன அலை சூழலை சமநிலையில் வைக்கும்.

அறிவியல்பூர்வமாக ஒரு சின்ன விளக்கத்தைப் பார்ப்போம். நமது மனதை ஈஈஜி எனும் கருவி கொண்டு அளக்க முடியும். அப்படி அளந்தால் நான்கு வகை மன அலைசூழலைக் கண்டுபிடிக்கலாம்.

ஆல்பா – 8 முதல் 13 CPS

பீட்டா – 13 CPS மேல்

தீட்டா – 8-4 CPS

டெல்டா – 4 – 0 CPS

சிபிஎஸ் என்பது Cycle Per Second. அதாவது, வினாடிக்கு எவ்வளவு வேகத்தில் இந்த மன அலைச்சூழல் செயல்படுகிறது என்பதைத்தான் இப்படி அளந்து தெரிந்துகொள்ள முடியும்.

நமது மனது 13-க்கு மேல், அதாவது பீட்டா அளவில் சுழலும்போதுதான் சமநிலை தவறுகிறது. பேராசை, கடுஞ்சினம், கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, வஞ்சம், உயர்வு தாழ்வு மனப்பான்மை எல்லாம் ஏற்படும். இந்த தியானம் செய்யும்போது அதனை 8 சிபிஎஸ்ஸுக்கு கீழே கொண்டு வந்து விடலாம். அந்த நிலையில் மனம் எப்பொழுதும் அமைதியாக, ஆனந்தமாக இருக்கும். புறத்தாக்குதல் எதுவும் மனதை பாதிக்காது. மாறாக, எப்பொழுதும் ஒரு குதூகலம் மனதில் தொடரும்.

காயகல்பப் பயிற்சி : யோகிராஜ் வேதாத்திரி மகரிஷியின் ஆகச் சிறந்த பயிற்சி இது! காயம் என்றால் உடல் என்கிறது சமஸ்கிருதம். கல்பம் என்பது அழியாத்தன்மை. உடலை அழியாத்தன்மையுடன் என்றும் இளமையுடன் வைத்திருக்கும் பயிற்சி இது. அதாவது நமது உடலில் உள்ள உயிர் சக்தியை அதிகரித்து நீண்ட ஆயுளைத் தரும்.

சரி! உயிர்சக்தி என்றால் என்ன? நமது கண்ணுக்குத் தெரியாத ஒரு நுணுக்கமான ஆற்றல் இது. உடல் இயக்கமும், மன இயக்கமும் சிறப்பாக செயல்படும்போது இந்த உயிர்சக்தி மிகவும் பலமாக இருக்கும். அது பிரபஞ்ச ஆற்றலுடன் பிணைப்பில் இருக்கும். இதன் மூலம் உடல் – உயிர்- மனம் இம்மூன்றும் ஒருவிதமான பரவச நிலையில் இருக்கும்.

நான்காவதாக, அகத்தாய்வு! உடலும், மனமும் செம்மையுற நமது எண்ணங்களை சீரமைக்க வேண்டும். முறையற்ற எண்ணங்கள் துன்பமும் தோல்வியையும் தரும். இந்த அகத்தாய்வு பயிற்சிகள் சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், ஆசை சீரமைத்தல் ஆகிய நற்பண்புகள் பெருக்கும். நமது மனதில் இருந்து பேராசை, கடுஞ்சினம், போன்றவற்ரை முற்றிலும் நீங்கும். மக்களுடன் நட்பு நலனும் சமூகத்தினுடன் வலிமையான இணக்கமும் ஏற்படும்.

இந்த நான்கு பயிற்சியையும் விடாமல் செய்யும் மனத்திண்மையே 5-வது பயிற்சி. மனிதர்களாகப் பிறந்த நமது நோக்கம் இந்த மண்ணில் வாழவேண்டிய வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து இறைத்தன்மையோடு கலப்பதே. அது வேறு யாருக்கும் இல்லாத வகையில் இந்திய மக்களுக்கு அதிகமான வாய்ப்புகளோடு இருக்கிறது. யோகிகளும் மகான்களும் உதித்த புனித மண் இது. உலகை அன்பால் ஒன்றிணைக்க உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ இந்த சர்வதேச யோகா தினத்தில் உறுதிமொழி ஏற்போம்.

இரண்டொழுக்கப் பண்பாடு : “நான் எனது வாழ்நாளிலே தெரிந்தோ தெரியாமலோ பிறிதொரு உயிருக்கு உடலாலோ மனதாலோ துன்பம் தர மாட்டேன்! துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.’’

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷியின் இந்த பண்பாடு இந்த உலகின் ஒவ்வொரு படைப்பும் சமமானதே என்ற புலனறிவை நமக்கு போதிக்கும்.

சங்கல்பம் : அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வேன் (மூன்று முறை சொல்லவும்.)

உடற்பயிற்சி, தியானம், காயகல்ப பயிற்சி, அகத்தாய்வு பயிற்சிகளுடன் இரண்டு ஒழுக்க பண்பாட்டையும், சங்கல்பத்தையும் காலை மற்றும் இரவு படுக்கச் செல்லும்முன்பு தினமும் சொல்லி வாருங்கள். வெற்றி உங்களை கொண்டாடத் தொடங்கும். அளவில்லா ஆனந்தம் என்றும் உங்களைக் காப்பாக சூழ்ந்து நின்று குதுகலிக்கச் செய்யும். வாழ்க வளமுடன்!

- ராஜ்மோகன்.

Comments

வி.கலைமதிசிவகுரு says :

எப்போதும் மனதை சமநிலையில் வைத்திருப்பது தான் முழுமையான வாழ்க்கை என்றும்,உலகின் ஒவ்வொரு படைப்பும் சமமானதே என்றும்,ஆனந்த வாழ்வுக்கு ஐந்து விஷயங்களை பற்றி மகரிஷி தெளிவாக கூறியிருப்பதை படிக்கும் போதே மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :