• தீபம் - ஆன்மீகம்

புன்னகையை அருமருந்தாக்கிய அன்னை நீலம்மையார்!


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 12 - அமிர்தம் சூர்யா

சிவசக்தி - இதில் சக்தி என்பது ஆன்மிகச் சொல் என்றால், ஆற்றல் என்பது அறிவியல் சொல். அறிவியல் என்ன சொல்கிறது? ஒரு ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. (சத்தியமாக மனுஷனால் முடிவே முடியாது.) ஆனால், ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்ற முடியும். இதுவே விஞ்ஞானம் சொல்லும் ஆற்றல் மாறா கோட்பாடு. அமைதியாக அணையில் பதுங்கிக்கிடக்கும் நீர் நிலையாற்றல் அதை கீழே விழ வைத்தால், ’தொப் தொப்’வென ழும் அல்லவா?! அப்போது அது இயக்க ஆற்றல். அப்படிக் கொட்டும் நீரில் ஒரு இரும்பு காற்றாடியை வைத்துச் சுற்றவைத்து காந்தத்தின் மூலம் மின்சாரம் வந்தால் அது மின் ஆற்றல், பின் அது ஒளி ஆற்றலாக வெளிச்சம் தரும். இப்படித்தான் ஒரு ஆற்றல் வேறொரு ஆற்றலாக மாறும். எந்த ஆற்றலையும் சக்தியையும் நீ கண்ணால் காண முடியாது. அதன் செயலைத்தான் காண முடியும். அப்படியாக, அதுபோல நீ காண முடியாத இந்த உலகை இயக்கும் ஒரு ஆற்றல் / சக்திதான் பராசக்தி. அதனால்தான் திருமூலர் சொல்கிறார்...

‘அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள் இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே’ (தி.ம. 1054)

இந்த உலகத்தின் ஆதார சக்தியாகப் பார்க்க முடிகிற உருவமாகப் பெண் இருப்பதால் நாம் அவளைச் சக்தி என்கிறோம். அப்படியாக, இல்லறத்தில் மனைவியாக இருந்த ஒரு பெண், இல்லற சக்தியிலிருந்து இறை சக்தியாக மாறுவதைப் பற்றித்தான் இந்தப் பதிவில், அன்னை நீலம்மையார் குறித்து அறியப்போகிறோம்.

ஞானிகள், துறவிகள் முதலில் ஐம்புலன்களை அடக்குவர். பின் இந்த நாடும் நாட்டின் தலைவனும் துறவியிடம் மண்டியிட்டு அடங்குவர். அடக்குவதே அதிகாரத்தின் தொடக்கம் என்பது ஒரு அரசியல் பார்வை. நீலம்மையார் அடிக்கடி சொல்வது, ‘உன் மனம் உனக்கு அடங்கினால், உலகம் உனக்கு அடங்கும்’ என்பது ஆன்மிகப் பார்வை.

இன்னபிற ஞானவான்கள்போல் குடும்பத்தை விட்டு விலகி, குடும்பப் பொறுப்புக்களைத் தட்டிக்கழித்துவிட்டு, துறவறம் மேற்கொண்டு சாமியார்களைத் தேடியவர் அல்ல நீலம்மையார்.

பதினைந்து வயதாகும்போது, ராமசாமி பிள்ளை என்பவரைத் திருமணம் செய்து ஆனந்தமான தாம்பத்தியத்தில் மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்த பின் அந்த மூன்று பெண் குழந்தைகளையும் வளர்த்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து இல்லறத்தை நல்லறமாக ஆற்றியவர் நீலம்மையார்.

சரி... எப்போதுதான் ஆன்மிகத்திற்கான வாசல் திறந்தது? அவர் சிறுபிள்ளை காலத்திலிருந்தே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மீது அளவற்ற பாசமும் பக்தியும் கொண்டவர். ‘சிவனை இயங்க வைப்பதே என் சக்தி ராஜேஸ்வரிதான்’ என்று திடமாக நம்பியவர் அன்னை நீலம்மையார். நான்காவது மகனுக்குத் திருமணம் செய்து தனது கடமையை முடிக்க பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்போதுதான் மகன் சொல்கிறான், “எனக்கு இல்லறத்தில் நாட்டமில்லை. நான் துறவியாகப்போகிறேன்” என்று.

‘எனக்கு ஓவியம்தான் பிடிக்கும். நான் ஆர்ட் படிக்கப்போகிறேன்’ என்று ஒரு மகன் இக்காலத்தில் சொல்வானேயானால் அவனுக்கு மூளைச்சலவை செய்து, மீறினால் “உனக்கு இங்கு இடமில்லை. நீ டாக்டருக்குப் படிப்பது குடும்ப கௌரவம்” என்று உறவின் பேரால் அராஜகம் செய்யும் பெற்றோரை நாம் சந்தித்து இருக்கிறோம். ஆனால் நீலம்மையார், ‘அவரவர் வாழ்வின் ருசி அவரவர் வாழ்வின் பாணி. அவரவர் போக்குக்கு அனுமதியளிப்பதே சம்பந்தப்பட்டவரை மதிப்பதற்கான வரையறை’ என்று சொல்லும் விசால மனம் கொண்ட அம்மையார். எதிர்வாதம் செய்யாமல், “சரி மகனே... அப்படியே செய்யலாம். நீ துறவு கொள்ள ஒரு குரு வேண்டுமே. அதனால், கேரளாவிலுள்ள வடகரை என்னும் ஊரில் சித்த சமாஜத்தை நிறுவிய

ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் அவர்களின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை சந்திக்கலாம்” என முடிவு செய்கிறார் அன்னை நீலம்மையார். இது ஒரு அசலான தாய்க்கான ஆதாரப் பண்பு.

அன்னை நீலம்மையார் குமாரி மாவட்டம், சுசீந்திரத்தை அடுத்துள்ள போத்தியூரில் வள்ளிநாயகம் பிள்ளை-மாரியம்மாள் தம்பதியருக்குப் பிரமாதி ஆண்டு சித்திரை மாதம், 19ஆம் நாள் புதன்கிழமை, ஆயில்ய நட்சத்திரத்தில் (30.04.1879), இரண்டாவது மகளாக அவதரித்தார். இந்த பூமிக்கு வந்து போனவர்களை, ‘பிறந்தார்’ என்றும் வந்ததுக்கான அடையாளத்தை அன்பால் தந்து போனவர்களை, ‘அவதரித்தார்’ என்றும் சொல்லிக்கொள்வதே வார்த்தைக்கு வசந்தம் பூசுவது போன்றது.

முளைத்து வரும் மாங்கன்றின் குருத்தை நசுக்கி முகர்ந்தாலும் மா வாசம் வருமேயன்றி, வேம்பின் வாசம் வராது. வளர்கிறபோது அதன் வம்ச புத்தி வெளிப்பட்டு விடும். அவ்விதமே நீலம்மையார் இறைபக்திவாதியாக இருந்தார். ‘அட... அடுத்தவர் முன் பேசும்போது கூட தன் புடைவையின் முந்தானை தலைப்பால் வாய் மூடி சன்னமாகப் பேசுவார் என்று படித்ததும் அம்மையார் எச்சில் இல்லாமல் வார்த்தையை சுத்தமாக வடிகட்டி அனுப்புகிறாரோ’ என்றுதான் நான் கற்பனை செய்தேன்.

நீலம்மையார் மகனின் துறவற ஆசையைப் பூர்த்தி செய்ய தனது மகனுடன் ஸ்ரீ சிவானந்த பரமஹம்சரை போய் சந்திக்கிறார். தாம் வந்த காரணத்தைச் சொல்கிறார். தன் எதிரே நிற்கும் தாய், மகன் இருவரையும் பார்த்த அவர், இருவரின் அகத்தையும் வாசித்துவிட்டுச் சொல்கிறார்...

“உன் மகனுக்குத் துறவறம் வாய்க்காது. அவன் மீண்டும் இல்லறம் திரும்புவான். எனவே, அவன் ஆசைப்பட்டாலும் அதற்கான மனம் அவனுக்கு வாய்க்கவில்லை. ஆனால், உனக்கு முழுமையாக அது அமைந்துள்ளது. இறைவன் உன்னைத்தான் இறைப்பணிக்குக் கேட்கிறான்” என்று சொல்கிறார்.

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் சொல்வார், “ஏண்டா, அங்கதான் வைச்சிருப்பீங்களடா ட்டுவிஸ்ட” என்று? ஆம் நண்பர்களே... எந்த இடத்தில் காலம் உங்களை யூ டர்ன் போட வைக்கும், எந்த இடத்தில் காலம் உங்கள் பயணத்தை முட்டுச்சந்தில் நிறுத்தும்? ‘போதும்’ என்று முடிவெடுக்கும்போது ஓடு எனத் தொடங்க வைக்கும் என்று காலத்துக்கு மட்டுமே தெரியும்.

ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் முன்பு உடனே முழு மனத்துடன் அந்த நிமிடமே தான் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி மகனிடம் கொடுக்கிறார். வண்ண ஆடையை நிராகரித்து நிறங்களுக்கே ஆதாரமான வெள்ளை உடைக்கு மாறுகிறார். ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் அம்மையாருக்கு அந்த நிமிடமே தீட்சையளித்து உபதேசமும் செய்யத் தொடங்கி விடுகிறார். மகன் வீடு திரும்புகிறார்.

பின் வீடு திரும்பும் அன்னையார் தமது இல்லத்தில் ஒரு தனியறையில் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஆனாலும், அது போதவில்லை என்று மனம் சொல்ல, 1957ல் வடதிருமுல்லைவாயிலுக்கு வந்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் சக்கரவர்த்தியால் கட்டப்பெற்ற அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலைத் தரிசிக்கிறார். அந்தத் திருத்தலத் திற்கு அருகிலேயே குடிசை ஒன்றை அமைத்துத் தங்குகிறார். அவரைத் தேடி துக்கமுற்ற, சிக்கலுற்ற, சோகமுற்ற மக்கள் தேடி வருகின்றனர். வந்தவர்களிடம், “என்ன பிரச்னை?” என்றுகூட கேட்க மாட்டார். தேடி வந்தவரைப் பார்ப்பார்... புன்னகைப்பார்... அவ்வளவுதான். வந்தவர்களும் வணங்கிப் போய்விடுவர். ‘அம்மாவுக்குத் தெரியாதா புள்ளைங்க கஷ்டம்? இதை சொல்லவைத்து வேற சோகமாக்க வேண்டுமா?’ என்று நினைத்திருப்பார் போலும். வந்த பிள்ளைகளும் அந்தப் புன்னகையில், ‘துயர முடிச்சு அவிழ்ந்துவிடும்’ என்ற அசாத்திய நம்பிக்கையோடு கிளம்புவர். அப்படியே அவர்களின் துக்கமும் சந்தோஷமாக மாறிடக் கண்டனர். துக்கத்தின்போது ஒரு அன்பான புன்னகை எவ்வளவு ஆறுதல் என்பதை அனுபவித்தவர்களுக்கே தெரியும். புன்னகையில் ஆறுதலைப் பூசக் கற்றுக்கொள்வதே ஆன்மிக பாலபாடம்.

பின்னர், அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தை அடுத்த வடக்கு மாசி வீதி, ஈசான்ய மூலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்து, அதில் ஒரு அறையையும், தியானம் செய்ய ஒரு குழியையும் ஏற்படுத்தினார். அந்தக் குழி நான்கு அடி நீளமும், நான்கு அடி அகலமும், ஐந்து அடி ஆழமும், உள்ளே இறங்கிச் செல்ல மண்ணால் ஆன படிகளும் கொண்டது. தமது ஆடைகளைக் களைந்து மேலே வைத்துவிட்டு, ஆடையின்றி உள்ளே இறங்கி அமர்ந்து தியானம் செய்வாராம். அப்படி தியானம் செய்யத் தொடங்கிவிட்டால் காற்றை மட்டுமே உண்டு, மாதக்கணக்கில் இருப்பாராம். தரையில் அன்னையின் ஆடையைப் பார்க்கும் மக்கள், அன்னை தியானம் செய்கிறார் என்று போய்விடுவர்.

இப்படியாக, தன் யோக சக்தியைக் கூட்டித்தான் யார் எந்த நோக்கத்துக்கு வந்தோம்? எப்போது பணி முடியும்? இறையோடு கலப்பது எப்போது? என்பதைத் தெரிந்து கொண்டார்.

தம்முடைய பிறவிக்காலம் முடிவுற்றதை உணர்ந்த நீலம்மையார் தாம் இறைவனுடன் ஐக்கியமாகும் நாளை முன்னதாகவே அறிவித்துவிட்டார். அந்த நாளில், ‘தம்மை தியானக்குழிக்குள் இறக்கி மூடிவிடும்படி’ பக்தர்களிடம் தெரிவித்தாராம்.

அதன்படி, கார்த்திகை மாதம் 23ம் தேதி (13.12.1970) பௌர்ணமிக்கு அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.45 மணிக்கு, கிருஷ்ணபட்சம், மிருகசீரிடம் நட்சத்திரத்தில், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் தமது ஆசனத்தில் அமர்ந்து பரிபூரணம் அடைந்தார். தன் ஜீவனை சமாதானப்படுத்திக்கொண்டார். சென்னை, வடதிருமுல்லைவாயில்

ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தை அடுத்த, வடக்கு மாசி வீதியில் அன்னையாரின் ஜீவசமாதி ஆசிரமம் அமைந்துள்ளது.

‘ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.’

என்று வள்ளுவன் சொன்னதுபோல் இல்லற தர்மத்தை இயல்பாக, நேர்மையாக, உண்மையாக நடத்து. அதுவே பெரிய தவம். அப்படி அந்தத் தவத்தைச் செய்து வருகையில், அடுத்தகட்டம் என்ன என்பதைக் காலம் கைபிடித்து அழைத்துச் சொல்லும். அதுவரை இதைச் சரியாகச் செய். ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். நீலம்மையார் தன் மகனைத் துறவியாக்க அழைத்துப்போய், இவர் துறவியாக வீடு திரும்பியபோது நீலம்மையாரின் கணவர் ராமசாமி பிள்ளை, “அப்படியா? உன் மனமும் புத்தியும் இதை அடையாளம் காட்டினால் அப்படியே செய் நீலா” என்று கூறி மனைவியை வணங்கி, “நான் என்ன உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டாராம். பரஸ்பர புரிதல் என்பதும் சரணாகதி என்பதும் கூட்டுப்புழுவிலிருந்து பட்டாம் பூச்சியாக அடையும் மாற்றம். இது இருபாலருக்கும் பொருந்தும் என்பதைப் புரிந்தால் அதுதான் இந்தப் பதிவுக்கான வெற்றி.

(தரிசனம் தொடரும்)

Comments

ரிஷபன் says :

துறவின் தருணம் எப்போது வரும் என்று இறையே அறிவான். நீலம்மையாரின் கணவரும் போற்றுதலுக்கு உரியவர்

விஜி முருகநாதன் says :

அருமை சூர்யா.. இல்லறம் நல்லறமாக இருந்தால் இறைவனும் தேடி வருவார் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறது(சொல்கிறீர்கள்) நீலம்மை வரலாறு..

K.anuradha says :

துறவு சாதாரண விசயமல்ல.குடும்பமே ஒத்துழைத்து,கணவர் உனக்கு என்ன உதவி நான் செய்யனும்னு கேட்டாரே அவர் உண்மையிலேயே மகான். சூர்யா எழுதும் அனைத்து சித்தர்களையும் தரிசிக்கனும்.

Prabhamurugesh says :

"தாமரை இலை மேல் நீர் போல " என்ற நிலை இந்த மகா சித்த ரூபத்திற்கு பொருத்தம் போல ..இல்லறத்தில் துறவறமாக அந்த அம்மையார் தகித்து கொண்டிருக்க இணையரும் உன் முடிவிற்கு நான் எப்படி உதவ என கேட்டராம் .என்னே இறை முடிவின் வெளிச்ச ஆரம்பம். மிக சரியான நேரத்தில் ஆக சிறந்த பதிவு சூர்யா.

G Srikanth says :

சரியான புரிதல் இருப்பின் துறவறமும் சாத்தியமே என்பதற்கு நீலம்மை ஓர் உதாரணம். மகனின் உணர்வை மதித்ததும் போற்றத்தக்கது.

ப்ரியா பாஸ்கரன் says :

பிடித்த திருமந்திரம் பாடலுடன் ஆரம்பித்து வெகு சிறப்பான மொழி நடையில் வந்திருக்கும் நீலம்மையார் தரிசனம் மனதிற்கு மகிழ்வையும், அனைதியையும் ஒருங்கே தந்துள்ளது. இல்லறத்திலிருந்து துறவறம் மேற்கொள்வதே சிறந்தது என்பதற்கு நீலம்மையார் ஒரு சிறந்த சான்று. சிறப்பு நண்பா.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

செல்வி சிவஞானம் says :

மிக சிறப்பு சூர்யா சார். நீலாம்மையார் வரலாறை படிக்கும் போதே சிலிர்க்கிறது. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அம்மையாரின் ஜீவ சமாதியை தரிசிக்க தோன்றுகிறது. அருமை வாழ்த்துக்கள்

sankar subramanian says :

அருமை ... நன்றி அண்ணா... அறிமுக பயணம் இன்னும் தொடரட்டும் ... இப்படியான பெரியோர்களை அறிவதும்... தெரிவதும்... வணங்குவதும்... இறையாடி நாடுவதுமாய்... நாங்களும் பின் தொடர்கிறோம் ...

கனகா பாலன் says :

"அவரவர் வாழ்வின் ருசி அவரவர் வாழ்வின் பாணி"எத்தனை மேன்மை வார்த்தைகள் இவை..மதிப்பளித்து அனுமதிக்கும் குடும்பத்தினர் அமையப் பெறுவதெல்லாம் வரம்..சிறப்பான கட்டுரை

Mangalagowri says :

நீலமையார் வரலாறு அருமை சூரியா. அவரவர் வாழ்வின் ருசி என்பது வாழ்வின் பாணிதான். இதுதான் வேண்டும் என ஆசைப்படலாம். இதுதான் உனக்கு என தெய்வம் முடிவு செய்து விட்டால் நாம் யார் மாற்றுவதற்கு. நன்றி சூரியா

ப. தாணப்பன் says :

திருமுல்லைவாயில் சென்று அன்னையை தரிசிக்கும் ஆவல் மேலிடுகிறது. அதே போன்று அன்னை பிறந்த ஊரில் அன்னக்கு ஒரு பிறை கட்டி ( பிறை நாரோயில் வழக்குச் சொல். அறை என்றே பொருள்படும். சூட்டுககோல் சித்தர் மாயண்டி சுவாமிகளின் ஜீவ சமாது திருப்பரங்குன்றத்தில் இருந்தாலும் , வந்து தங்கிய ஆழ்வார் திருநகரியில் அவருக்கு அதே போன்ற கோவில் இருக்கிறது. சங்கரன் கோவில் கோமதி அம்மன் முன் ஒரு குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்வது நினைவிற்கு வந்தது. இல்லறம் நிறைந்து துறவறம் பூண்டது இறைவன் ஆணை. மனைவியை வணங்கி நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட கணவரின் புரிதலுணர்வும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பிரமிக்க வைக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :