• தீபம் - ஆன்மீகம்

அறிவு திறவுகோல் பஜகோவிந்தம்!


- ரேவதி பாலு

ஸ்ரீ ஆதிசங்கரர் ஏழாம் நூற்றாண்டில் இன்றைய கேரளத்திலுள்ள காலடி என்னும் ஊரில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாய் அவதரித்தார். இளம் பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று, சங்கரபகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார். அத்வைத தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் இவர்.

பாரத தேசம் முழுவதும் கால்நடையாகவே மூன்று முறை விஜய யாத்திரை மேற்கொண்டு நாட்டின் நான்கு திசைகளிலும் மடங்கள் ஸ்தாபித்த பின் ஸ்ரீ ஆதிசங்கரர் காஞ்சி மாநகரம் வந்து சர்வஞான பீடம் ஏறியமர்ந்தார். ஸ்ரீ சக்கர வழிபாட்டு நெறிமுறைகளை வழிவகுத்து அந்த பூஜா முறைகளைக் கற்பித்தார். இன்று நாம் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளும் அவர் வகுத்துக் கொடுத்ததே.

தன்னுடைய 32-வது வயதில் சித்தியடைந்த இவர் எண்ணற்ற ஸ்லோகங்களை எழுதியுள்ளார். சிறு வயதில் பிஷை யாசிக்கச் சென்றபோது ஒரு ஏழைப் பெண்மணி ஒரு நெல்லிக் கனியையளிக்க, அந்தப் பெண்மணியின் வறுமை தீர மஹாலட்சுமியை வேண்டிப் பாடி பொன்மாரி பெய்ய வைத்த, `கனகதாரா ஸ்தோத்திரம்` எல்லோரும் அறிந்த ஒன்று.

தன்னுடைய விஜய யாத்திரையின்போது வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்யநாத அஷ்டகம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மீனாட்சி பஞ்சரத்தினம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது ரங்கநாத அஷ்டகம், குருவாயூர் சென்றபோது ஸ்ரீ கிருஷ்ணர் மீது கோவிந்தாஷ்டகம், காசியில் அன்னபூர்ணா ஸ்தோத்திரம், காலபைரவாஷ்டகம் இயற்றினார்.

தீராத வயிற்றுவலியில் அவதிப்பட்டபோது திருச்செந்தூர் சென்று முருகப் பெருமான் மீது `சுப்ரமண்ய புஜங்கம்` பாட வலி குணமாயிற்று. மற்றும் கணேச பஞ்சரத்தினம், சௌந்தர்ய லஹரி, மதுராஷ்டகம், சிவானந்த லஹரி, பஜகோவிந்தம் பாடல்களும் இவர் இயற்றியவற்றுள் முக்கியமானவை.

இவர் ஸ்லோகங்களின் சிறப்பு என்னவென்றால், அந்த சந்தங்கள் இசையமைத்துப் பாட ஏற்றதாக உள்ளதால், பிரபல பாடகர்கள் பாடி எல்லா ஸ்லோகங்களும் பிரசித்தி பெற்றுள்ளன. ஆதிசங்கரரின் ஸ்லோகம் என்றாலே முதலில் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, ’பஜகோவிந்தம்’. இந்த ஸ்லோகம் நம் இசையரசி திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் இனிய குரலில் ஒலிக்காத இல்லமேயில்லை என்ற அளவுக்கு பிரபலமானது.

ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அத்தனை நெறிமுறைகளையும் தன் பஜகோவிந்தம் ஸ்தோத்திரத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீ ஆதிசங்கரர், அதன் மூலம் வாழ்வில் மெய்ஞானத்திற்கும் வழிகாட்டியுள்ளார். அழகாக, மனிதனின் அறிவை திறக்கும் திறவுகோலாக ஆரம்பிக்கிறது ஸ்ரீ ஆதிசங்கரரின் `பஜ கோவிந்தம்.`

’பஜகோவிந்தம், பஜகோவிந்தம்

கோவிந்தம் பஜ மூடமதே’

பஜ கோவிந்தத்தில் வரும் முதல் ஸ்லோகமான இதைப் படிக்கும்போது ஏன் மூன்று முறை கோவிந்தனைத் துதிப்பது என்பது கூறப்படுகிறது என்னும் கேள்வி நம் மனதில் எழுகிறது. அதற்கு ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இருக்கிறது. துதிப்பது என்பது வெறும் நாவோடு நின்று விடக்கூடாது. சிந்தையிலும் செயலிலும் ஊடுருவிப் பரிணமிக்க வேண்டும். எனவேதான் மூன்று முறை சொல்லப்பட்டிருக்கிறது. `மூட` என்றாலே `அறிவில்லாத` `முட்டாள்` என்றெல்லாம் அர்த்தம் கொள்வது நம் பழக்கம். ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொல்கிறார், ’மூட` என்றால் `அறிவு மூடியிருக்கும் நிலை.` மனிதனுக்கு ஆன்மீக ஆர்வம் தோன்றாதவரை, இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஆவல் தோன்றாதவரை அறிவு மூடிதான் இருக்கும். நம் அறிவுக்கு ஒரு திறவுகோலாக பஜகோவிந்தத்தை இயற்றிய ஸ்ரீ ஆதிசங்கரர், அந்த ஆர்வம் ஏற்பட்டு அறிவு திறக்கப்படத்தான் கோவிந்தனை நாமஸ்மரணை செய்யச் சொல்கிறார்.

Comments

S.Gowri says :

Bajagovindam mooda to open it what we have.todo

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :