• JUST IN | சுட சுட

டெல்லியில் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!





டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

தலைநகர் டெல்லிக்குஇரண்டு நாள் பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு மனநிறைவை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தியை அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்தார். நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகவே சந்தித்தார். 25 நிமிடங்கள் அந்த சந்திப்பின்போது தமிழகத்தின் நலத்திட்ட வளர்ச்சிகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. அதன் பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சரியாக 10 மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு பழைய இல்லத்தை பார்வையிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். தனது இல்லத்திற்கு வருகை புரிந்த மு.க.ஸ்டாலினை சோனியா காந்தி வரவேற்று, அவர் தமிழக முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :