• தீபம் - ஆன்மீகம்

தர்மம் உரைத்த கீரிப்பிள்ளை!


எம்.அசோக்ராஜா

பாரதப் போர் முடிந்து கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பாண்டவர்கள் அரசாட்சியை ஏற்றுக்கொண்டார்கள். ஹஸ்தினாபுரமே விழக்கோலம் பூண்டது. கௌரவர்களைக் கொன்ற பாவம் நீங்க யாகம் ஒன்றைச் செய்ய விழைந்தார்கள் பாண்டவர்கள். யாகம் என்றால் இப்படி அப்படியல்ல. இந்திரனாலும் நடத்த முடியாத பிரம்மாண்ட யாகம். இதுவரை யாரும் செய்திராத யாகம்.

அதில் தேவர்களும் முனிவர்களும் வந்து கலந்து கொண்டார்கள். நாட்டு மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவும், பொன்னும் பொருளும் போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வாரி வழங்கப்பட்டன. மக்களெல்லாம் ஆஹா ஆஹாவெனப் புகழ்ந்தனர். ’இதுபோல் யாகம் இது வரைக் கண்டதில்லை; இனியும் காண்பது சந்தேகமே’ எனச் சொல்லிச் சொல்லிக் கொண்டாடினர்.

அன்று யாகத்தின் கடைசி நாள். மிகவும் பிரமாண்டமாயும், அனைவரும் போற்றும்படியும் நடந்த தாங்கள் செய்த யாகத்தை எண்ணி மிகவும் கர்வமும் செருக்கும் அடைந்தனர் பாண்டவர்கள். இது, அந்த யாகத்தில் கலந்து கொண்ட கண்ணனுக்குப் பிடிக்கவில்லை.

யாகம் முடியும் தருவாயில் கீரிப்பிள்ளை ஒன்று அவ்விடம் வந்தது. அதன் முதுகின் ஒரு பகுதி பொன்மயமாய் ’தக தக’வென மின்னியது. அதைக்கண்ட அங்கிருந்த அனைவரும் வியந்தனர். ஆனாலும், யாகம் நடக்கும் இடத்தில் கீரிப்பிள்ளைக்கு என்ன வேலை என அதனை அடித்து விரட்ட எத்தனித்தனர். ஆனால், பாண்டவர்களின் மூத்தவரான தருமர் அவ்வாறு செய்யாமல் தடுத்து விட்டார்.

வந்த கீரிப்பிள்ளை யாகம் நடந்த இடத்தில் படுத்து உருளத் தொடங்கியது. அங்கும் இங்கும் என ஒரு இடம் விடாமல் உருண்டது. அனைவரும் அதன் செய்கையை வியப்போடு பார்த்தனர். சட்டென எழுந்த .கீரிப்பிள்ளை உடலை அப்படி இப்படி ஆட்டி ஒட்டியிருந்த மணலை உதறியது. பின்னர் பாண்டவர்களைப் பார்த்து, "நீங்கள் கபடர்கள்... ஏமாற்றுக்காரர்கள்... பொய்யர்கள்.. நீங்கள் செய்த யாகம் பொய்யானது. இது ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்படாது. பெருமைக்காகவும் உங்களின் பணக்காரத் தனத்தைத் தெரியப்படுத்தவுமே இந்த யாகத்தைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் செய்த தானமும் தர்மமும் வீணானவை. நீங்கள் செருக்கடைந்துள்ளீர்கள்" என்றது. அது கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

கீரிப்பிள்ளையின் கூற்றைக் கேட்டு தருமரும் மற்றவர்களும் அதிர்ந்து போயினர். ’’ஏன் இப்படிச் சொல்கிறாய்?’’ என வினவினர்.

’’பதில் சொல்கிறேன். கேளுங்கள்’’’ என்றபடி சொல்ல ஆரம்பித்தது கீரி...

’’ஒரு ஊரில் ஏழை பிராமணன் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும், மகனும், மகளும் இருந்தனர். வருமானம் அதிகமில்லாத அவரால் குடும்பம் நடத்த முடியவில்லை. பல நாட்கள் அனைவரும் பட்டினி கிடப்பர். உணவு கிடைக்கும் நாட்களில் அரை வயிறு சோறுதான் கிடைக்கும்.

ஒரு நாள் அவரின் மகளுக்கும் மகனுக்கும் தாங்க முடியாத பசி. இருவரும் உணவு கேட்டு தாயிடம் அழுதனர். பாவம் தாய்தான் என்ன செய்வாள். அவர்களோடு சேர்ந்து அவளும், ’குழந்தைகளின் பசிக்கு உணவு கொடுக்க முடியவில்லையே’ என வருந்தி அழுதாள். இதை பார்த்த அந்த பிராமணர் மிகவும் வருத்தத்தோடு வெளியே சென்றார். திரும்பி வருகையில் கொஞ்சம் அரிசி மாவு கொண்டு வந்தார்.

அந்த மாவினை நான்கு பாகங்களாக்கி நால்வரும் எடுத்துக்கொண்டனர். அதை உண்ண எத்தனித்தபோது வாசலில், ’மிகுந்த பசியோடு இருக்கிறேன். உண்ண ஏதாவது கொடுங்கள்’ என்ற குரல் கேட்டது.

வாசலில் ஒரு சன்யாசி நின்றுகொண்டிருப்பதைக் கண்ட பிராமணர் தன் பங்கு மாவை அவர் உண்ணக் கொடுத்தார். அவர் மேலும் பசிப்பதாகச் சொல்ல, பிராமனரின் மனைவியும் தனது பங்கைக் கொடுத்தார். ’குறைந்த உணவு தனது பசியை மேலும் அதிகப்படுத்திவிட்டது’ என சன்யாசி புலம்ப, பிராமணரின் மகனும் மகளும் தங்கள் பங்கினையும் அவருக்குக் கொடுத்து விட்டனர். அப்போது நான் (கீரிப்பிள்ளை) அங்கே சென்றேன் அவ்விடத்தில் கொஞ்சம் மாவு தரையில் சிந்திக் கிடந்தது. அந்த மாவில் படுத்து உருண்டேன். சிந்திக் கிடந்த அந்த மாவு என் முதுகில் பட,. பட்ட இடம் பொன்னானது..காரணம், பசியால் துடித்திருந்த வேளையிலும் பசி என்று வந்தவர்க்கு தங்களுக்குக் கிடத்த அந்த சொற்ப உணவான மாவை கொடுத்தார்கள் அவர்கள்.

அதனால் அவர்கள் செய்த தானமே சிறந்தது. இறைவன் அவர்களின் தர்மத்தை ஏற்றுக்கொண்டான் என்பதற்கு மாவு பட்ட என் முதுகு பொன்னாய் ஆனதே சாட்சி. அந்த தானத்தால் அவர்கள் இறைவனால் பெரும் பொருளுக்கு உடையவர்கள் ஆனார்கள்.

ஆனால் நீங்களோ, பெருமைக்கும் பிறரின் போற்றுதலுக்கும் ஆசைப்பட்டு பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினீர்கள். அதோடு, மாபெரும் யாகம் செய்தோம் என கர்வம் கொண்டீர்கள். நீங்கள் செய்த யாகம் உண்மை என்றால் இவ்விடத்தில் படுத்து உருண்ட எனது முதுகு முழுதும் பொன்னாய் ஆகியிருக்கும். அவ்வாறு ஆகாமையால் உங்களின் யாகம் பொய்யானது. நீங்களும் பொய்யர்கள். பொய்யான உங்களைக் காணவே என் மனம் வருந்துகிறது’’ எனச் சொல்லி அவ்விடம் விட்டுஅகன்றது

தருமரும் அவரது தம்பியரும் வெட்கித் தலை குனிந்தனர்.

அதைக் கண்ட கண்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

Comments

Rajappa says :

அருமை.

U.AMBIKAPATHY. says :

Human beings are generally detatch from pride and vanity and attached with genoracity divinity &serenity unbiased. U.AMBIKAPATHY.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :