• TRENDING | பர பர

மகனுக்காக சைக்கிளில் 300 கி.மீ. தூரம் பயணித்து, மாத்திரை வாங்கி வந்த தந்தை!





கர்நாடகாவைச் சேர்ந்த தந்தை ஒருவர், நரம்பு பிரச்னையால் மிகவும் அவதிப்பட்டு வரும் தனது மகனுக்காக, 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்து மாத்திரை வாங்கி வந்திருப்பது அனைவரின் மனதையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மைசூரு அருகில் உள்ள டி.நரசிபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ஆனந்த். 10 வயதான இவரது மகன் நரம்பு சம்பந்தமான பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். பெங்களூருவில் உள்ள நிம்ஹன்ஸ் மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்துச் சென்று இரு மாதங்களுக்கு ஒருமுறை சிகிச்சை அளிக்க வேண்டும். அதேசமயம் மாத்திரையும் ஒரு நாள்கூட தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில், தற்போது முழு ஊரடங்கினால் போக்குவரத்து நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் தவித்துள்ளார் ஆனந்த்.

மகனின் உடல்நிலையை எண்ணிப்பார்த்த ஆனந்த், சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார். காவல்துறை கெடுபிடியை நினைத்து பயந்து, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தாத கனகபுரா பாதை வழியாக சைக்கிளிலேயே 2 நாட்கள் பயணம் செய்து பெங்களூரு மருத்துவமனையை அடைந்துள்ளார்.

தனது மகனுக்காக மாத்திரைகள் வாங்க கிராமத்தில் இருந்து சைக்கிளிலேயே ஆனந்த் வந்திருப்பதை அறிந்து உருகிப்போன மருத்துவர்கள், அவரிடம் தேவையான மாத்திரைகள் கொடுத்ததோடு, வழிச் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்ப, அடுத்த இரண்டு நாளில் வீடு வந்து சேர்ந்தார்.

பிள்ளைப் பாசம் என்பது உலகில் மதிப்பில்லாதது என்பதை நிரூபிக்கும் வகையில், மகனுக்கு மாத்திரை வாங்குவதற்காக 300 கி.மீ. பயணம் செய்த இந்த தந்தையின் பாசம் அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.

Comments

Shenbakam pandian says :

இதயத்தை தொட்ட நிகழ்வு. தாய் சுமந்தது பத்து மாதம் என்றால் இந்த தந்தையின் செயலும் அதற்க்கு ஈடானதே.மகன்கள் இதை மறக்கக்கூடாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :