• JUST IN | சுட சுட

கொரோனா நிவாரண நிதி: திருநங்கைகளுக்கும் அளிக்கப்படும்! தமிழ்நாடு அரசு!





கொரோனா நிவாரண உதவி பெற நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரானா 2-ம் அலை காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானா நிவாரண உதவியாக ரூபாய் 4-ஆயிரம் வழக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரண உதவி நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளுக்கும் இந்த நிவாரண தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என திருநங்கை கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "திருநங்கைகளில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 11,449 திருநங்கைகளில் ரேஷன் அட்டை வைத்துள்ள 2,956 பேருக்கு இதுவரை நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8,493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நிவாரணத்தொகை கோரும் திருநங்கைகள் அதற்குரிய மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரங்களை அளித்து கொரோனா நிவாரண உதவியை பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து மேற்கொண்டு விபரங்கள் அறியும் வகையில், இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :