• தீபம் - ஆன்மீகம்

இசுலாமியப் பெண் ஸ்ரீ துலுக்க நாச்சியார்!


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 11 - அமிர்தம் சூர்யா

நான் என்பது ஒற்றை நானல்ல; பல நான்களின் தொகுப்பு. அதாவது, அழகியல் - நான், அரசியல் - நான், உளவியல் - நான், சமூக - நான்... இப்படிப் பல நான்கள்.

உலகம் என்பது ஒற்றை உலகம் அல்ல; அறிந்த உலகம், அறியாத உலகம், விண்ணுலகம், ஆவி உலகம், பாதாள உலகம் இப்படிப் பல உலகங்களின் தொகுப்புதான் உலகம். நீ பார்க்கவில்லை என்பதால் அப்படியொன்று இல்லை என்றாகாது.

அறிதல் முறையும் ஒன்று அல்ல; புலன்களின் வழியாக அறிவது, வாதத்தின் மூலம் அறிவது, முன்னோர்கள் மூலம் அறிவது, தியானத்தின் மூலம் அறிவது இப்படிப் பல அறிதல் முறைகள் உண்டு.

இதில் ஏதேனும் ஒரு நான் - ஏதாவது ஒரு அறிதல் முறையின் மூலம் - ஒரு உலகத்திலிருந்து வேறு உலகத்துக்குப் பயணப்படும்போது கிடைக்கும் அல்லது அகப்படும் அல்லது புலப்படும் அல்லது உணரப்படும் காட்சியைத் தான், உணர்வைத்தான தரிசனம் என்கிறோம்.

உதாரணத்துக்கு, பல்லாயிரம் வருஷம் ஆப்பிள் பழுத்து தரையில் விழுவதைப் பார்த்து இருந்தாலும் ஒருவனுக்கு மட்டும்தான் அந்தக் காட்சி தரிசன மாகிறது. உண்மையை உணர்த்துகிறது. அதைத் தேடிப் போகிறான். அதற்கு புவியீர்ப்பு விசை என்று விளக்கத்தை அறிவிக்கிறான். அப்படியானதுதான் இந்த ஆன்மிகமும் தரிசனமும் இறையை உணர்தலும்.

அந்த அனுபவத்துக்கு ஏதும் குறுக்கீடு அல்ல. மதம், சாதி, இனம் ஏன் பால் பாகுபாடு கூட தேவையில்லை.

மிகவும் பிரபலமான வைணவ பஜனை பாடகர் விட்டல் மகராஜ், இசுலாமிய நாகூர் ஹனீபா பாடிய ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலைப் பாடியபோது. திரளான மக்கள் கூட்டம் கொண்டாடியது.

இசுலாமியரான ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து, ‘வந்தே மாதரம்’ பாடலை பாடினார். நாடே கொண்டாடியது. இந்த இருவரிடமும் எந்த இடத்திலும் இறைவனின் ஓசையை, மானுடத்தின் சப்தத்தை தவிர, வேறு ஏதும் கேட்கவில்லை. சில முட்டாள் இதயங்களுக்கு மட்டுமே மதம் ஒலிக்கும்.

மனிதர்களுக்குத்தான் மத பாகுபாடு. இறைவனுக்கு அல்ல. அதற்கு உதாரணம் இசுலாமிய பெண்ணான பீபி என்கிற சுரதாணிக்கு, ‘ஸ்ரீ துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தனிச் சன்னதி உள்ளது தெரியுமா?

‘என்னது...? வைணவ கோயிலில் முஸ்லிம் பெண்ணுக்கு வழிபாடா? முஸ்லிம் பெண்ணுக்கு திருமால் மீது பக்தியா?

ஆம்... அதற்கு முன் இந்தக் காட்சியை நீங்கள் உங்கள் மனதில் கற்பனையில் ஓட்டிப் பாருங்கள்.

மன்னர் முன்பு அடக்கத்துடன் கூடிய பெருமிதத்துடன் நின்றான் படைத்தளபதி மாலிக் கபூர். டில்லி சுல்தான் அப்துல்லா உசேன் கசன்பியிடம் முன்பு தான் கொள்ளையடித்து வந்த பொற்குவியலை மன்னன் முன் வைத்து விட்டு நிற்கிறான் மாலிக். பேரானந்தத்துடன் மன்னர், ‘சபாஷ் மாலிக்’ என்று பாராட்டி விட்டு அந்தப் பொக்கிஷங்கள் மொத்தத்தையும் உருக்கச் சொல்கிறான். அப்போது, அவரது மகள் சுரதாணி என்ற பீபிக்கு அந்த பொற்குவியலில் இருந்த ஒரு சிலை மட்டும் கண்களைக் கவர்கிறது.

உடனே அவள், “வாப்பா, எனக்கு அந்தச் சிலை விளையாட வேண்டும்” என்று கேட்கிறாள். இளவரசி அந்தஸ்து கொண்ட பெண்ணாயிற்றே... மன்னர் அந்தத் திருமால் சிலையை அவள் விளையாட எடுத்துக் கொடுக்கிறார். அந்தச் சிறுமி அதை எடுத்துக்கொண்டு அந்தப்புரம் செல்கிறாள்.

ஸ்ரீரங்கம் கோயிலில் தினமும் முக்காலமும் அபிஷேகமும், குறைவில்லா நைவேத்தியமும், திருவிழாக்களும் கண்ட மாலவனுக்கு அந்தச் சிறு பெண் ரொட்டியையும், தாலையும் (பருப்பு) சாப்பிடக் கொடுத்து விளையாட ஆரம்பிக்கிறாள்.

திருமால் சிலை பொருத்தமான இணைபிரியாத தோழனாகிப் போகிறது சிறுமி சுரதாணிக்கு. அரண்மனையில் இருந்த ஒரு இந்து பணிப்பெண் வியந்து, ‘அட... கண்ணன் சிலை’ என்கிறார்.

அதைக்கேட்ட சுரதாணி, “யார் அந்தக் கண்ணன்?” என்று கேட்கிறாள். அதற்கு அவளோ, “கண்ணன், கிருஷ்ணன், திருமால் என எல்லா ரூபத்தின் கதையையும் சொல்லச் சொல்ல, திருமால் மீது சுரதாணி காதல் கொள்கிறாள். அந்தச் சிலையை மனித ரூபமாகவே பாவித்து அதனோடு பேசிப் பழகுகிறாள். இப்படியாக சில வருடங்கள் போகின்றன.

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் கனவில் வந்த திருமால், ‘ஏழை எளியவர்களும் தரிசிக்க நீ டில்லி பாதுஷாவிடம் உள்ள எனது உத்ஸவ விக்ரகத்தை கேட்டு வாங்கி வா’ என்பதாகச் சொல்கிறார். மறுநாள் நிறைய அடியார்களோடு ஸ்ரீ ராமானுஜர் டில்லிக்குப் பயணமாகிறார். மன்னரிடம் அந்தச் சிலையைத் தந்து விடும்படி கேட்கிறார். ஆனால் அவரோ அகந்தை யோடு, “அது கடவுள் சிலையா? அப்படியானால் நீ கூப்பிட்டுப் பார். அவர் வந்தால் அழைத்துப் போ” என்கிறார். ராமானுஜர் அழைக்க, சுரதாணியின் படுக்கை அறையிலிருந்த அந்தச் சிலை நடந்து இவரிடம் வந்ததாம். இந்தக் காட்சியைக் கண்டு வியந்த மன்னர், அந்த திருமால் சிலையோடு ராமானுஜருக்கு நிறைய பரிசுப் பொருட்களையும் கொடுத்து அனுப்பி வைத்தார். தன்னுடன் ஏராளமான செல்வத்தையும் கொண்டு வந்ததனால் அன்றிலிருந்து அந்தத் திருச்சிலைக்கு, ‘யதிராஜ சம்பத் குமாரன்’ என்று பெயர் வந்தது.

இங்கோ, தனது நண்பனை, காதலனை, சாமியைக் காணாது அழுது புலம்புகிறார் பீபி எனும் சுரதாதணி. பதறித் துடித்துத் தேடி... அரண்மனை முழுவதும் ஓடி, பைத்தியம் பிடித்தவள் அலைகிறாள். மன்னர் எவ்வளவோ சமாதானம் செய்கிறார். “உனக்குக் கல்யாணம் செய்ய அந்தச் சிலை வழிபாடு தடையாக இருக்கும்” என்கிறார்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. எனது ஹுசூர் (அரசர்) இல்லாமல் என் உயிர் தங்காது” என்று அழ, பாதுஷா மீண்டும் எப்படியாவது ராமானுஜரிடம் இருந்து அந்தச் சிலையைக் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார்.

அதற்குள் தில்லியிலிருந்து பீபியே தமிழகத்துக்குக் கிளம்பி விட்டாள். அவளது வாய், ‘கண்ணா... கண்ணா...’ என முணுமுணுத்தபடியே இருக்கிறது. அதன் பின் அவர் புகழும் பக்தியும் நாடு முழுக்க பரவுகிறது. சாலை முழுக்க மக்கள் பீபியை தெய்வப் பிறவி எனக் கருதி வணங்குகின்றனர். ஆனால், அவர் யாருக்கும் ஆசியோ, நற்சொல்லோ வழங்கவில்லை. ‘கண்ணா... கண்ணா...’ எனும் ஒற்றைச் சொல்லில் அவளது மனம் குவிந்து கிடக்கிறது. குவிந்த ஒரு புள்ளியில் நிலைத்த மனம் எல்லோருக்கும் ஆசியை அரூபமாக வழங்கியது.

‘திருமாலின் விக்ரகம் மீண்டும் பாதுஷா கைக்குப் போய்விடக் கூடாதே’ என்று எண்ணி, அந்த விக்ரகத்தை மறைத்து வைக்க திருச்சிக்கு வந்த பீபி, அங்கு அந்த விக்ரகம் இல்லாதது கண்டு, அழுது புலம்பி மயங்கி விழும்போது, திருமால் பீபியை தாங்கிப் பிடித்து தனது பிரம்மாண்ட ரூபத்தை காட்டி தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டார்.

அதன்பின்னர், சோழ மன்னன் கனவில் வந்த அரங்கன், சுரதாணி என்ற பீபி நாச்சியாருக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் தனிச் சன்னிதி அமைக்கும்படி கட்டளையிட்டான். அதன்படி அமைந்ததுதான் அரங்கன் கருவறைக்கு வடகிழக்கு மூலையில் சுரதாணிக்கு ஒரு சன்னிதி. அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவத்தைத் தீட்டி, ‘ஸ்ரீ துலுக்க நாச்சியார் என அழைத்து வழிபட்டு வருகின்றனர். அன்று தொட்டு பெருமாளுக்கு இசுலாமியர் வழக்கப்படி இங்கு காலையில் ரொட்டி, வெண்ணெய், இரவில் பால் முதலியன நித்தமும் அமுது செய்விக்கப்படுகின்றன.

திருமஞ்சன காலத்தில் சுவாமிக்கு இசுலாமியரைப் போலவே கைலி (லுங்கி) சாத்தும் வழக்கமும் நடைபெறுகிறது. இது இறைவன் சொல்லிச் செய்யப்பட்டதா? மகான்களின் ஏற்பாடா? தெரியாது. ஆனால், வேற்று மதத்தைச் சார்ந்த ஒரு பெண் திருமால் மீது பக்தியும் காதலும் கொண்டு அவரோடு கலந்தார் என்பதுதான் இந்தக் கட்டுரை கூறும் செய்தி.

இவற்றை எல்லாம் தாண்டி, ‘ஸ்ரீ துலுக்க நாச்சியார் என்றொருவர் இல்லை. ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் இசுலாமியப் படையெடுப்பு அல்லது ஆட்சி டில்லியில் இல்லை’ என்ற கருத்தை ஒருசிலர் முன்வைக்கின்றனர்.

ஸ்ரீ உ.வே.அண்ணங்கராச்சார்யார் ஸ்வாமி அவர்களின், ‘ஸ்ரீ ராமானுஜன் 246’ இதழில் வெளியான கட்டுரையில் 1097-1100 காலத்தில் தில்லியை உள்ளடக்கிய கசானாவிட் முஸ்லிம்கள் ஆட்சி கீழ் வந்துவிட்டது என்றும், ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் தில்லி சுல்தான்களின் ஆட்சியில்தான் இருந்தது. 1097க்கு முன் முஸ்லிம்களின் படையெடுப்பு மைசூர் வரை வந்து சென்றதை தொண்டனூர் கல்வெட்டு ஆதாரத்துடன் காட்டுகிறது. (The life of Ramanuja by A.Govindacharya) இசுலாமிய படையெடுப்பில் திருநாராயணபுரம் பெருமாள் திருமேனி கொள்ளையடிக்கப்பட்டதும், பின் பெருமாள் விக்ரகம் மூன்றாம் மசூத் அரண்மனையில் அவனது பெண் பீபியின் அன்புக்கு ஆளானதும், உடையவர் பெருமாளின் விக்ரகத்தினை மீட்டெடுக்கச் சென்றதும் வரலாறு.என்று குறிப்பிடுகிறது.

நமக்கு இந்த ஆய்வெல்லாம் தேவையில்லை. பிறகு ஏன் இந்தச் செய்தி என்றால் எதையும் வாய்வழிக் கதையாக இந்த சக்தி சித்தர் தொடரை பொறுப்பற்று வெறும் நம்பிக்கையின்பால் மட்டுமே எழுதவில்லை எனக் காட்டத்தான். நண்பர்களே, சாதி, மதம், இனம் கடந்து இறையை உணர்வதும், அனுபவிப்பதும் அதனோடு ஐக்கியமாவதும்தான் அசலான ஆன்மிகம்.

நீங்கள் திருச்சி போனால், மதம் கடந்த அந்த சக்தி சித்தரை தரிசித்து விட்டு வாங்க. காதல் கைகூட, விரும்பியவரைத் திருமணம் செய்ய ஸ்ரீ துலுக்க நாச்சியாரிடம் பக்தர்கள் வேண்டிக்கொள்வார்களாம். ஏனென்றால், அந்த உணர்வை முழுமையாக உள்வாங்கிய ஒரு பெண்ணுக்குதானே அதன் அருமையும் வலியும் புரியும்.

ஒரு முக்கியமான விஷயம்... ‘விழா நேரத்தில் துலுக்க நாச்சியாரை சந்திக்க திருமால் கைலி கட்டுவார்’ என்பதற்காக நீங்கள் கைலியோடு (லுங்கியோடு) கோயிலுக்குப் போய்விடாதீர்கள். கோயிலில் அனுமதிக்க மாட்டார்கள். சரியா?

(தரிசனம் தொடரும்)

Comments

விஜி முருகநாதன் says :

அந்தக் கடைசிவரி வாய் விட்டு சிரிக்க வைத்தது..அந்தப் பெண் பீபீ நாச்சியார் இன்னொரு ஆண்டாளாகவே என் கண்ணுக்குத் தெரிகிறாள்.ஒருவேளை இவளும் இந்தியில் கண்ணன் மேல் கவிதை எழுதி அதெல்லாம் வராமலே கூடப் போயிருக்கலாம்..பதிவு அருமை..சூர்யாவின் வரிகள் அபாரம்.

Mangalagowri says :

இந்த கதையை வேறொரு கோணத்தில் படித்திருந்தாலும், சாரம்சம் என்னவோ ஒன்றுதான். காதல் என்றாலும் பக்தி என்றாலும் சரணாகதிதான் நாம் கண்டுக் கொள்ளும் தத்துவம். அந்த அம்மாவின் அன்பு என்னை எப்போதும் ஈர்க்கும் ஒன்று. ஸ்ரீரங்கம் வரை செல்ல இயலாதவர்கள், இந்தப் பக்கம் மஹாபலிபுரத்தில் இருக்கும் ஸ்ரீ ஸ்தல பெருமாள் ஆலயத்திலும் பின் பக்க சுற்று சுவரருகே இருக்கும் துலுக்க நாச்சியாரை கண்டு வரலாம். சின்ன அறையில் பூட்டு போட்டு வைத்திருப்பார்கள். ஆகவே கவனமாக தேடி பார்க்கவும். நன்றி சூரியா

சுவடு மன்சூர் says :

அழகான வர்ணனை ..!! அந்த முடிவு கைலி ... பல கோவில்களில் என்னைச் செல்ல விடாமல் தடுத்ததை நினைவு படுத்தியது.. வாழ்த்துகள் தோழரே..

கனகா பாலன் says :

மிக வியப்புக்குரிய சேதி..மனித உணர்வுகளுக்கு மதமேது..அன்பு காதல் பிடித்தமாகிப்போவதெல்லாம் அதற்கு அப்பாற்பட்டதுதானே..சிறப்பான கட்டுரையை தாங்கள் கூறிய விதம் அழகு..வாழ்த்துகள் சார்

K.anuradha says :

மீரா ,ஆண்டாள் எல்லோரையும் நினைவுபடுத்துகிறார் துலுக்க நாச்சியார்.மனம் குவித்து தியானம் செய்தால் இறையை அடையலாம். நல்லா இருந்த்து சூர்யா சார்.

முகமது பாட்சா Mohumed batcha says :

இசுலாமிய நாகூர் ஹனீபா பாடிய ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலைப் பாடியபோது. திரளான மக்கள் கூட்டம் கொண்டாடியது. இசுலாமியரான ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து, ‘வந்தே மாதரம்’ பாடலை பாடினார். நாடே கொண்டாடியது. இந்த இருவரிடமும் எந்த இடத்திலும் இறைவனின் ஓசையை, மானுடத்தின் சப்தத்தை தவிர, வேறு ஏதும் கேட்கவில்லை. சில முட்டாள் இதயங்களுக்கு மட்டுமே மதம் ஒலிக்கும்.

Prabhamurugesh says :

அதானே சூர்யா, இன்னும் துலுக்கம்மையின் சரிதம் சக்தி சித்தர் தொடரில் வரவில்லையே என நினைத்த மாத்திரத்தில் ..பிரவாக ஊற்றாக பொங்கி உளம் நிறைத்த உங்களின் எழுத்துக்கள் வெகு அருமை ..

G Srikanth says :

கைலி கட்டியவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என எழுதியே வைத்துள்ளனர். ராமானுஜர் செல்லப் பிள்ளையே வா என அழைத்ததும் விக்கிரகம் அவரை நாடி வந்ததாகப் படித்திருக்கிறேன். மதப்பற்று இருக்கலாம் அது வெறியாக மாறக்கூடாது என்பதே என் கருத்து

லலிதா முரளீதரன் says :

மைசூர் அருகில் உள்ள மேல் கோட்டை என்ற ஊரில் ஸ்ரீ ராமானுஜர் பாதுஷா வின் அரண்மனையில் தங்கி " செல்லப்பிள்ளை மே வா" என் அழைக்க கொலுசு சத்தத்துடன் கிருஷ்ணர் விக்கிரகம் நடந்து வந்து ராமானுஜரின் மடியில் அமர்ந்ததாக சொல்வார்கள்.அங்கு கிருஷ்ணருக்கு" செல்லப் பிள்ளை" என்றே பெயர்.

Suseela moorthy says :

அசத்தலான தொடர்.. #இதில் ஏதேனும் ஒரு நான் - ஏதாவது ஒரு அறிதல் முறையின் மூலம் - ஒரு உலகத்திலிருந்து வேறு உலகத்துக்குப் பயணப்படும்போது கிடைக்கும் அல்லது அகப்படும் அல்லது புலப்படும் அல்லது உணரப்படும் காட்சியைத் தான், உணர்வைத்தான தரிசனம் என்கிறோம்.# .. தரிசனத்துக்கான விளக்கமும் அதற்குப் புவியீர்ப்பு விசையை உதாரணமாகக் காட்டியிருப்பதும் அட்டகாசம் .. நான் என்பவன் உலகத்தில் பயணிப்பதே முழுமையை நோக்கிய அறிவின் பயணம் .. பாலத்தின் மீது பயணிக்கும் போது வீழ்ந்துவிடாமல் சமன் செய்ய மெய்ஞானமும் விஞ்ஞானமும் இருபக்கமும் பற்றிக்கொள்வதற்கான பிடிமானங்கள் என்பதை சித்தர் வரலாற்றுக்குள் ஆப்பிள் விழுந்த விஞ்ஞானத்தைப் பொருத்தி மலைக்க வைத்துள்ளீர்கள்.. ஏற்கெனவே தெரிந்த ஒன்று என்றாலும் கூட சூர்யா கைபட அது புதிதாய் மிளிரக் காரணம் அலுப்புத் தட்டாத எழுத்துநடை... துலுக்கம்மை ஆண்டாளை நினைவூட்டுகிறார்.. மதம் தாண்டிய பக்தியும் காதலும் பிரவாகமாய்ப் பொங்குகிறது .. "சில முட்டாள் இதயங்களுக்கு மட்டுமே மதம் ஒலிக்கும் " எனக்கு நிரம்பப் பிடித்த வரி.. என் ஒவ்வொரு கருத்தீட்டிலும் இத்தொடரைத் தொகுத்து வெளியிடுங்கள் என்ற வேண்டுகோளைத் தவறாமல் பதிகிறேன் .. வாழ்த்துகள் சூர்யா

ப்ரியா பாஸ்கரன் says :

முட்டாள் இதயங்களுக்கு மட்டுமே மதம் ஒலிக்கும்.. அற்புதமான வரி. ஆகா வைஷ்ணவ கோயிலில் இசுலாமியர் முறைப்படி நெய்வேதியமா.. மத நல்லிணகக்த்தை காட்டும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தக் கட்டுரையை வாசித்த பொழுது காட்சிகள் கண்முன்னே விரிந்தன. ஆன்மீகமும், காதலும் ஒருங்கே சமமாக இருக்கும் வீதமாக இருக்கிறது ஶ்ரீ துளுக்க நாச்சியார் புராணம். பல புதிய தகவல்களை அறிந்தேன். எழுத்து நடை வெகு சிறப்பு. பல ஆதாரங்களுடன் கட்டுரை மிளிர்கிறது. ஶ்ரீரங்கம் செல்லும் ஆவலையும் தூண்டுகிறது. இனிய வாழ்த்துக்கள் சூர்யா.

MATHIPRIYA S says :

கல்கி.. என்ன முடிவில் இருக்கிறது.. மொத்தத்தில் என்னை முழுவதும் ஆன்மீக கடலில் விழவைக்க வேண்டுமா

ப. தாணப்பன் says :

ஆண்டாள், பக்த மீரா போன்று துலுக்க அல்லது பீவி நாச்சியார். கட்டுக் கதையல்ல சான்றுதான் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் சொன்னது தேடுதலுக்குக் கிடைத்த வெற்றி. அந்த் தாயார் சந்நிதியில் நின்று தரிசிக்க ஆவல் பிறக்கிறது. கூடவே அஙகே இருக்கும் ராமானுஜரையும்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :