• தீபம் - ஆன்மீகம்

மௌன மோனம் கைப்பற்றிய ஆனந்தமயீ மா!


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் - 13 - அமிர்தம் சூர்யா

‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்றார் மூத்த பெண் சித்தர் ஔவை. அவரைப் புலவராகவே பார்த்துப் பழக்கப்பட்டதாலும், ‘நம்ம வீட்டுப் பாட்டி தானே’ என்ற நினைப்பில், அவரது அருமை தெரியாததாலும் நாம் அவருக்கு, ‘சித்தர்’ என்ற அந்தஸ்தை அளிக்கவில்லை. ஒருமுறை கவிஞர் தஞ்சை தவசி பேசும்போது, ‘ஆற்காடு சித்தர் என்கிற சம்பங்கி சித்தர் சொல்வார், வார்த்தைகள் இல்லாமல் இருப்பது மௌனம். எண்ணங்கள் இல்லாமல் இருப்பது மோனம்’ என்றார். ஆன்மிகத்தில் இந்த மௌனமும் மோனமும் பிரதான அம்சங்கள். அப்படி பால்யத்திலேயே மௌனத்தையும் மோனத்தையும் கைப்பற்றிய பெண் சித்தர் ஒருவர் உண்டு.

‘அம்மா’ என்பதுவே, அம்மே, அம்ம, அம்மை, மா, மாம, மாயி, மையா என்றானது. பாரதி கூட, ‘உமையாள் அன்னை வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி’ என்பான். கண்ணதாசன் எழுதி, பி.சுசிலா பாடிய பாடல் ஒன்று, ‘மாயி மக மாயி, மந்திர கேசரியே... எங்க ஆயி உமையானவளே ஆத்தா என் மாரிமுத்தே’ என்று கேட்டிருப்பீர்கள். நமக்குப் பரிச்சயம் ஆன மாயி போல், வடக்கே ஒரு மாயி... அவர்தான் ஆனந்தமயீ மா.

ஒவ்வொரு மனிதனுக்கும் மிக உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டியது தன்னை அறிதலே (Self Realisation). அதன் மூலமே ஒரு மனிதன் இறைவனை நெருங்க முடியும் என்று சொன்னவர்தான் இந்த பெண் சித்தர் ஆனந்தமயீ மா.

அப்படியானால் தன்னைச் சுற்றி இருந்த சீடர்களுக்கு அவர் என்ன போதித்தார்? என்ன ஆன்மிக பாடம் நடத்தினார்? என்ன அறிவுரை வழங்கினார்? ஏதும் இல்லை. ஏதும் இல்லையா? ஆமாம்... காரணம், தான் குரு என்று அழைக்கப்படுவதையே அவர் மறுத்து விட்டார்.

‘மனிதனை, பாவ சகாரா என்கிற கடலில் இருந்து விடுவிக்கும் வல்லமை கொண்டவரே குரு ஆவார்’ என்று சொன்னவர் ஆனந்தமயீ மா. அப்புறம் அங்கு சீடர்களுக்கும் போதனைக்கும் என்ன வேலை? நான் எந்த வழியையும், ‘இதுதான் என்வழி’ என்று சொல்ல மாட்டேன். காரணம், ‘அனைத்துப் பாதைகளும் என் பாதைகள். எனக்கு எந்தத் தனி வழியும் இல்லை’ என்றார்.

ஆனந்தமயீ மா - இந்தப் பெயர் கூட அவர் வைத்துக்கொண்டது இல்லை. அவர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் பொங்கி வழிவதாக, அவர் பார்க்கும் இடத்தில் ஆனந்தம் துளிர்ப்பதாக, எங்கும் ஆனந்த மயம் நிலவுவதாக உணர்ந்த சீடர்கள் வைத்த பெயர்தான் ஆனந்தமயீ மா என்பது.

வங்காளத்தில் கியோரா கிராமத்தில் (தற்போது வங்காள தேசம்) ஏப்ரல் 30ல் விபினவிஹாரி பட்டாசார்யா - மோக்ஷதா சுந்தரி தேவி தம்பதிக்கு மகளாக நிர்மலா சுந்தரி என்ற பெயரோடு பிறந்தவர்தான் அன்னை ஆனந்தமயீ மா. இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர்.

தந்தை பிரபலமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆழமான மதக்கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் கொண்ட அவர், ஊர் ஊராகச் சென்று பஜனைப் பாடல்கள் பாடுவார். தாய் மோஷதாவோ பக்திப் பாடல்கள் இயற்றுவதிலும், நாமசங்கீர்த்தனங்கள் செய்வதிலும் வல்லவராக இருந்தார். அதனால் கடவுள் மீதான ஈர்ப்பும் தேடலும் நிர்மலா சுந்தரிக்கு இயல்பிலேயே இருந்தது.

(படிக்க வசதி இல்லாததால் இரண்டாம் வகுப்போடு நிர்மலா சுந்தரி பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டார். இரண்டாம் வகுப்பு வரை படித்த, அதாவது அடிப்படை மொழி அறிவு கூட புலப்படாத அவர்தான் சமஸ்கிருத மொழியில் அத்வைத தத்துவ நூலை எழுதி முடித்தார். அதைத்தான் யோகானந்தர் தமது, `Joy-permeated` எனும் நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இது எப்படி சாத்தியம்? பிரபஞ்ச சக்தியின் ஆதார மொழி அகப்பட்டவருக்கு மனிதன் உருவாக்கிய மொழி எம்மாத்திரம்.)

ஒருமுறை மற்ற குழந்தைகளுடன் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கையில், கண் மூடி அதாவது தியானத்தில் உட்கார்வதுபோல் உட்கார்ந்தபடி இருக்க, கண்கள் மட்டும் சொருகி மயக்கம் போல் அமர்ந்திருந்தாராம். இது மனநிலையா? தியானத்தின் எல்லையா? என்பது பற்றியெல்லாம் பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பு இருந்தாலும், ‘அந்த வயதில் அது சாத்தியமா?’ என்றே பெற்றோர் குழம்பினர். நாட்கள் செல்லச் செல்ல, ‘தியானத்தின் மூலமாகக் கடவுளிடம் தம் மகள் பேசுகிறார்` என்று விளங்கிக் கொண்டனர்.

தூக்கத்தில் சில நேரம் குழந்தைகள் புன்னகைக்கும். நாம் கூட அதைப் பார்த்து இருப்போம். அப்போது பெரியவர்கள், ‘சாமி வந்து குழந்தையைக் கொஞ்சுகிறது’ என்று சொல்லிக் கேட்டு இருப்போம் அல்லவா? அதுபோல் தானே சிரித்துக்கொள்வாராம்.

‘இப்படியே விட்டா சரிப்படாது. அதனால கல்யாணம் செய்து கொடுத்தால் இல்லறப் பணி, தாம்பத்தியம் இதெல்லாம் இவரை தலைகீழாக மாற்றி விடும்’ என்று எண்ணி, ரமணி மோகன சக்கரவர்த்தி என்பவருக்கு, நிர்மலா சுந்தரியை திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது அம்மையாருக்கு வயது 13. 1909ஆம் ஆண்டு திருமணம் நடைபெறுகிறது. 1910ஆம் ஆண்டுதான் கணவன் வீட்டுக்குப் போகிறார். ஆனால், உலக வழக்கப்படியும் மானுட பழக்கப்படியும் கணவர் அந்தப் பெண்ணை நெருங்கும்போதெல்லாம், அவரது உடல் உயிரற்ற பிணம் போல் ஆகி சமாதி நிலைக்குப் போய் விடுமாம். ‘இதென்னடா வம்பா பேச்சு? ஒருவேளை காத்து கருப்பு வேலையா இருக்குமோ’ என்று அவரது கணவர் சாமியார்களிடமும், மந்திரவாதிகளிடமும் அவரை அழைத்துப்போனார். ஆனால், அங்கு போனால் அந்த சாமியார்களும் மந்திரவாதிகளும் இந்த அம்மாவின் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.

‘என் உணர்வு என்றுமே இந்த நிரந்தரமில்லாத உடலுடன் ஒன்றியதில்லை... எப்போதும் நான் அதுவாகவே இருக்கிறேன்’ என்று அடிக்கடி செல்வார் நிர்மலா சுந்தரி. அவரது குடும்பத்தினர், ‘இனி இவள் குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டாள். இவள் சராசரி பெண்ணும் அல்ல. தாம்பத்தியத்துக்கும் உரியவள் அல்ல. நீ வேறு திருமணம் செய்துகொள்’ என ரமணி மோகன சக்கரவர்த்தியிடம் சொன்னபோது, ‘இல்லை... நிர்மலா சுந்தரி ஒரு தெய்வப் பிறவி. அதீத ஆற்றல் கொண்டவள். மக்களின் துயர் தீர்க்கப் பிறந்தவள். நான் அவருக்குச் சீடராக இருந்து பணிவிடை செய்வதே எனது லட்சியம்’ என்று அவரும் தீட்சை வாங்கி அவரது முதல் ஆண் சீடராகிறார்.

தீராத நோயால் அவதிப்பட்டவர்களின் வலியைத் தொட்டுத் தடவித் தீர்க்கிறார் நிர்மலா. பார்வையாலேயே, பலவீனமானவர்களை பலமாக்கு கிறார். சோகமுற்றவர்களை அணைத்துத் தழுவி மகிழ்ச்சியானவர்களாக மாற்றுகிறார். இதனால் மக்கள் கூட்டம் தானாகவே அவரைத் தேடி வரத் தொடங்குகிறது. நிறைய ஆண்கள் சீடர்களாக மாறுகிறார்கள். அப்படியான சீடர்கள்தான் நிர்மலா சுந்தரிக்கு, ‘ஆனந்தமயீ மா’ என்ற பெயரை 1920ல் சூட்டுகிறார்கள்.

இந்த காலகட்டத்தில்தான் இந்திராகாந்தியின் தாய் கமலா நேருவுக்கு ஆனந்தமயீ மா மீது பக்தி ஏற்படுகிறது. அவரை வந்து சந்தித்து ஆசி பெறுகிறார். ஆசிரமத்துக்கும் கூட்டு பிரார்த்தனைக்கும் வழி அமைத்துக் கொடுக்கிறார். கமலா நேருவுக்கு ஆனந்தமயீ மா கொடுத்த ஜப மாலை பின்னர் இந்திரா காந்தியின் கழுத்தையும் அலங்கரித்தது என்பர்.

சுவாமி சிவானந்தா, சுவாமி பரமஹம்ச யோகானந்தா ஆகிய ஆன்மிகப் பெரியோர் இந்த அம்மையின் புகழைப் பரப்பினர் என்று சொல்லலாம்.

அன்னை ஆனந்தமயீ அறுபது ஆண்டு கால ஆன்மிகப் பணிக்குப் பிறகு, 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ந்தேதி ஹரித்வாரில் இறைவனுடன் கலந்தார். அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அம்மையார் விசேஷ ஹெலிகாப்டரில் வந்து அம்மாவின் அந்திமக் கிரிகையில் கலந்து கொண்டார் என்பது சிறப்புத் தகவல்.

ஆனந்தமயீ மாவின் முக்கியச் சீடர்களில் ஒருவரான வியன்னா நாட்டை சேர்ந்த, ‘பிளாங்கா’ என்ற ஆத்மாநந்தா என்பவர்தான் ஆனந்தமயீ மாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

‘கூலிப்படையான நோக்கங்களிலிருந்தும், அதேபோன்ற நோக்கங்களிலிருந் தும் அறிவைப் பெறுவதிலிருந்தும் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் கழித்தீர்கள். உங்கள் வலிமையோடு நீங்கள் உலக நோக்கங்களுக்காகச் சேவை செய்கிறீர்கள். கடவுளின் அன்புக்காகச் சிறிது சேவை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் சிந்தனை அவரது தாமரை பாதங்களில் தங்கும். எல்லா வேலையையும் இறை சேவையாகச் செய்ய வேண்டும். நீங்கள் அவரது பிரசன்னத்தின் உணர்வினால் எவ்வளவு காலம் தூண்டிவிட முடியுமோ, அவ்வளவு காலம் உங்கள் உடல், மனம், செயல்கள் தெய்வீக நிலையை நோக்கி முன்னேறும்’ என்று சொல்லும் அன்னை ஆனந்தமயீ மா சரிதம் என்னதான் சொல்கிறது?

பிரபல எழுத்தாளரும் கவிஞருமான கல்யாண்ஜி வார்த்தையில் ரொம்ப எளிமையா சொல்லட்டுமா? அவர் சொல்வார்... ‘பூ பூப்பது அதன் இஷ்டம். அதைப் போய் பார்ப்பது உன் இஷ்டம்’ என்று. ஆமாம்... அந்த ஆன்மிக அனுபவப் பூவை போய் பார்க்கக் கொஞ்சம் இஷ்டப்படேன் என்பதுதான் நானும் சொல்வது.

(தரிசனம் தொடரும்)

Comments

ஜி.ஏ. பிரபா says :

அருமையான சித்தர். இறை சேவையாகவே அனைத்தையும் செய்தால் அதில் தீமை கலக்காது. கெட்ட எண்ணங்கள் இருக்காது. அருமை.

Mangalagowri says :

எப்போதும் இஷ்டத்தோடு பார்ப்பது இந்த ஆன்மீக பூவைத்தான். அதுவும் சூரியா எழுதும் போது அது இன்னும் பக்கத்தில் மணம் வீசுகிறது. நன்றி சூரியா

Kunthavai says :

சூர்யா ஒரு சந்தேகம்....சித்தர்கள் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன்...எல்லா பெண் சித்தர்களும் நாம் பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர்களாகத்தான்(அதாவது வாழ்வதற்கு முன்)இருக்கிறார்கள் ...நம் காலத்தில் சித்தர்கள் தோன்றவில்லையா அல்லது இந்த ஆணாதிக்க சமூகம் அதற்கு அனுமதிக்கவில்லையா..?

sankar subramanian says :

அடைவது எப்படி சாத்தியம் ... அப்படியாகவும் உணர்ந்தபின் அவர்கள் அடைந்ததென்ன... பதில் கிடைக்காத பெரும் கேள்வி கடவுள்... கண்டு உண்மை உணர்ந்த பெரியோர்களின் தரிசனம் கிடைப்பதே வரம் தான்... உங்களுக்கு கிடைக்கும் வரங்களில் நாங்களும் அள்ளி கொள்கிறோம்.. தொடரட்டும் வரங்களின் தரிசனம்

G Srikanth says :

எதுவும் இஷ்டப்படாமல் கிடைக்காது, அப்படிக் கிடைப்பது கஷ்டம் மட்டூமே,ஆனால் அதையும் குந்தி கிருஷ்ணனிடம் வரமாகக் கேட்கிறாள்.ஏன் அத்தை எனக் கேட்டதற்கு அப்போதேனும் உன்னை நினைக்கத் தான் என்கிறாள்.

Ramani Rama says :

. கடவுளின் அன்புக்காகச் சிறிது சேவை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் சிந்தனை அவரது தாமரை பாதங்களில் தங்கும். எல்லா வேலையையும் இறை சேவையாகச் செய்ய வேண்டும். அப்படி ஒரு மனோபாவம் வாய்க்க வேண்டும். அனைவரின் மனதிலும் ஆனந்தம் நிரம்பி வழிய வேண்டுதல் வருகிறது. அம்மா ஆனந்தமயி

வீரமணி says :

மௌனத்திற்கும் மோனத்திற்கும் உள்ள வித்தியாசம் எளிமையாகவும் அழகாகவும் சொல்லப்பட்டிருக்கிறது இறையன்பின் வழிநின்று நம்மை அன்பால் நல்வழிநடத்திய அன்னை சித்தரை அலங்கரித்து ஆராதிக்கிறது உங்கள் சிறப்பான சொற்களின் மாலை எங்களுக்கும் நல்ல தரிசனம் !

K.anuradha says :

மௌனம் ஞான வரம்பு என்றார் ஔவையார். மௌனம் மோனம் கலந்த தியானநிலை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.கடவுளின் தாமரைப்பாதங்களில் சேர சேவை செய்யுங்க என்றார் ஆனந்தமாயி.சித்தர்கள் ஒஆழ்ந்த பூமியில் நாம் இருப்பதே பெருமைதான்.

ரிஷபன் says :

கடவுளின் அன்புக்காக சிறிது சேவை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். அற்புத அறிவுரை

விஜி முருகநாதன் says :

இதுவரை எழுதியதிலேயே நீளமான பதிவு இதுதான் என நினைக்கிறேன்.அருமை என்றெல்லாம் சொன்னால் அதெல்லாம் சரியான வார்த்தையாக இருக்காது இந்தப்பதிவுக்கு.. இறையருள்... வேறென்ன சொல்ல..

Padmaja says :

கடைசி வரி முத்தாய்ப்பு

Prabhamurugesh says :

எல்லாம் வல்ல இறையிடம் ஏதோ ஜென்மாந்திர தொடர்பாகவோ , விட்ட குறை தொட்ட குறையாக ,இருந்தவர்களையே அது தேர்ந்தெடுத்து தொட, தேடுதலில் உள்ள அந்த இயல்பு தன்மையை இறையே அதுவாக உருக்கொள்கிறது .அவ்வாறு இறை உரு கொண்ட அம்சமே அன்னை . இதுவே இந்த ஆன்மீக பதிவின் நோக்கம் .

ப்ரியா பாஸ்கரன் says :

வார்த்தைகள் இல்லாமல் இருப்பது மௌனம். எண்ணங்கள் இல்லாமல் இருப்பது மோனம்’ ஆழமான கருத்து. ஆனந்தமயீ சரித்திரம் அற்புதம். அதுவும் கணவரும் கூடவே தீட்சைப் பெற்றதும் அருமை. பெண் சித்தர்களையும் போற்றி தபால் தலைகளில் வெளியிட்டதும் சிறப்பு. இறுதியாக கட்டுரையை முடித்த விதம் சிறப்பு. சித்தர் அருளால் இன்னும் பல ஆன்மிக கட்டுரைகள் வரட்டும். நெஞ்சினிக்கும் வாழ்த்துக்கள் சூர்யா.

ப. தாணப்பன் says :

ஔவையும் சித்தர்தான். ஆனால் பாட்டியாக்கி நெருங்கி வைத்திருக்கிறோம். இதுவும் அன்னையின் அருள். மௌனம் மோனம் விளக்கம் அருமை. கணவரே சீடரானார் என்பது ஆட்கொள்ளல்.அதிசயம். பரமஹம்சர் நினைவு வந்து விடுகிறது. பிளாங்கா சீடரை பார்க்க ஆவல் மேலிடுகிறது. ஆம். கல்யாண்ஜியின் கூற்றோடு இணைந்து பூவைப் போலும், போலுமல்லாத அன்னையை பார்க்க ஆசை. அதுவே இங்கே இப்போது என்னை அழைத்து வந்திருக்கிறது.

Suseela moorthy says :

வார்த்தைகள் இல்லாமல் இருப்பது மௌனம். எண்ணங்கள் இல்லாமல் இருப்பது மோனம்’ சாத்தியமான வார்த்தைகள்... உங்களுக்கும் சித்தர்களுக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கும் போல .. அமர்க்களமான தொடர்.. தொடர்ந்து எழுதுங்கள்

Premalatha says :

பெண்சித்தர்கள் பற்றிய பதிவுகள் அருமை... ஆன்மீகம் பற்றிய புரிதலுக்கு தங்கள் தொடர் வழிகாட்டி.. உங்களுடைய இந்த சேவைக்கு அனைத்து சித்தர்களின் ஆசியும் கிடைக்க பெறுவீர்கள்..வாழ்த்துக்கள்!

Maarani says :

சிறப்பான ஆன்மீகத் தொடர் தொடரட்டும் உங்கள் ஆன்மீகத்தேடல் எண்ணக்குறைப்பு ஒளி(ஒலி)யற்ற அலைகளை அறியும் கலைக்கான முதல் வழி அகமௌனம் ஆன்மீகத்திற்கு உபாயம் இறுதியாக வெற்றுத் தன்மை அங்கே பூக்கும் ஆன்மீகத்திற்கான அற்புத பூ மாராணி

Santhadevi says :

மோனத்தின் முடிவு ஆனந்தம் என்பதை ஆனந்தமயி மாவின் சரித்திரம் படிக்கையில் உணர முடிகிறது. பெண் சித்தர்கள் தொடரின் மூலம் நீங்களும் சிறப்படைகிறீர்கள் சூர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :