• தீபம் - ஆன்மீகம்

சாவித்ரி விரத மகிமை


ஜி.எஸ்.எஸ்.

ஜூன் 10, 2021 – சாவித்ரி மாதா விரத நாள்

சத்யவான் சாவித்ரி கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். வட இந்தியாவில் குறிப்பாக பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்களில், சாவித்ரி தேவிக்கு விரதம் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. நேபாளத்தில் கூட இப்படி அந்த நாளை நினைவு கூறுகிறார்கள்.

முக்கியமாக ஒடிசாவில் வசிக்கும் பெண்களில் கணிசமானவர்கள் ஆண்டுதோறும் பல நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் விரதம் இருப்பவர்கள். ஆண்டுக்கு 30 நாட்கள் இப்படிப் பல விரதங்களை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று சாவித்ரி விரதம்.

திருமணமான பெண்கள் மேற்கொள்ளும் விரதம் இது. ஜேஷ்ட மாதத்தில் அதாவது வைகாசி மாத அமாவாசை அன்று இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. சுமங்கலிகள் இந்த விரதத்தை மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார்கள். தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி அன்று விரதம் இருக்கிறார்கள். உயிரிழந்த கணவனுக்காக எமதர்மனிடம் வாதாடி அவன் உயிரை மீட்டு வந்தவள் சாவித்ரி என்பதை அறிந்திருப்பீர்கள்.

மகாபாரதத்தில் சாவித்ரி கதை இடம்பெறுகிறது. ஒருநாள் யுதிஷ்டிரர் ஒரு முனிவரிடம் ‘திரெளபதிக்கு இணையான பெண்மணி உண்டா?’ என்று கேட்க அந்த முனிவர் சத்யவான் சாவித்ரி கதையைக் கூறுகிறார். சாவித்ரி மாதாவுக்கான விரதத்தை அனுசரித்தால் பெண்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியும் பிற நலன்களும் உண்டாகும் என்றும் கூறுகிறார்.

பெண்கள் பல விரதங்களை மேற்கொள்கிறார்கள். அவற்றில் சாவித்ரி விரதம் மிக முக்கியமானது. இதை பக்தியுடன் மேற்கொள்ளும் பெண்களுக்கு குழந்தைச்செல்வம் உண்டாகும் என்பதும் அவர்கள் கணவர் ஆயுள் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை.

அன்று காலையில் எழுந்தது குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து கொண்டு கைகளில் வளையல்களை அணிந்துகொண்டு நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு விரதத்தைத் தொடங்குவார்கள். ஒன்பது விதமான மலர்களையும் பழங்களையும் சாவித்ரி தேவிக்கு நைவேத்தியம் செய்வார்கள். கணவருக்கும் குடும்பத்துப் பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்து அவர்கள் ஆசியைப் பெறுவார்கள். தண்ணீரைத் தவிர எதுவும் அன்று மாலைவரை சாப்பிட மாட்டார்கள். சில பெண்கள் மாலை நேரத்துக்கு பிறகு போகா என்ற சிற்றுண்டியை மட்டும் உட்கொள்வார்கள். மற்றவர்கள் அது கூட உட்கொள்ள மாட்டார்கள்.

தன் கணவன் என்று இறப்பான் என்பதை முன்னதாகவே அறிந்திருந்த சாவித்ரி அன்று விரதம் இருந்ததாகவும் அதன் பயனாகவே யமனைத் தொடர்ந்து சென்று அவனுடன் வாதிடுவதும் சாத்தியமானது என்றும் நம்பினாள். அதேபோல சாவித்ரி விரதத்தை மேற்கொள்ளும் பெண்களும் தங்கள் கணவருடன் நீண்ட காலம் இனிமையான இல்லற வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்; மனதுக்கு பிடித்தமான கணவர் கிடைப்பார் என்று நம்புகின்றனர். ஜாதகத்தில் தோஷம் உள்ள பெண்கள் இந்த விரதத்தை சிரத்தையுடன் கடைப்பிடித்தால் நல்ல கணவருடன் இல்லறம் வாய்க்கும் என்கின்றர்.

அன்று ஆலமரத்துக்கும் – முக்கியமான அதன் விழுதுகளுக்கும் – பூஜை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தியவான் சாவித்ரி கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது தொடர்பான கீழே உள்ள கேள்விகளுக்கு விடை கூற முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

1. சாவித்ரி யாருடைய மகள்?

2. சத்யவானின் தந்தை எந்தவித உடல் குறைபாடு கொண்டவராக இருந்தார்?

3. எந்தச் செயலைச் செய்து கொண்டிருக்கும்போது சத்யவான் இறந்தார்?

4. சத்யவான் சாவித்ரி கதையை தர்மருக்குக் கூறிய முனிவரின் பெயர் என்ன?

5. திருமணமாகி எத்தனை ஆண்டுகளுக்குப் பின் சத்யவான் இறந்தார்?

6. எந்த வரத்தை சாவித்ரிக்கு அளித்ததால் வேறுவழியின்றி சத்யவானின் உயிரை யமதர்மன் திருப்பித் தரும்படி ஆனது?

விடைகள்

1. மதுராவை ஆண்ட அஸ்வபதி என்பவரின் மகள்.

2. பார்வையிழந்தவர்

3. மரம் வெட்டிக் கொண்டிருக்கும்போது

4. மார்க்கண்டேய ரிஷி

5. ஒரே ஆண்டு

6. தனக்கு புத்திசாலியான மகன்கள் வேண்டும் என்று கேட்க, பின்தொடரும் சாவித்ரியைத் தவிர்க்க அந்த வரத்தை அளித்தார் யமதர்மன். ‘என் கணவர் இல்லாமல் எனக்கெப்படி மகன்கள் பிறப்பார்கள்?’ என்று சாவித்ரி கேட்க, வேறுவழியின்றி யமதர்மன் சத்யவானின் உயிரை திருப்பித் தரும்படி ஆனது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :