• தீபம் - ஆன்மீகம்

அருவமாக அருளும் அன்னை சந்திராவதி!


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 15 - அமிர்தம் சூர்யா

பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுனர் கோயிலில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கம் அதில் ஒன்று. அனைத்துக் கோயில்களிலும் குளித்து முடித்து சுத்தமாய் விரதம் இருந்து கடவுளை தரிசிப்பது பொது விதி. ஆனால், மனம் மட்டும் சுத்தமாய் இருந்தாலே போதும், இக்கோயில் மூலவர் ஜோதிர்லிங்கத்தின் சிரசைத் தொட்டு அனைவரும் வணங்கலாம். இதை, ‘தூளி தரிசனம்’ என்பர். தற்காலத்தில் இத்தலம், ‘ஸ்ரீசைலம்’ என வழங்கப்படுகிறது. இத்தலத்தின் புராதனப் பெயர் திருப்பருப்பதம்.

‘பருப்ப தப்பெயர்ச் சிவாதனம் பாலகன் பரமன்
இருப்ப வோர்வரை யாவனென் றருந்தவ மியற்றிப்
பொருப்ப தாகியே ஈசனை முடியின்மேல் புனைந்த
திருப்ப ருப்பதத் தற்புதம் யாவையும் தெரிந்தான்.’

என்று கந்த புராணம் இத்தலம் பற்றி உரைக்கிறது. திருஞான சம்பந்தர் பாடியருளிய பாசுரம் ஒன்றில்,

‘சுடுமணி உமிழ்நாகம் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி எழிலானை ஏறவன் எருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.’

என வரும் திருப்பருப்பதம் என்ற கோயிலும் ஸ்ரீசைலம்தான்.

இந்தக் கோயிலை முதன்முதலில் நிர்மாணித்து, சிவசேவை செய்து வைத்தவர் ஒரு ஆண் அல்ல, ஒரு பெண் சித்தர் என்பது பெரும்பாலானோர் அறியாதது. அவர் பெயர் சந்திராவதி அம்மையார். அதற்குபின் வந்த பல்வேறு மன்னர்கள் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு கோபுரம் எழுப்பி திருப்பணி செய்துள்ளனர். புகழ் வாய்ந்த இந்தக் கோயிலைப் பற்றி இரண்டு புனைவுகள் உண்டு. ஒன்று, இந்தக் கோயிலை நிர்மாணித்த பெண் சித்தர் சந்திராவதி அம்மையார் பற்றியது. இன்னொன்று ஒரு புராண நிகழ்வு.

மல்லிகா என்பது பார்வதி தேவியையும், அர்ஜுனா என்பது சிவபெருமானை யும் குறிக்கும் திருப்பெயர்கள் என்று சொல்வர். சிலாத முனிவர் தவம் செய்த தலமாதலின், இஃது ஸ்ரீசைலம் எனப்படுகிறது என்றும் சொல்வர். சிலாத முனிவர்தான் நந்தி தேவரின் தந்தை. நந்தி தேவருக்கு சிவபெருமான் வரம் அளித்த மலை என்றும் இது சொல்லப்படுகிறது.

‘இல்லையில்லை... சந்திராவதி அம்மையார் மல்லிகை பூக்களாலும் அர்ஜுனா பூக்களாலும் சிவபெருமானை வழிபட்டதால்தான் இது மல்லிகார்ஜுனர் கோயில் என ஆயிற்று’ என்று வாதிடுவோரும் உண்டு. ‘அர்ஜுன விருட்சம்’ என்பது மருத மரத்தைக் குறிக்கும். இந்தக் கோயிலின் தல விருட்சம் மருத மரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய ஆணாதிக்க உலகில் ஒரு பெண், ஆன்மிகவெளியில் கொண்டாடப்பட்டாலும் அதை அவ்வுலகம் விரும்புமா என்ன? காட்டு மலைக்குள் அழுந்திக் கிடக்கும் எரிமலைக் குழம்பு, என்றாவது ஒரு நாள் குமுறி வெடித்து வெளியே வந்திடும்தானே. அப்படித்தான் பெண் சித்தர் சந்திராவதி உருவாக்கிய இக்கோயிலுக்கான கதையும் என்பது எனது யூகம்.

இந்தக் கோயில் கல்வெட்டுகளில் சந்திராவதி அம்மையார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், சந்திராவதி அம்மையார் எப்படி இருப்பார் என்பதை யாரும் அறியார். இந்தப் பெண் சித்தரை நீங்கள் உங்கள் மனதில் அரூபமாகவே உணர வேண்டும். அவருக்கான உருவத்தை பக்தியின் மூலமே நீங்கள் உருவகப்படுத்தி தரிசிக்க வேண்டும். நீங்கள் இந்தக் கோயிலுக்குப் போகும்போது அரூபமாக சிவ பூஜை செய்யும் ஒரு பெண் துறவையை மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரையிலான காலம். மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் சந்திராவதி. அவள், தான் ஒரு இளவரசி என்ற எவ்வித பிரக்ஞையும் இன்றி, தனது பால்யத்துக்கான எந்த விளையாட்டும் இன்னபிற செயல்களும் இல்லாமல், எப்போதும் பூஜை அறையில் சிவபெருமானையே வழிபட்டு வந்தாள். எப்போது மன்னர் கேட்டாலும், ‘இளவரசி பூஜை அறையில் இருக்கிறார்’ என்பதே பதிலாக இருந்தது. அவளுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என நினைத்து பெற்றோர் அணுகியபோதும், அதை திட்டவட்டமாக சந்திராவதி மறுத்துவிட்டாள். “அப்பா, நான் சக மானுடர் போல தாம்பத்தியத்தில் மூழ்கி என்னை இப்பூவுலக வாழ்வுக்கு தாரை வார்க்க விரும்பவில்லை. நான் சிவனை தேடிக்கொண்டிருக்கிறேன். எப்படியும் அவர் அகப்பட்டு விடுவார். என்னை இந்த அற்ப வாழ்வுச் சிறையில் அடைத்து ஏளனம் செய்யாதீர்கள்” என்று சொல்லி விட்டார்.

தொடர்ந்து, சிவபெருமானை நோக்கியே தனது சிந்தனையையும் தேடலையும் தொடர்கிறார். ஊருக்குப் பக்கத்தில் இருந்த கதலிக் காட்டுக்குள் சென்று அங்கிருந்த பாறை ஒன்றின் மேல் அமர்ந்து தவம் செய்துகொண்டிருப்பார். மக்கள் அவரை இளவரசி சந்திராவதியாகப் பார்க்கவில்லை. தங்கள் துயர் தீர்க்க வந்த அன்னையாக, தவயோகினி யாகக் கொண்டாடினர். ‘அவருடைய திருப்பார்வை பட்டாலே பலருடைய வாழ்க்கை விமோசனம் பெறுகிறது’ என்ற செய்தி நாடு முழுக்கப் பரவுகிறது. சந்திராவதியின் தியானமும் யோகமும் மேலும் தீவிரமாகிறது.

ஒரு நாள் கதலிக் காட்டில் சந்திராவதி அம்மையார் தவம் செய்யச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கபிலைப் பசு அவர் முன்னால் சென்று, அவர் கண்ணெதிரே ஒரு வில்வ மரத்தின் கீழ் தனது மடிப் பாலைச் சொரிந்தது. அதைக் கண்டு வியந்துபோன அன்னை, அந்தப் பசுவை தொடர்ந்து கண்காணிக்க, தினமும் அவர் தவம் செய்யக் காட்டுக்குச் செல்லும் வேளையில் அந்தக் கபிலைப் பசுவும் அதே நேரத்தில், வில்வ மரத்தடியில் பால் சொரிந்தது. ‘அப்படி என்னதான் அந்த மரத்தடியில் உள்ளது?’ என அறிய எண்ணி தோண்டிப் பார்த்தபோது, அங்கே ஒரு சுயம்பு லிங்கம் தென்பட்டது. இறைவன் திருவருளால், ‘தான் ஏன் இப்பூவுலகில் பிறந்தோம்’ என்ற காரணத்தை அன்னை தெரிந்து கொண்டார். அந்தப் பூரிப்பில் சந்தோஷமாய் காடே அதிரும்படி கத்தி குதூகலித்தாராம்.

அதைத் தொடர்ந்து, அந்த லிங்கத்துக்கு கோயில் ஒன்றைக் கட்டி, மல்லிகை மலர்களாலும் அர்ஜுனா மலர்களாலும் ஆராதித்ததால் அந்தக் கோயில், ‘ஸ்ரீ மல்லிகார்ஜுனர் கோயில்’ எனப் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கோயில் கட்டும் திருப்பணி முடிவுற்றதும், சந்திராவதி அம்மையார் பூமிக்கு வந்த திருப்பணி முடிவுற்றதாய்க் கருதி சிவபெருமான் அவரை தன்னோடு ஐக்கியமாக்கிக் கொண்டார் என்பதே பெண் சித்தர் சந்திராவதி அம்மையார் பற்றி கூறப்படும் செய்தியாகும்.

‘தொலைந்தது தேடினேன். தேடியது கிடைத்தது’ என்பதுபோல், பால்யத்தில் இளமையைத் தொலைத்துவிட்டு சிவனைத் தேடினார். அது அவருக்கு அருகிலேயே கிடைத்ததும் அதை மக்கள் நலனுக்குக் காணிக்கையாக்கி விட்டு மீண்டும் சிவனோடு தொலைந்துபோனார்.

எது சிறந்த வாழ்வு... எது சரி... என்பதை யார் முடிவு செய்வது? ஒரு இடத்தில் சரியானதாகக் கருதப்படுவது, இன்னொரு இடத்தில் தவறாகக் கருதப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரனை கொன்றால் அது கொலை. அதற்குத் தீர்ப்பு மரண தண்டனை. யுத்தத்தில் எதிரிகளைக் கொன்று குவித்தால், அதற்கு ஜனாதிபதி கையால் சிறந்த வீரர்க்கான விருது. அங்கு அது கொலையல்ல வீரம்... கடமை என கருதப்படுகிறது. நம் வாழ்வும் ருசியும் பாணியும் அப்படியானதுதான்.

‘உருவத்தைக் காட்டாமல், ஜீவசமாதியைக் காட்டாமல், சிலையைக் காட்டாமல் வெறும் வரிகளின் மூலம் சந்திராவதியை எப்படிப் பார்ப்பது?’ என்று கேட்டால், (இன்றைய பக்தன் ஒருவன் ஸ்ரீசைலத்தில் சந்திராவதி அம்மையார் எப்படி இருப்பார்? சிவனை நோக்கி எப்படி வணங்குவார் என்று சிமென்ட்டால் சிலை செய்து பார்த்திருக்கிறான் பாருங்கள்) இதுவரை பதினான்கு பதிவுகளில் பெண் சித்தர்களைப் பார்த்தீர்கள் அல்லவா? அவர்கள் இறுதியில் எங்கு போய் எதில் ஐக்கியமானார்கள்? சிவனோடு தானே? நீங்கள் தென்றலை அனுபவித்து இருக்கிறீர்களா? வாடையை அனுபவித்து இருக்கிறீர்களா? காற்றுக்குப் பெயர் வைத்து அனுபவித்த நீங்கள், காற்றை பார்த்ததுண்டா? அதுபோன்றே, இந்தப் பதினைந்தாவது பதிவில் பெண் சித்தர் சந்திராவதி அம்மையாரை இனிய தென்றலாக மனத்தால் அறியுங்கள்.

இந்தத் தொடர் ஒரு இனிய ஆன்மிக அனுபவம்தான். ‘சிவனோடு ஐக்கியமான சித்தர்களை ஏன் தரிசிக்க வேண்டும்?’ என உங்கள் மனம் நினைக்கிறதா? சரி...அப்படியானால் அதற்கு பதில் அந்த சிவபெருமானையே தரிசித்து விடுங்களேன். இரண்டும் ஒன்றுதான் என்பதே எனது கருத்து. இந்த அரிய வாய்ப்பை எனக்குக் கொடுத்த, ‘கல்கி’ குழுமத்துக்கும், இந்த ஆன்மிகத் தொடரை தொடர்ந்து வாசித்து, தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்...

(சக்தி சித்தர் தரிசனம் நிறைந்தது)

Comments

மங்களம்.தி says :

அற்புதமான பதிவு.மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

Kunthavai says :

அடடா....அதற்குள் முடிந்து விட்டதே.....சந்திராவதியை மட்டுமல்ல பதினைந்து சித்தரையும் மனக் கண்ணால் பார்த்துக் கொண்டுதான் இத் தொடரை வாசித்தோம்......இத் தொடரை எழுதி எல்லோர் மனதிலும் எப்போதும் இருக்கும் சூர்யாவிற்கு ஈசனருள் எப்போதும் உண்டு.....அடுத்து எப்போது எனக் காத்திருக்கிறோம்...

Santhadevi says :

நிறைவு பகுதி என்பதாலோ என்னவோ மனதிற்குள் ஏதோ ஒன்று புரிந்திட ... அரு உருவானவனை சேவித்திட உருவமோ பெயரோ கூட தேவையில்லை... சீவனாய் இருக்கும் சிவனே அறிவான் யாதொன்றையும்

Ramani Rama says :

சித்தம் சிவமயம் ஆனதால் சித்தர்கள் ஆனார்கள் போலும். மெச்சி அவன் பெயரால் வணங்குகிறேன். ஓம் நமசிவாய.. மீண்டும் ஒரு தொடரில் விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

வீரமணி says :

விரைவில் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறோம் அரிய தகவல்கள் சிறப்பான தொடர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் மல்லிகார்ஜுனன் என்ற பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவார்கள் அந்த பெயரின் பொருள் உங்களால் இன்று விளங்கியது சிறப்பாக தொடங்கப்பட்டு மிகச்சிறப்பாக முடிக்கப்பட்ட தொடர் தமிழன்னையின் ஆசிகளோடும் எம்பெருமானின் இறையருளோடும் தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி் வாழ்த்துகள்

Viji Muruganathan says :

அருமையான அற்புதமான தொடருக்கும்.. ஒவ்வொரு சித்தரைப் பற்றி எழுதும் போதும்,அதற்கான உண்மைத் தகவல்களைத் தேடி மெனக்கெட்டு பகிர்ந்து கொண்டு பல செய்யுட்பாடல்களையும் எங்களோடு பகிர்ந்து கொண்டு.. எத்தனை உண்மையான நேர்மையான உழைப்பு.. வாழ்த்துகள் சூர்யா.. அந்த சித்தர்கள் அருளால் எப்போதும் நலமோடும் வளமோடும் வாழுங்கள்..

ரிஷபன் says :

ஆன்மீகமே தேடலில்தான் முற்றுப் பெறுகிறது. அது தொடர்பான எழுத்துக்கள் உத்வேகம் தரும். சிறப்பான கட்டுரைகளுக்கு அன்பின் நன்றி

Manasvi Uma says :

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் அடியார்களைப் பற்றி அறியும் பேறு பெற்றோம். இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு மிக்க நன்றி. தொடர் இவ்வளவு சீக்கிரம் நிறைவடைந்தது தான் எதிர்பாராதது.

G Srikanth says :

படிக்கும் போதே சிலிர்த்தது.எல்லாம் சிவனருள்....அவன் அருளாலே அவன் தாள் பணிந்து

Prabhamurugesh says :

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அனவரதமும் யாரொருவர் ஈசனை நினைத்துருக , அவர்களின் அன்றாடங்களை அந்த. இறை இயல்பென முடிவு செய்யும். அப்படியே நீங்கள் படைத்த. பதினைந்து பெண் சித்தர்கள் பற்றிய தொடரும் ..இது உங்களுக்கு வரமெனில் ,எனக்கது இறையின் விஸ்வரூப. தரிசனமாயிற்று . ஆக .சிறந்த ஆன்மீக சித்தர் தொடருக்கு மகிழ் நெகிழ்ச்சி சூர்யா.

வே.எழிலரசு. says :

`திருப்பருபதம்` திருஞானசம்பந்தர் அந்த காலத்து தமிழ் தேசியர் போலும். திராவிட நாடு கோரிக்கையின் காபிரைட் கூட பக்தி இயக்க கவிஞர் களுக்கே உரியது. ( தென்னாடுடைய சிவனே.) SRI SAILAM பக்தர்கள் மட்டுமல்ல. எல்லோரும் பார்க்க வேண்டிய இடம். பயணிக்க பயணிக்க முடிவுறாத அந்த அடர்வனம் காலம் முழுதும் கண்ணுக்குள்ளேயே நிற்கும்.ஆனால் கூட்டம் சொல்லி மாறாது. வரிசையில் நின்று பார்த்தேன். ஆனால் தரிசனம் கிடைத்தது என்னவோ அந்த வனத்திலும் அருகிருந்த நீர்த் தேக்கத்திலும்தான்.

sankar subramanian says :

அற்புதமான தேடல் .. முடிவற்று நீளும் சிவனின் உருவம் போல... அவனை பற்றிய தேடலும் வுடிவற்று நீள்கிறது.. என்றேனும் கண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவன் விதைத்தே... உங்கள் கட்டுரைகள் இங்கு முடிவடைந்திருக்கலாம்.. அதுவே எல்லோர் மனதிலும் தேடலின் தொடக்கப்புள்ளியை பதித்தது விட்டு போகிறது

ப்ரியா பாஸ்கரன் says :

அதற்குள் 15 ஆகிவிட்டதா.. மற்றொரு அருமையான தொடர். சித்தர்களுடன் பல சங்க இலக்கிய பாடல்களையும் கற்க முடிந்தது இந்த தொடர்களின் மூலம். காற்றைப் போலத்தான் ஆன்மீகம், உணர முடியும் என்பதை அழகாக எடுத்துச் சொன்ன விதம் அருமை. தகுந்த தகவல்களுடன் பல ஆதரங்களையும் இணைத்து வழங்கும் சூர்யா அவர்களின் நேர்த்தி சிறப்பு. அத்தனை சித்தர்களையும் அறிமுகப்படுத்திய எழுத்தாளர் சூர்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பேரன்பின் நன்றி. நெஞ்சினிக்கும் வாழ்த்துக்கள்

Anusuya Thiruvengadam says :

இன்னும் கொஞ்சம் நீளாதா என நினைக்கும் போதே நிறைவு பெறுவது தான் தொடரின் வெற்றி .. எங்கோ படித்தது இங்கு நினைவு கூற வைத்தது. சித்தர்களின் வரலாற்றையும் அதை உளவியல் பார்வையிலும் கொண்டு சென்றது மிக்க அழகு. நன்றி சூர்யா.

Vijayarani Meenakshi says :

சிவனே சீவனாய் நிறைவாய் நிறைந்தது மனதில்.

Suseela moorthy says :

நன்றி சூர்யா நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது இத் தொடரின் மூலம். எடுத்துச் சொன்ன விதம் மிகவும் அருமை .. அத்தனை தொடர்களிலூம் ஆதாரத்தை எடுத்துக்காட்டியது பாராட்டுக்குரியது. நீரில் இட்ட உப்பு கரைந்து காணாமல் போவதுபோல் அவனே நானாக நானே அவனாக ஐக்கியமாகிக் கரைந்தபின் தனியே உருவம் ஏது .. அருமை சூர்யா

Mangalagowri says :

சந்திராவதி அம்மயை ஜோதி ரூபத்தில் தரிசிக்க முடிந்தது சூரியா. இந்த பதினைந்து பெண் சித்தர்களையும் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு நன்றி. மீண்டும் நாங்கள் எதிர்ப்பார்க்க ஒரு தொடரோடு நீங்கள் வரவேண்டும். மீண்டும் சித்தம் சிவத்தோடு இணைய வேண்டும். காத்திருக்கிறோம். கல்கி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :