• JUST IN | சுட சுட

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: இன்று முதல் அமல்!





இந்தியாவில் தங்க நகைகளை ஹால் மார்க் முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என 2019ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. எனினும் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தங்க நகை விற்பனையார்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் உடனடியாக நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது.

தங்க நகை விற்பனையிலும் தரத்திலும் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அவற்றுக்கு ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய தங்க நகை விற்பனையாளர்கள் இனி, 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பு BIS சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும். நாடு முழுவதும், தற்போது 234 மாவட்டங்களில், ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் 892 உள்ளன. அதில் சுமார் 35,879 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன.

-இவ்வாறு அறிக்கை தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

இன்று முதல் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் அனைத்து நகைக்கடைக்காரர்களும் தற்போது, ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :