• JUST IN | சுட சுட

நடிகை பாலியல் புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு!





அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்மீது, தமிழ் சினிமா துணை நடிகை சாந்தினி தன்னுடன் ஐந்து வருடம் வாழ்ந்துவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

நடிகை கொடுத்துள்ள புகாரில், முன்னாள் அமைச்சரான மணிகண்டன் 5 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து விட்டு, திருமணம் பற்றி பேசினால் தன்னை கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தன்னுடைய ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என்றும் மிரட்டுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். எனவே இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது உறுதி என்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நடிகை சாந்தினி அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். சாந்தினி கருக்கலைப்பு செய்த மருத்துவமனை விசாரணை வளையத்தில் உள்ளது. மேலும், மணிகண்டனின் கார் ஓட்டுநர், அவர் அமைச்சராக இருந்தபோது அவருடன் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், மணிகண்டனின் குடும்பத்தினர், உதவியாளரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :