• JUST IN | சுட சுட

100 நாள் வேலைதிட்டம் மீண்டும் தொடக்கம்!





மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் பணி வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 மாதமாக 100 நாள் வேலை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஈரோடு மாவட்டத்தில் 224 கிராம ஊராட்சிகளில் தற்போது 100 நாள் வேலை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பவானிசாகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தண்டியூர் ஊராட்சியில் நேற்று 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உத்தண்டியூர் பகுதியில் உள்ள ஓடையை ஆழம் மற்றும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு சென்று கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவிக்கொண்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டபின் தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஓடையை அகலம் மற்றும் ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் 100 நாள் வேலை திட்ட பணிகளில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்கக் கூடாது என அரசு உத்தரவு உள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 2 மாதங்களுக்கு பின் ஈரோடு மாவட்டத்தில் தற்போது 100 நாள் வேலைத் திட்ட பணிகள் தொடங்கி உள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :