• தீபம் - ஆன்மீகம்

வழிபாட்டுக் கடவுளாக உயர்ந்த கன்ஹோபத்ரா!


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 14
- அமிர்தம் சூர்யா

‘ஓ... நாராயணா, வீழ்ந்தவரின் மீட்பர் என்று உங்களை அழைக்கிறார்கள். என் சாதி தூய்மையற்றது... எனக்கு அன்பான நம்பிக்கை இல்லை... என் இயல்பு மற்றும் செயல்கள் மோசமானவை.’

- கன்ஹோபத்ரா

‘உங்கள் கால்களுக்குத் தன்னைத்தானே முன்வைக்கிறார்.
உங்கள் கருணைக்கான கூற்றுகளுக்கு இது ஒரு சவால்.
வீழ்ந்தவர்களின் இறைவன் என்று உங்களை அழைத்தால்,
ஆண்டவரே என்னை ஏன் நீங்கள் உயர்த்தக் கூடாது?
நான் உன்னுடையவள் என்று கூறும்போது,
யார் குற்றம் சொல்ல வேண்டும்?
ஆனால், நான் வேறொரு மனிதனால் எடுக்கப்பட்டால்,
ஒரு குள்ளநரி சிங்கத்தின் பங்கை எடுக்கும்போது,
அவமானப்படுத்தப்படுகிறது.
நான் என் உடலை உங்கள் காலடியில் வழங்குகிறேன்.
அதைப் பாதுகாக்கிறேன். குறைந்தபட்சம் உங்கள் தலைப்புக்காக...’

என்று மராத்தி மொழியில் விட்டலனைக் குறித்து கவிதை இயற்றினாள் பேரழகியான ஒரு பெண் துறவி. மேலும், அக்கவிதையை தானே பாடியதோடு, விட்டலன் விக்ரகத்தினை தனது கரங்கள் பற்றியிருக்க, பண்டாரிநாதன் பாதங்களில் கண்ணீர் விட்டபடி அந்தப் பெண் துறவியின் உயிர் பிரிகிறது.

யார் அந்தப் பெண்? கி.மு.பதினான்காம் நூற்றாண்டில் (1270-1350) வாழ்ந்த இவர், 1448, 1468 அல்லது 1470ம் வருஷங்களில் உயிர் துறந்திருக்கலாம் எனும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அவருடைய மனக்குறைதான் என்ன? கடவுளின் பாதங்களைப் பற்றிக் கொண்டு ஏன் கதறுகிறார்? அவருடைய உயிர் ஏன் பிரிந்தது? தான் வணங்கும் கடவுளை, ‘சிங்கம்’ என ஏன் வர்ணிக்கிறார்? ‘சிங்கத்தின் பங்கை குள்ளநரி எடுக்குமோ?’ என்று ஏன் புலம்புகிறார்? கடவுள் மேல் அவருக்கு அவ்வளவு காதலா? அப்படியென்றால் குள்ளநரி யார்? அது, அவர் வாழ்ந்த நாட்டின் மன்னனா? ‘நீ வீழ்ந்தவர்களின் மீட்பர் அல்லவா? அந்தப் பெயர் நிலைக்கவே நான் உயிர் பிரிகிறேன்’ என்று கதறுகிறாளே... என்னதான் நடந்தது அவளுக்கு?

நண்பர்களே... மேற்கண்ட உரையாடலுக்குச் சொந்தக்காரர் கன்ஹோபத்ரா எனும் ஒரு பெண் துறவிதான். இவர் ஒரு தீவிர விஷ்ணு பக்தை. கண்ணன் மீது தீராத காதல் கொண்ட கவிதாயினி. ஆம்... கன்ஹோபத்ராவின் பல நூறு பாடல்களில் முப்பது அபங்கங்கள் மட்டுமே இன்று கிடைத்துள்ளன.

இவரது வாழ்க்கை வரலாறு, 1937ஆம் ஆண்டு பால்ஜி பெந்தர்கர் எழுதி, இயக்கிய ஒரு மராத்தி திரைப்படமாக வந்தது. மராத்தியில், ‘கன்ஹோபத்ரா’ என்று பெயரிடப்பட்ட நாடகம் வெகு பிரசித்தம்.

கன்ஹோபத்ரா இத்தனை பெருமையை அடைவதற்கு முன் அவர் பட்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், அழுகை, வலி கொஞ்ச நஞ்சமல்ல. இருக்காதா பின்னே...? நல்ல குடும்பங்களில் வாழ்ந்த பெண்களுக்கே அக்காலத்தில் ஏராளமான அடிமைச்சங்கிலிகள் இருந்தன. இவரோ பணக்காரர்களை, மன்னர்களை அண்டிப் பிழைக்கும் பாலியல் தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர். மங்கல்வேதா நகரில் வசித்து வந்த ஷியாமா என்ற விலைமகளின் புதல்விதான் கன்ஹோபத்ரா. இவளது அம்மா பாலியல் தொழிலாளிகளின் தலைவி. இவர்கள் வசிக்கும் தெரு ஆடல், பாடல், கொண்டாட்டமாய் இருக்கும். செல்வந்தர்கள் வருவதும் போவதுமான வசதியான மிடுக்கான தெருவாக இது இருந்ததாம். கூடவே மன்னரின் கருணையும் உண்டு.

ஆதிக்க ஆண்களின் காம தேவைக்காக இவர்கள் (கடவுள் வழிபாடு, கலை வழிபாடு என்பதெல்லாம் மேற்பூச்சு வேலைதானே?) பிறந்தாலும், அவர்களின் வழிவந்த கன்ஹோபத்ரா எப்போதும் கண்ணன் மீதே பக்தியாய், அவன் புகழ் பாடியபடியே தனது பால்ய காலத்தைக் கடக்கிறார். பருவம் எய்தியதும் அவரது நாட்டியத்தை அரண்மனையில் அரங்கேற்றம் செய்ய அழைக்கிறார் மன்னர். அம்மாவுக்கோ மகிழ்ச்சி. ‘இன்னும் வசதி வாய்ப்புகள் மன்னர் மூலம் தனது மகள் வழியாகக் கிடைக்கப்போகிறதே’ என்று.

ஆனால், காலம் வேறு கணக்குப் போட்டு வைத்திருந்தது. ‘கண்ணனை தவிர, நான் வேறு யாருக்கும் சொந்தமில்லை. நான் கண்ணனைத்தான் திருமணம் செய்வேன். கண்ணனை தவிர, வேறு எந்த ஆடவன் முன்பும் நான் ஆட மாட்டேன்’ என கன்ஹோபத்ரா அடம் பிடிக்க, மன்னரின் கோபம் அவர்கள் மீது படியத் தொடங்குகிறது. மன்னனின் நெருக்கடிகளும், அம்மாவின் வற்புறுத்தலும் தொடர, ஒரு நாள் இரவு தனது வயதான வேலைக்காரியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் கன்ஹோபத்ரா.

‘தப்பித்தால் போதும்’ என்று இலக்கின்றி பயணமாகும்போது, எதிரே நாராயண மந்திரத்தை ஓதியபடி பக்தர்கள் கூட்டம் வருகின்றது. கன்ஹோபத்ரா அவர்களிடம் விசாரிக்கிறார். “நாங்கள் அழகிய இறைவன் விட்டலனை தரிசிக்க, பண்டரிபுரம் செல்கிறோம்” என்று அவர்கள் கூற, “ஐயோ... நான் தேடும் எனது கடவுளைப் பார்க்க நானும் வருகிறேன்” என்று அவர்களுடன் கிளம்பி, பண்டரிபுரம் செல்கிறார் அந்தப் பேரழகியான கன்ஹோபத்ரா. பண்டரிநாதனான விட்டலனை பார்த்ததும், அவளின் கற்பனை ஊற்று பெருக்கெடுக்க, பாடல்களை இயற்றி பாமாலையாக விட்டலனுக்குச் சூட்டுகிறாள்.

அதுமட்டுமின்றி, அங்கேயே தங்கி கோயிலைச் சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொள்கிறாள். அவளது அழகு குறித்த செய்தி, அவ்வூர் மன்னருக்குப் போகிறது. இங்கும் அதே தொல்லைதான். கன்ஹோபத்ராவை அடைய விரும்புகிறான் அந்த மன்னன். கன்ஹோபத்ராவோ, ‘முடியாது’ என மறுக்கிறாள். வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்கின்றனர் மன்னனின் ஆட்கள். இப்போது வேறு வழியில்லை... மீன்கொத்தி பறவையிடமிருந்து தப்பித்த மீன், இப்போது மீனவனின் வலையில் மாட்டிக்கொண்டது.

மன்னனிடம் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறார் கன்ஹோபத்ரா. “நான் உன்னிடம் வருவதற்கு முன் எனது பண்டரிநாதனை ஒரே ஒருமுறை மட்டும் தரிசித்து விட்டு வருகிறேன்” என்று கெஞ்சுகிறாள். ‘சரி... அது வெறும் சிலைதானே. அது என்ன செய்து விடும்?’ என்ற நினைப்பில், “சரி... சரி... போய் பார்த்து விட்டு வா. நீ எங்கும் தப்பிக்க முடியாது” என்கிறான் மன்னன்.

அரண்மனையிலிருந்து ஓடி வந்து விட்டலன் விக்ரகத்தைப் பற்றியபடி கதறிய பாடல்தான் ஆரம்பத்தில் நீங்கள் வாசித்தது நண்பர்களே! அந்தப் பாடலைப் பாடி முடித்ததும் கன்ஹோபத்ராவின் உயிர் பிரிகிறது. ‘அவர் விரும்பிய இறைவனுக்கு மட்டுமே அவர் சொந்தமாகிப்போனார்’ என்கிறது இந்தப் பெண் துறவியின் கதை. ‘திடீரென ஒரு பெருவெள்ளம் பெருகி, அவள் துக்கத்துக்குக் காரணமானவர்களை மூழ்கி அழித்துவிடுகிறது’ என்றும் ஒரு கதையும் சொல்லப்படுகிறது. ஆனால், ‘கடைசி வரை கடவுளின் கால்களைப் பிடித்துக்கொண்டு வர மறுத்த அவளை, மன்னனின் ஆட்கள் கொன்றனர்’ என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலரோ, ‘இல்லை... அவள் கடவுள் முன்னிலையிலேயே தற்கொலை செய்து கடவுளுக்கு தன்னை ஒப்படைத்தாள்’ என்கிறார்கள்.

எது எப்படியோ, பெண் சக்தியை வாசிக்கும் நமக்கு ஒன்று மட்டும் பிடிபடுகிறது. அது, ‘நான் யாரை விரும்ப வேண்டும்...? யாரை பின்தொடர வேண்டும்...? என்பதை ஆணாகிய நீயோ, உனது அதிகாரமோ முடிவு செய்வது இல்லை. நான் முடிவு செய்வது. ‘கடவுளை தவிர, இங்கு எந்த ஆண் மகனும் எனக்குத் தகுந்தவன் இல்லை’ என்ற சாட்டையடியும், ராஜாங்க வன்முறையால் எந்த ஒரு பெண்ணையும், அவளது அனுமதி யின்றி படுக்கையில் கிடத்தி விட முடியாது என்ற உண்மையையும், தனது விருப்பத்துக்குரிய கடவுளை அடைய ஒரு பெண் துறவி உயிரையும் பணயம் வைப்பாள் என்பதும், கடவுளே காதலனாக மாறியதும், அவள் புனைந்த பாடல்கள் எல்லாம் காதல் கவிதைகளே என்பதைத்தான் இதன் மூலம் அறிய முடிகிறது.

இன்னொரு முக்கியச் செய்தி... பிறந்தது, வளர்ந்தது எல்லாம் விலைமகள் சமூகம் என்றாலும், கன்ஹோபத்ராவின் சமாதியில் அவரது சிலையை அனைவரும் கடவுளாகவே மதித்து வணங்கிச் செல்கின்றனர். யுக யுகமாய் வழிபாட்டுக்குரிய சக்தியாய் கடவுள் அவரை உயர்த்தி விட்டார்தானே? இதுதான் மானுடப் பிறவியை முன் நகர்த்துதல் அல்லது கடவுளை நோக்கி நகர்தல் அல்லது கடவுளாக மாறுதல். சித்தர்கள் சொல்லும் மறைமுக ரகசியமும் இது மட்டும்தான்.

(அடுத்த பதிவில் நிறைவுறும்)

Comments

விஜி முருகநாதன் says :

இவ்வளவு அற்புதமான தொடர் முடிவதை மனம் ஏற்க மறுக்கிறது.எவ்வளவு அழகான உபமான உபமேயங்கள், நுட்பக் குறிப்புகள் , தேடல்கள்.. நிறைந்த பாராட்டுக்கள்..எல்லாத் தொடரிலும் சித்தர் மேன்மையை விட பெண்கள் மேன்மையை அதிகமாகசா சொல்லி இருந்தீர்கள் சூர்யா.. நிறைந்த பாராட்டுக்கள்..

விஜி முருகநாதன் says :

இவ்வளவு அற்புதமான தொடர் முடிவதை மனம் ஏற்க மறுக்கிறது.எவ்வளவு அழகான உபமான உபமேயங்கள், நுட்பக் குறிப்புகள் , தேடல்கள்.. நிறைந்த பாராட்டுக்கள்..எல்லாத் தொடரிலும் சித்தர் மேன்மையை விட பெண்கள் மேன்மையை அதிகமாகசா சொல்லி இருந்தீர்கள் சூர்யா.. நிறைந்த பாராட்டுக்கள்..

G Srikanth says :

சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொடர் இங்கே முடிவுற்றாலும், தொகுப்பாக மலரட்டும்.

ரிஷபன் says :

சிலிர்ப்புடன் வணக்கம் விட்டலனின் பிரியைக்கு.

Prabhamurugesh says :

சித்தர்கள் சொல்லும் மறைமுக ரகசியத்தை தெள்ளத்தெளிவாக எளிதாக புரியவைத்தீர்கள் சூர்யா ..பெண் சித்தர்களை படிக்கும்போது மனசு மிகவும் பரவசமாகிறது ..அடுத்த தரிசனத்தில் முடியபோகுது எனும் போது அதுக்குள்ளயா என்று தோன்றுகிறது.கன்ஹோபத்ராவின் பக்தியை வரலாற்றை கவிதையை மிக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்..பெண் சித்தர்கள் பற்றி தெரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அறிய வைத்தற்கு வாழ்த்துக்கள் சூர்யா

Mangalagowri says :

என்ன சொல்ல சாமி? இவர்களை உங்கள் வழியாக நாங்கள் தெரிந்துக் கொள்ள ஆவண செய்த கல்கி நிர்வாகத்துக்கு மிக்க நன்றி. சூரியாவிற்கு `நன்றி` என்று மட்டும் சொன்னால் போதாது. கையெடுத்து கும்பிடுகிறேன் ஐயா.

Devika Nanda says :

அற்புதம்! கண்ணில் நீர் வடிகிறது! ஏன் தொடரை முடிக்க வேண்டும்? இன்னும் தேடினால் கிடைக்கும் அல்லவா?

Vijayarani Meenakshi says :

தொடர் நிறைவடைகிறதா? மனம் ஏற்க. மறுக்கிறதே...

ப. தாணப்பன் says :

பக்தியின் உச்சம் அது. அதற்குள் நிறைவு பெறுவதை மனம் ஏற்க மறுக்கிறது. புத்தகமாக படிக்க ஆசை

Suseela moorthy says :

"பிறந்தது, வளர்ந்தது எல்லாம் விலைமகள் சமூகம் என்றாலும், கன்ஹோபத்ராவின் சமாதியில் அவரது சிலையை அனைவரும் கடவுளாகவே மதித்து வணங்கிச் செல்கின்றனர். யுக யுகமாய் வழிபாட்டுக்குரியது சக்தி" .. சிலிர்ப்பூட்டுகின்றன வரிகள் .. ஒவ்வொரு சித்தர் வரலாற்றிலும் மறக்கவே முடியாத செய்திகள் இருக்கின்றன என்பதை இத்தொடரின் மூலம் உலகுக்குக் காட்டியுள்ளீர்கள் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :