• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

49. சினிமாவும் சர்க்காரும்


- அமரர் கல்கி

தென்னிந்திய ஸ்டூடியோ சொந்தக்காரர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ எஸ்.எஸ்.வாசன் சமீப காலத்தில் சினிமாத் தொழிலின் பொருளாதார நுட்பங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து வருகிறார். சினிமாத் தொழிலினால் சர்க்கார் எவ்வளவு லாபம் அடைந்து வருகிறார்கள் என்பதையும், அதே சமயத்தில் தமாஷா வரி சினிமாத் தொழிலை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதையும் புள்ளி விவரங்களுடன் வெளியிட்டு வருகிறார். ஜனவரி 26 சினிமா டெக்னிஷியன்களின் சங்கத்தில் அவர் செய்த பிரசங்கத்தில் மேற்படி விவரங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

சாதாரணமாக இக் காலத்தில் ஒரு படம் எடுப்பதற்கு ஐந்து லட்சம் செலவாகிறது. இந்த மூலதனம் கடன் வாங்கப்பட்டதாயிருந்தால் வட்டியுடன் ஐந்தரை லட்சம் ஆகிறது. இந்த ஐந்தரை லட்சம் மூலதனத்தை சினிமாத் தொழிலில் துணிந்து போட்டவருக்கு ஒரு லட்சம் லாபம் வேண்டாமா! வேண்டியதுதான். இவ்வாறு ஆறரை லட்சம் சினிமா முதலாளிக்குச் சேர வேண்டுமானால் சர்க்காருக்குக் கொடுக்கும் வருமான வரியோடு சேர்த்துப் பத்தரை லட்ச ரூபாய் அவருக்குக் கிடைக்க வேண்டும். மேலும் இரண்டு லட்ச ரூபாய் பட விநியோகம் செய்யும் கம்பெனிக்குக் கொடுக்க வேண்டும். கொட்டகைகளில் படம் காட்டும் கொட்டகை முதலாளிகள் டிக்கட் வசூலில் பாதிதான் பட முதலாளிகளுக்குக் கொடுப்பார்கள். ஆகையால் மொத்தம் 25 லட்ச ரூபாய் வசூலாக வேண்டும். இத்துடன் கொட்டகைகளில் சினிமா டிக்கட்டுகளுடன் சேர்த்துச் சர்க்கார் சார்பில் வாங்கப்படும் தமாஷா வரியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அது ஒன்பது லட்சம் ஆகிறது.

ஆகக் கூடி, ஒரு படத்தைப் பார்க்கும் ஜனங்கள் 34 லட்ச ரூபாய் கொடுத்தால்தான். படம் எடுத்தவருக்கு முதலில் கடன் வாங்கிய மூலதனத்தைத் தவிர ஒரு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஒரு தமிழ்ப் படத்துக்கு மொத்தம் 34 லட்ச ரூபாய் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டு மென்றால், தமிழ் நாட்டில் கிழவர்களையும் குழந்தைகளையும் நீக்கி ஏறக்குறைய வயது வந்தவர்களெல்லாம் பார்த்தாக வேண்டும். அல்லது பார்த்தவர்க@ள திருப்பித் திருப்பிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தவர்களை திருப்பித் திருப்பிப் பார்க்க வேண்டுமென்றால், படத்தில் மிகக் கவர்ச்சிகரமான அம்சங்களை வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால், பார்க்க மாட்டார்கள்.

சுமாரான வெற்றி தரக்கூடிய சாதாரண படங்களுக்குத்தான் இந்தப் புள்ளி விவரங்கள் பொருந்தும். சந்திரலேகா” போன்ற முப்பது லட்சம் செலவில் எடுக்கப்பட்ட படமாயிருந்தால், இதற்குப் பன்மடங்கு பணம் ஜனங்கள் கொடுத்தாக வேண்டும். அதற்குத் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் பார்த்தால் போதாது. வட நாட்டாரும் பார்த்தாக வேண்டும். அதாவது கோடிக்கணக்கான ஜனங்கள் திரும்பத் திரும்பப் பார்த்தாக வேண்டும். அப்போதுதான் அத்தகைய செலவு மிகுந்த படத்துக்குப் போட்ட பணத்துக்கு மேலே லாபம் கிடைக்கும்.

பல முதலாளிக்குப் போட்ட பணமும் லாபமும் கிடைக்கிறதோ, என்னமோ, சர்க்காருக்குத் தமாஷா வரி மட்டும் நிச்சயம் கிடைத்து விடுகிறது. எடுக்கும் படங்களில் அநேகம் வெற்றி அடைவதில்லை; போட்ட மூலதனம் முழுதும்கூட வருவதில்லை; ஆயினும் வசூலாகும் வரையில் சர்க்காரின் தமாஷா வரிப் பங்கு மட்டும் கிடைத்து விடுகிறது.

“சந்திரலேகா” படத்தின் மூலம் சர்க்கார் அடைந்திருக்கும் வரி வருமானத்தை இன்னொரு சர்ந்தர்ப்பத்தில் ஸ்ரீ எஸ்.எஸ்.வாஸன் வெளியிட்டார். வருமான வரி மூலம் மத்திய சர்க்காரும் தமாஷா வரிகள் மூலம் மாகாண சர்க்கார்களும் அப்படத்தினால் சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் வருமானம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறினார்.

மற்றொரு ‘பாக்ஸ் ஆபீஸ்’ வெற்றியான ‘சம்சாரம்’ படத்தின் மூலமும் அவ்வளவு வருமானம் மத்திய சர்க்காரும் மாகாண சர்க்கார்களும் அடைந்திருக்கக்கூடும்.

இம்மாதிரியே வெற்றிகரமாக ஓடிய மற்றும் பல படங்களும் சாதாரணமாக ஓடிய படங்களுடன் கூடப் பல்வேறு சர்க்கார்களுக்கு ஏராளமான வருமானம் அளித்து வந்திருக்கின்றன.

“இப்படியெல்லாம் கோடிக் கணக்கில் சர்க்காருக்கு நாங்கள் வருமானம் கொடுத்து வந்திருக்கிறோம். அப்படியிருக்க, எங்களுக்குச் சர்க்கார் நன்றி செலுத்திப் பாராட்டுவதற்குப் பதிலாக மேலும் மேலும் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறார்களே?” என்று சினிமா அதிபர்கள் குறைபடுவது இயல்பேயாகும்.

இவ்வளவு பெரிய வருமானத்தைச் சர்க்காருக்கு அளிக்கக் கூடிய ஒரு தொழிலை சர்க்கார் பிரதிநிதிகள் அலட்சியம் செய்ய முடியாது. அலட்சியம் செய்வது யுக்தமும் ஆகாது.

இந்திய சர்க்காரும் சரி, மாகாண சர்க்காரும் சரி, வருமானப் பெருக்கத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களானால், சினிமாத் தொழில் சம்பந்தமான எல்லாவிதக் கட்டுப் பாடுகளையும் தணிக்கை விதிகளையும் எடுத்துவிட முன் வருவார்கள். “எப்படியாவது உங்கள் இஷ்டப்படி கவர்ச்சிகரமான படங்களைப் பிடித்து வெளியிடுங்கள். எங்களுக்கும் நிறைய வருமானத்தைச் சம்பாதித்துக் கொடுங்கள்” என்று சினிமா அதிபர்களுக்குச் சொல்லி விடுவார்கள்.

ஆனால், இன்று நமது அரசாங்கங்களை நடத்தி வருகிறவர்களில் பலர் காந்தீய வழிகளில் பயிற்சி பெற்று வந்தவர்கள். பண வருவாயை மட்டும் முக்கியமாகக் கருதுகிறவர்கள் அல்ல. தேச முன்னேற்றமும் மக்களின் தார்மிக முன்னேற்றமும் அவர்களுக்குப் பிரதானமானவை.

சென்னை இராஜ்ய சர்க்கார் வருஷந்தோறும் மதுவிலக்குச் சட்டங் காரணமாகப் பதினெட்டுக் கோடி ரூபாய் வருமானத்தை இழந்து வருவது ஒன்றே இதற்கு அத்தாட்சியாகும்.

இன்று மதுவிலக்கை ரத்து செய்துவிட்டால் சென்னை சர்க்காரின் பொருளாதாரக் கஷ்டங்கள் எல்லாம் ஒரே அடியில் தீர்ந்து போய்விடும். ஆயினும் மதுவிலக்குச் சட்டத்தை எடுக்க முடியாது என்று உறுதியாக இருந்து வருகிறார்கள்.

ஆகையால் பண வருமானத்தை மட்டும் முக்கியமாகக் கருதி இப்போதுள்ள மத்திய சர்க்காரும் இராஜ்ய சர்க்கார்களும் சினிமாத் தொழிலுக்குச் சலுகை காட்ட மாட்டார்கள்.

அதே சமயத்தில், சினிமாத் தொழில் மதுபானத்தைப் போன்ற சமூகத் தீமை உண்டாக்கும் சாதனம் அல்ல. சினிமாவை சமூக முன்னேற்றத்துக்கு மிகச் சிறந்த மூலதனமாகப் பயன்படுத்தக் கூடும். நமது சர்க்கார் பிரதிநிதிகள் பலரும் இதை உணர்ந்திருக்கிறார்கள். ஸ்ரீ கேஸ்கர் உணர்ந்திருக்கிறார் என்பது அவருடைய பேச்சின் போக்கிலிருந்து நன்கு வெளியாகியிருக்கிறது.

ஆதலின் சினிமாத் தொழிலில் ஈடுபட்டவர்களும் சர்க்கார் பிரதிநிதிகளும் அடிக்கடி கலந்து பேசி அபிப்பிராயப் பரிவர்த்தனை செய்து கொள்வதினால் இரு சாராருக்கும் நன்மை உண்டு; இரு சாராருக்கும் லாபமும் உண்டு.

சமீபத்தில் சினிமா சம்பந்தமாக நடந்த விவாதங்கள், பேச்சுக்கள் இவற்றின் மூலம் ஓர் உண்மை சிறிதும் சந்தேகத்துக்கிடமின்றி வெளியாகியிருக்கின்றது. அதை இங்கே முக்கியமாக எடுத்துக் காட்ட விரும்புகிறோம்:-

தேச முன்னேற்றத்துக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உகந்த முறையில் எடுக்கும் நல்ல படங்கள் ஜன ரஞ்சகமான படங்களாகவும் அமைந்தால், அவை சினிமாத் தொழிலில் சிரத்தை கொண்ட அனைவருக்கும் நலம் அளிக்கின்றன.

1. சினிமா முதலாளிகள் போட்ட முதலையும் எடுத்து அதற்கு மேல் ஆதாயமும் அடைகிறார்கள்.

2. சினிமாக் கொட்டகைக்காரர்களும் நல்ல வருமானம் அடைகிறார்கள்.

3. சினிமாவில் நடித்தவர்கள் பணத்துடன் பெயரும் புகழும் பெறுகிறார்கள்.

4. மத்திய சர்க்காரும் மாகாண சர்க்கார்களும் வருமான வரி, தமாஷா வரிகளின் மூலம் நல்ல வருவாய் பெறுகிறார்கள். இவ்விதம் சினிமா மூலம் சர்க்கார் அடையும் வருமானத்தைச் சமூக முன்னேற்றத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

5. நல்ல சினிமாப் படங்கள் பொது மக்களுக்கு உல்லாசப் பொழுது போக்காகப் பயன்படுகின்றன. வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைச் சிறிது நேரமாவது மறந்து உற்சாகமாக இருக்க உதவுகின்றன. கலைச் சிறப்பு வாய்ந்த படமாகவும் இருந்து விட்டால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாகிறது.

ஆதலின், சினிமாப் பட முதலாளிகள், தொழில் நிபுணர்கள், நடிகர்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய விஷயம். ஒழக்கக் கேடு உண்டாக்காத நல்ல படங்களை ஜன ரஞ்சகமாகவும் எடுப்பதற்கு என்ன வழி என்பதுதான்.

இத்துறையில் சினிமாத் தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தும் போது, சினிமாவின் மூலம் நல்ல வருமானம் பெற்று வரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அவர்களுடன் பூரணமாக ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

(கல்கி, பிப்ரவரி 8, 1953)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :