• தீபம் - ஆன்மீகம்

திருமலை பெருமாளுக்கு வேங்கமாம்பா ஆரத்தி!


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 10 - அமிர்தம் சூர்யா

`வாழ்க்கை ஒரு வட்டம்` என்று சொல்வோம். வட்டத்தில்தான் இயக்கம் இருக்கும். நமது மொழியின் உயிர் எழுத்துக்களை எல்லாம் வட்ட வடிவில்தான், அதாவது இடமிருந்து வலமாக ஒரு வட்டம் போல்தான் எழுத முடியும். காலம் கூட வட்டம்தான். அது நேர்கோடு அல்ல. நேர்கோடாக இருந்தால் எதுவும் மீண்டும் தொடராது, சந்திக்காது. அக்காலத்தில் பெருமாள் மீது காதல் கொண்டு ஆண்டாள் இருந்தாள்... பிறகு மீரா வந்தாள். அதன் பிறகு அந்த வட்டம் தரிகொண்டா வேங்கமாம்பாவில் வந்து முடிகிறது.

இந்தப் பெயரை தமிழர்கள் அதிகம் கேட்டு இருக்க வாய்ப்பு குறைவு. ஆனால், தெலுங்கர்கள் நன்கு அறிவார்கள். நான் மூன்று வருடத்துக்கு முன் மாத்தூரில் வீடு வாங்க தேடி வந்தபோது, முதல் பிரதான சாலையில் ஒரு போர்டு... ‘ஸ்ரீ வேங்கமாம்பா மாவு கடை’’ என்று. நான் கடைக்குப் போய் இருபது ரூபாய் மாவு பாக்கெட் வாங்கிக்கொண்டு, “யார் அந்த வேங்கமாம்பா?” எனக் கேட்டு, விவரம் பெற்று வீட்டுக்குப் போனால் மனைவி ஒரே திட்டு. “வீட்டில் நான் அரைச்சு வைச்ச மாவு இருக்கும் போது, கடை மாவு ஏன்? லூசாப்பா நீ?” என்று. இன்று அந்தத் தகவல்தான் இந்தக் கட்டுரைக்கு அடிப்படை.

நண்பர்களே... இப்பொழுதும் திருப்பதியில், ‘தரிகொண்ட வேங்கமாம்பா அன்ன பிரசாத மையம்’ என்ற போர்டைப் பார்க்கலாம். யார் அந்த வேங்கமாம்பா? அது யாருடைய பெயர்?

திருப்பதி பெருமாள் கோயில் நடை சாத்தும்போது ஒரு பாடல் பாடி கற்பூர ஆரத்தி எடுத்து. அதன் பின்தான் கருவறையை மூடுவார்கள். அதற்கு, ’வேங்கமாம்பா ஆரத்தி’ என்று பெயர். யார் அந்த முக்கியத்துவம் பெற்ற வேங்கமாம்பா?

சக்தி சித்தர்களில் இன்று நாம் வாசிக்கப்போவது சைவத்தில் அல்ல, வைணவத்தில் இருந்து ஒரு சக்தி வாய்ந்த பெண்மணியைப் பற்றித்தான். அவர்தான், ’தரிகொண்ட வேங்கமாம்பா’ என்ற தெய்வப் பெண்மணி. எல்லோர் மீதும் தம் யோக சக்தியைப் பாய்ச்சி, மக்களின் துயர் போக்குவதில் மட்டுமல்ல; எல்லோர் மனதிலும் இறைவனை தமது பாடல்கள் மூலம் பிரதிஷ்டை செய்வதிலும் வல்லவர். ஆம்... அவர் தெய்வங்கள் மீது கீர்த்தனைகள் எழுதுவதில் புலமை வாய்ந்தவர்.

பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா என்பவர் எழுதிய ஒரு குறிப்பில்...

’தெய்வ பக்தி இல்லாத சங்கீதத்தை நம் நாட்டு மக்களின் இதயம் ஏற்காதே! எந்த மொழியானாலும், எந்த இடமானாலும் தெய்வ பக்திப் பாடல்களே கீர்த்தனைகளாக சங்கீத உலகை செழிப்பாக்கி உள்ளன. மீரா, சூர்தாசர் போன்ற வடநாட்டு பக்தர்களோடு கூட, அன்னமய்யா, ராமதாசர், க்ஷேத்ரய்யா, தியாகராஜ சுவாமி, முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, சதாசிவ பிரம்மேந்திரர், தரிகொண்ட வேங்கமாம்பா போன்ற சங்கீத ஆச்சார்யர்கள் எத்தனையோ பேர் கீர்த்தனை வடிவில் ஸ்தோத்திர சாகித்யத்தைப் படைத்துள்ளனர். இவை நம் நாட்டு அழியாத கலைச் செல்வங்கள்’’ என்று வேங்கமாம்பாவையும் தமது பட்டியலில் சேர்த்துள்ளார்.

ஆந்திர மாநிலம், தரிகொண்டா கிராமத்தில் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரு நடுத்தரமான வீட்டில் பிறந்தவர் வேங்கமாம்பா. பெருமாள் மீது அதீத பக்தி கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் இயல்பிலேயே பெருமாள் மீதிருந்த பக்தி மெல்ல மெல்லக் காதலாக மாறி, ’நான் வேங்கடவனின் மனைவி’ என்று தமக்குள் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார். பருவம் வந்ததும் திருமணத்தை வெறுத்தார். பெற்றோர் பேசி புரியவைத்துச் சம்மதிக்க வைத்து திருமணம் செய்து முடித்தனர். கணவராக வந்தவர் பெயரும் உண்மையிலேயே வேங்கடாசலபதிதான்.

அந்த மனுஷனும் உண்மையிலேயே மனைவியை மதிக்கும், உரிமைகளைக் கேட்காமலேயே கொடுக்கும் அசலான ஆண். அவர் ஒருமுறை மனைவி வேங்கமாம்பாவை அழைத்துச் சொல்கிறார், ’’ஒருவேளை நான் இறந்தாலும் நீ இந்தச் சடங்குகளை பின்பற்றாதே. மொட்டை அடிக்காதே. மஞ்சள், பூ, குங்குமம் இழக்காதே. இது உன் பிறப்புரிமை. எப்போதும் சுமங்கலி போல் இரு. பார்க்க மகாலட்சுமி போல் பார்வைக்கு மகிழ்வாய், மங்களமாய் இருக்க வேண்டும்’’ என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார். இதைச் சொன்ன சில நாட்களிலேயே அவர் ஒரு விபத்தில் காலமாகி விடுகிறார்.

அத்தருணம்தான் வேங்கமாம்பாவின் உள்ளார்ந்த சக்தியும் உத்வேகமும் வெளிப்படும் காலமாக அமைகிறது. உறவுகளின் தொல்லை... மொட்டை அடிக்கச் சொல்லி, விதவைக் கோலம் பூணச் சொல்லி. வேங்கமாம்பா, ’முடியாது’ என மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சுமங்கலியாய்... மஞ்சள் பூசிய, குங்குமம் சுமந்த நெற்றியுடன் விழுதுகள் போல் தொங்கிய கூந்தலுடன் திருமலை திருப்பதிக்கு புறப்பட்டார் வேங்கமாம்பா.

தனது பக்தையை இன்னும் சிறந்தவராக்க முடிவு செய்தான் அந்த மலையப்பன்.

மலைக்குப் போகும் வழியில் சுப்பிரமணிய ஆச்சாரியார் என்னும் குருவிடம் யோக சாஸ்திரம் கற்றுக்கொள்கிறார் சிலகாலம். அதன்பின் தான் அவர், தரிகொண்டா நரசிம்ம சதகம், நரசிம்ம விலாச கதா, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், யட்ஷ கானம், ராஜ யோகம் ருத சாரம், த்விபத காவியம், விஷ்ணு பாரிஜாதம், முந்தி கந்தி விலாசம், ராம பரிணயம், ஸ்ரீ பாகவதம், ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி, வசிஷ்ட ராமாயணம்,

ஸ்ரீ வேங்கடாசல மஹாத்யம், அஷ்டாங்க யோக சாகரம் போன்ற நூல்களை எழுதினார்.

இந்த ஆணாதிக்க உலகில் பக்தி மார்க்கத்தில் வெறும் யோக சக்தி கொண்டு உணர்வுபூர்வமாய் மக்களுக்கு நன்மை செய்தால் மட்டும் போதாது, ஆண்கள் மிரளும்படி அறிவால் அசத்தத் திட்டமிட்டரா என்று தெரியாது. ஆனால், இவ்வளவு நூல்களையும் எழுதி, பாடல்களைப் பாட ஆரம்பித்தார். திருமலையில் சக்தி யோகினி வேங்கமாம்பா புகழ் பரவியது.

தினமும் அவர் கோயிலுக்கு வந்து கொடுக்கும் துளசி மாலையே பெருமாளுக்கு அவர் முன் சாற்றப்பட்டது. இது அங்கு இருந்த ஒரு அர்ச்சகருக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் பெருமாளுக்குச் சொந்தமான ஒரு நகையை ஒளித்துவைத்து, அம்மையார் மீது பழி போட்டுவிட்டார்.

உடனே வேங்கமாம்பா திருமலையை விட்டு இறங்கி தும்புரகோணம் (தும்பூர்) என்ற வனத்தில் வேடர் இன மக்களோடு தங்கியிருந்து ஆறு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். (இந்த வஞ்சகமான நகர மக்களை விட, பழங்குடியினர்தான் பவித்திரம் என்று நினைத்தாரோ?) தம் தவ சக்தியால் அங்கிருந்தே திருமலையின் கருவறைக்குச் செல்லும் ஒரு சுரங்கப்

பாதையை உருவாக்கினார். அந்த சுரங்கத்தின் வழியாக நடந்து வந்து திருமலை பெருமாளுக்குப் பாமாலையும், பூமாலையும் சாத்தி வந்தார்.

தாங்கள் பூஜை செய்வதற்கு முன்பே மூடிய கோயிலுக்குள் பெருமாள் பூமாலை அணிந்திருப்பது கண்டு. அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின், ஒரு அர்ச்சகர் கனவில் வந்து பெருமாள்தான் உண்மையைச் சொல்லி மீண்டும் வேங்கமாம்பாவை திருமலைக்கு அழைக்கச் சொல்கிறார்.

’இதை ஆரம்பத்திலேயே கடவுள் சொல்லி இருக்கலாமே’ என்று நமக்குத் தோணும். அப்படிச் சொல்லிவிட்டால் ஆறு ஆண்டுகள் வேங்கமாம்பா தவம் இருந்திருப்பாரா? யோக சக்தியைப் பெற்றிருப்பாரா? பார்வையாலேயே சுரங்கம் அமைத்திருப்பாரா? அதன் வழியாகப் பெருமாளுக்கு விரும்பியபடி மாலையைச் சாற்றியிருப்பாரா? துயரம் என்பது மண்ணைத் தோண்டி ஊற்றை வெளிக்கொண்டு வரும் கடப்பாரை, நீ தாகமாயிருந்தால் தோண்டு. துயரக் கடப்பாறை மூலமே உன் வாழ்வின் ஊற்றை நீ கண்டடைய முடியும்.

ஒன்று மட்டும் உறுதி. எல்லா நாடகத்தின் கடைசி காட்சியும் சுபம்தான் என்பதை மறவாதே. எனக்கு இப்படித்தான் தோணுது.

எழுத்தாளர் முக்தேவி பாரதி என்பவர் வேங்கமாம்பா பற்றி 75 தொடர்கள் எழுதி நடிகை மீனா கதாநாயகியாக நடித்து தெலுங்கில்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் வேங்கமாம்பா பற்றிய தொடர் மக்கள் மத்தியில் வெளிவந்து பிரபலமாகியது. அரசாங்கம் கூட வேங்கமாம்பாவுக்கு ஒரு அஞ்சல்தலை வெளியிட்டு தம் நாட்டு சக்தி பெண்மணியைக் கொண்டாடியது.

ஒருநாள் வேங்கமாம்பா, ஏழை ஒருவர் சாப்பாட்டுக்காகக் கையேந்தி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்து, இரவும் பகலும் அன்னம் கிடைக்க அன்னதானக் கூடம் ஒன்றை நிறுவினார்.

அதுதான் இன்றும் திருமலை திருப்பதியில் இயங்கிவரும், ‘தரிகொண்டா வேங்கமாம்பா அன்ன பிரசாத மையம்.‘

திருமலையில் கி.பி.1817ஆம் ஆண்டு தனது 87 வயதில் திருமலையானுடன் கலந்த அற்புத யோகினியான வேங்கமாம்பாவின் பிருந்தாவனம் திருமலை மாடவீதிக்கு அருகில் உள்ளது. இதை உள்ளடக்கி SVBNR உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. அடுத்தமுறை திருமலை போனால் தரிகொண்டா வேங்கமாம்பா ஜீவசமாதியை (வைணவத்தில் இதை பிருந்தாவனம் என்பர்) வணங்கி விட்டு வாருங்கள்.

வேங்கமாம்பாவை ஒரு ஆன்மிகவாதியாகப் பார்த்து வணங்க முடியலையா? யாரும் பசியோடு இருக்கக் கூடாதென்று பசியாற்றிய ஒரு அம்மாவாகப் பார். அதுவும் முடியலையா? விதவையெனச் சொல்லி மொட்டை அடித்து, அமங்கலமாக்கி மூலையில் அமர வைத்த சமூகத்துக்கு எதிராகப் போராடிய ஒரு பெண் போராளியாகப் பார். இல்லை, 14 நூல்களைப் பக்தி இலக்கியத்துக்குத் தந்த ஒரு பெண் எழுத்தாளுமையாகப் பாருங்கள். நீ யார் என்பதைப் பொறுத்தே உனது பார்வை அமையும். எனக்கு வேங்கமாம்பா ஒரு மகாசக்தி.

(தரிசனம் தொடரும்)

Comments

ப்ரியா பாஸ்கரன் says :

மற்றொரு சிறப்பான கட்டுரை. பார்வையாலேயே. சுரங்கம் அனைத்திருக்கிறார் என்பது மெய்சிலிர்க்க வைக்கும் செய்தி. பெண் சித்தர்களப் பற்றி நாம் நிறைய பேசுவதில்லை. இத்தகைய அருமையான தகவல்களை திரட்டி அவர்களைப் பற்றி அறிய செய்யும் உமது மகத்தான பணி தொடரட்டும் சூர்யா. இதனை கல்கியோ அல்லது தாங்களே கூட ஒரு புத்தகமாக வெளியிட்டால் சிறப்பாகவும் இரு ஆவணமாகவும் இருக்கும். நெஞ்சினிக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும், சிறக்கட்டும் உமது எழுப்பயணம்.

sankar subramanian says :

அருமை.. தொடரும் உங்கள் தேடலுடன் தொடர்ந்து நாங்களும் பயணிக்கிறோம... தொடரட்டும் மேலும் பல ஞான பெண் சித்தர்களுடன் ..

Nandakumar says :

இன்னுமொரு சிறப்பான படையல்... ஆசைதீர அறிவு விரிய ஆழமான ஞானம் அறிய.சாயல். பார்க்க நேரிட்டதும் கலங்கிப் போனேன். அதே மாதிரியல்ல அதேதான் ஆள் நீளம் அகலம் அச்சு அசலான அதே முகம் பற்களும் கூட அப்படியே. அவ்வப்போது சட்டை காலரை நேர்த்தி செய்யும் அதே அழகு. அவரை நன்கறிந்தவர் அறிந்ததே அப்பா மறைந்து ஆறாண்டானது. எப்படி சாத்தியமாகுமென்பது தெள்ளத் தெளிவானது பெடலின் நுனியைத் தட்டித் தட்டி மிதிவண்டியில் பயணித்தவரை சற்றுமுன் கண்ணுற்றபோது. வாழ்த்துகள்.

Prabhamurugesh says :

வேங்கமாம்பாவை பற்றியும் அவர்கள் தவத்தை பற்றியும்..நீ தாகமாயிருந்தால் தோண்டு துயரகடப்பாறை மூலமே .உன் வாழ்வின் உற்றை நீ கண்டைய முடியும்..என்ன ஒரு வார்த்தை. நீ யார் என்பதை பொறுத்தே உனது பார்வை அமையும் ஆம்.வேங்மாம் பாவை ஒரு நிமடம் மனதுற்குள் உட்கார்ந்து இருப்பது சூர்யாவின் எழுத்துக்கள் மூலமும் சித்தர் பற்றிய செய்தியும் தான்.மேன்மெலும் சிறக்கட்டும் உங்கள் பணி சூர்யா. மாகசக்தி தரிசனம் தொடரட்டும்..

விஜிமுருகநாதன் says :

அற்புதமான வரலாறை அற்புதமானவர்களே எழுத.முடியும்.. பாராட்டுக்கள் சூர்யா..

G Srikanth says :

வேங்கமாம்பா கணவர் கூறியது சரி. இடையில் வந்து இடையிலே மரிக்கும் கணவனுக்காக ஏன் ?ஒருவர் பூவையும் பொட்டையும இழக்க வேண்டும்

ரிஷபன் says :

சித்தரா, மனிதாபிமானியா, இலக்கியவாதியா, முற்போக்கு சிந்தனையா.. யாவும் ஒருவரிடம் இருக்கலாம் என்பதன் அற்புத எடுத்துக்காட்டு.

MATHIPRIYA S says :

கல்கி.. பெண்களுக்கு எவ்வளவு மரியாதை அளிக்கிறது என்பதை இத்தொடர் மூலம் அறியலாம்

Mangalagowri says :

இப்படி எடுத்து சொல்ல அல்லது கண்டுபிடித்து தர ஆள் இல்லாமல் அல்லது மொழி புரியாமல்தானே பலரையும் தவற விட்டு விட்டோம். நன்றி சூரியா. அடுத்த முறை போகும் போது இந்த அன்னலட்சுமியை கட்டாயம் தரிசனம் பண்ணிட்டு வரனும். வேங்கடவன் அருள் புரியனும். நன்றி நன்றி நன்றி

கௌரேஇ கணேசன் says :

நிறைய விடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. . எந்த வடிவ எழுத்திற்கும் நிறைவில் ஒரு "நச்" வேண்டும். . இக்கட்டுரையின் நிறைவு பாரா ஸ்டார் "நச்" பாராட்டுகள்.

ப. தாணப்பன் says :

துயரக் கடப்பாரை மூலமே வாழ்வின் ஊற்றை உணர இயலும். எத்தனை உண்மை இது. அன்ன பிரசாத மையம் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சிறந்த தேடல் மற்றும் பதிவு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :