• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

50. என்ன சேதி?


- அமரர் கல்கி

50

என்ன சேதி?

உதவி செய்யுங்கள்

நீண்ட கால சிறைவாசத்துக்கு உட்பட்ட அரசியல் கைதிகளுடைய குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம். இது விஷயமாக, தினசரிப் பத்திரிகைகளில் ‘பாரத தேவி’ ஆசிரியர் ஸ்ரீ.என். ராமரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கைகளை நேயர்கள் பார்த்திருப்பார்கள். நிதியின் நிர்வாகத்துக்காக தேச பக்தர் ஸ்ரீ.கே.பாஷ்யம், சென்னை மேயர் ஸ்ரீ.எம்.ராதா கிருஷ்ண பிள்ளை முதலியோர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதிக்கு உதவி செய்வோர் தேசத் தொண்டுக்குத் தேசத் தொண்டும், தர்மத்துக்குத் தர்மமும் செய்யும் புண்ணியத்தைக் கட்டிக் கொள்வார்கள். ‘மானேஜர், பாரத தேவி, சென்னை’ என்ற விலாசத்துக்குப் பணம் அனுப்ப வேண்டும்.

நிவாரணம் அல்ல

மேற்படி அரசியல் கைதிகளின் குடும்ப நிதிக்கு, சில பத்திரிகைகளில், ‘குடும்ப நிவாரண நிதி’ என்ற தலைப்புப் போட்டிருக்கிறார்கள். பஞ்ச நிவாரணம், கஷ்ட நிவாரணம் முதலியவைதான் சரியான சொற்றொடர்களை யொழிய, ‘குடும்ப நிவாரணம்’ என்பது அவ்வளவு உசிதமான சொற்றொடர் அல்ல. (‘குடும்பத்தை நீக்குதல்’ என்று தப்பர்த்தம் கொடுத்துவிடும்) தயவு செய்து, ‘குடும்ப உதவி நிதி’ அல்லது ‘குடும்பப் பாதுகாப்பு நிதி’ என்ற தலைப்புப் போடக் கோருகிறோம்.

ஒரு யோசனையும்...

பிரபல ஆங்கில ஆசிரியரான பர்னார்ட் ஷா மரண தண்டனையை எப்படி நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சமீபத்தில் தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது, “உபத்திரவமில்லாமல், தொந்தரவு இல்லாமல் குற்றவாளியின் உயிரைப் போக்கிவிடுவதே நாகரிகமான முறை: இப்பொழுது கையாளப்படும் முறை பயங்கரமானது; வெறுக்கத்தக்கது” என்று அவர் கூறுகிறார். க்ஷ உபத்திரவ மில்லாத, நோகாத மரண தண்டனை விதித்து, குற்றவாளிகளை மட்டுமல்லாமல், பைத்தியக்காரர்கள், ‘பிறருக்குச் சகிக்க முடியாத உபத்திரவம் கொடுக்கும் முட்டாள்கள்’ - எல்லாரையும் சமாப்தி செய்துவிடலாம் என்றும், இதனால் சமூகத்துக்கு எவ்வளவோ லாபம் உண்டாகும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

அதில் சந்தேகமும்

குற்றவாளிகளுக்கும் பைத்தியக்காரர்களுக்கும் அத்தகைய தண்டனை விதிப்பது சுலபமாயிருக்கலாம். ஆனால் ‘பிறருக்குச் சகிக்க முடியாத உபத்திரவம் கொடுக்கும் முட்டாள்களுக்கு மேற்படி தண்டனை அளிப்பதில்தான் கஷ்டம் இருக்கிறது.

உதாரணமாக, ஏகாதிபத்ய வெறி பிடித்த பீவர்புரூக்கின் சொந்தப் பத்திரிகை ஒன்றில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. “சாம்ராஜ்யத்தினால் பிரிட்டனுக்கு லாபமே தவிர நஷ்டம் இல்லை. சாம்ராஜ்ய நாடுகளில் முதல் போட்டு செல்வத்தை விருத்தி செய்து கொள்வது நமது கடமை, நமது பாக்கியம், நமது உரிமை!” என்று கொஞ்சமும் வஞ்சனையில்லாமல், ஒளி மறைவு இல்லாமல் கூறுகிறது. அதுவும், நான்கு ”தந்தரங்களுக்காக இந்த யுத்தம் நடப்பதாக ரூஸ்வெல்ட் ரேடியோவில் தினமும் அலறிக் கொண்டேயிருக்கும்போது, அட்லாண்டிக் சாஸனம் உலகத்துக்கு முழுதும் உண்டு என்று யால்ட்டாவில் தேசத் தலைவர்கள் போட்ட கையெழுத்து இன்னும் உலராமல் இருக்கும்போ, மேற்படி பத்திரிகை சாம்ராஜ்யத்தைப் பற்றியும் அதில் உள்ள லாபத்தைப் பற்றியும் கனவு கான்கிறது!

இத்தகைய ஏகாதிபத்ய வெறியர்கள் இந்தியாவுக்குச் செய்து கொண்டிருக்கும் இடைஞ்சல் சகிக்கவில்லைதான். ஆனால், பர்னார்ட் ஷா சொல்வதுபோல் இவர்கள் ‘பிறருக்கு இடைஞ்சல் செய்யும் முட்டாள்களா?’ அல்லது கெட்டிக்காரர்களா என்பதுதான் நமக்குத் தெரியவில்லை. எனவே இவர்களுக்குத் தண்டனையா, சன்மானத்தையோ கொடுக்கும் வேலையையும் ஸ்ரீபர்னாட்ஷாவுக்@க விட்டுவிட வேண்டியவர்களாயிருக்கிறோம்.

பெத்த பெருமாள்!

வருஷத்திற்கு ஒரு கோடி ரூபாயை விழுங்கிக்கொண்டிருந்த ‘தேசீயப் போர் முன்னணி’ என்ற ஸ்தாபனத்தை எடுத்துத் தலை முழுக வேண்டும் என்று மத்திய சட்டசபையிலும் வெளியிலும் கரடியாக் கத்திக் கொண்டிருந்தற்குக் கடைசியாகப் பலன் கிட்டியது. மேற்படி திவ்ய நாமதேயத்தின் பேரில் நடந்து வந்த ஸ்தாபனத்தை சர்க்கார் முடிவு செய்துவிட்டு அதே மூச்சில் ‘வாலு போச்சு கத்தி வந்தது’ என்ற கதையாக மற்றொரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் புதிய ஸ்தாபனத்துக்குப் பெயர்தான் புதிதே ஒழியக் காரியாம்சத்திலும், பணம் விழுங்குவதிலும் இது ‘பழைய கருப்ப’னுக்குச் சற்றும் பின் வாங்கியதல்ல. வித்தியாசம் என்னவென்றால், பழைய ஸ்தாபனம் யுத்தப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு பணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது. புதிய ஸ்தாபனம், யுத்தத்தினால் ஏற்பட்ட ‘கண்ட்ரோல்’களைப் பற்றியும், “ரேஷன் முறைகளைப் பற்றியும் பொது ஜனங்களுக்கு விளக்கி வியாக்கியானம் செய்துகொண்டேபணத்தை விழுங்கி ஏப்பம் விடுமாம்.

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்

நாளது மார்ச் மாதம் 11-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, கவி சுப்ரமண்ய பாரதியார் தமது சரீரத்தில் சென்னையை அடுத்த பெரம்பூருக்கு வந்து பார்ப்பாரானால், தமது கவி வாக்கு இவ்வளவு அற்புதமா#ப் பலித்திருப்பதை அறிந்து, ஆச்சரியக் கடலில் மூழ்கி விடுவார். அன்று காலை 8 மணிக்கு, பெரம்பூர் தமிழர் மன்றத்திலிருந்து தமிழ் முழக்க ஊர்வ, சென்னை மேயர் ஸ்ரீ ராதாகிருஷ்ணப் பிள்ளையவர்களால் தொடங்கி வைக்கப்படும். சிறந்த தமிழ்ப் புலவர்கள் பலர் அடங்கிய ஊர்வலக் கூட்டம், திரு. பூ. ஆலால சுந்தரம் செட்டியார் அவர்கள் தலைமையில், பெரம்பூரிலுள்ள பல வீதிகளின் வழியாகவும் செல்லும். ஊர்வலத்தின்போது, வீதிகளில் ஆங்காங்கு நின்று, புலவர் பெருமக்கள் பதினெட்டுப் பேர், திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட கருத்துகளைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்றுவார்கள். மாலை 4 மணிக்கு, திரு. ரா.பி. சேதுப்பிள்ளை தலைமையில் பெரிய சொற்பொழிவுகள் வேறு நடக்கப் போகின்றன. “தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்ற பாரதியார் வாக்கை இவ்வளவு விமரிசையாக நடத்தி வைக்கப் போகும் பெரம்பூர் தமிழன்பர்களைப் பெரிதும் பாராட்டுகிறோம்.

(11.3.1945 கல்கி தலையங்கத்திலிருந்து...)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :