• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

48. ஜோதியில் கலந்தார்!


- அமரர் கல்கி

இந்த மண்ணுலகில் தோன்றும் மகா புருஷர்கள் உடலை நீத்துச் செல்ல வேண்டிய காலம் வரும் போது வானுலகிலிருந்து ஜோதி மயமான புஷ்பக விமானம் வந்து அம்மகான்களை அழைத்துச் செல்லும் என்று இதிகாச புராணங்களில் நாம் படித்ததுண்டு.

இது கற்பனையாகவும் வர்ணனையாகவும் இருந்தாலும், வெளி உலகில் நாம் பார்க்கும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் இந்தக் கற்பனை - வர்ணனைகள் உண்மையானவை என்று பெரியோர் நமக்க எடுத்துச் சொன்னதுமுண்டு.

சென்ற 14-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு எட்டே முக்கால் மணி சுமாருக்கு ஆகாசத்தையும் பூமியையும் ஒளி மயமாக்கிக் கொண்டு ஒரு ஜாஜ்வல்யமான ஜோதி வானத்தில் தோன்றி ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரையில் பிரயாணம் செய்து மறைந்த காட்சியைத் திருவண்ணாமலையிலும் சென்னை நகரிலும் மற்றும் பல சுற்றுப்புற ஊர்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்தார்கள். அதே சமயத்தில் திருவண்ணாமலையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த பகவான் ரமண ரிஷிகள் மகா சமாதி அடைந்தார்கள் என்பதை அறிந்து திகைத்தார்கள்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று ஆராய்ந்தார்கள்; சம்பந்தம் உண்டு என்று பலரும் நம்பினார்கள்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு மகா புருஷர் நம்மை விட்டுப் பிரிந்தார். ஒரு மாபெரும் அருட்ஜோதி இந்த மண்ணுலகிலிருந்து மறைந்தது என்பதைப் பற்றிச் சிறிதும் ஐயமில்லை.

கடவுள் உண்டா, இல்லையா என்ற விவாதம் இன்று நேற்று உண்டானதல்ல. மனிதன் தோன்றி அறிவு பெற்ற நாளிலிருந்து இவ் விவாதம் நடந்து வந்திருக்கிறது.

“கடவுள் உண்டு” என்னும் உண்மையை வாதங்களினால் நிரூபிக்க முடியாது. எத்தனை வாதங்கள் சொன்னாலும், அதற்கு எதிர்வாதங்கள் வெல்லக்கூடும்.

ஆனால் கடவுள் இல்லையென்பவர்களை மாற்றுவதற்கு, ஒரே ஒரு வழிதான் உண்டு. “அப்பனே! இதோ இந்த மகானைப் பார்! இவரைப் பார்த்த பிறகாவது கடவுள் உண்டு என்று தோன்றினால் அவ்வாறு நம்பு. அப்படியும் உனக்கு நம்பிக்கை ஏற்படாவிட்டால் அதுவும் கடவுளுடைய திருவிடையாடல்தான். உன் வழியை நீ போ!” என்று சொல்வது தான் அந்த வழி.

அவ்விதம் சுட்டிக்காட்டி, “இதோ கடவுளைக் கண்ட மகான்; கடவுள் உண்டு என நிலை நிறுத்தும் பெரியார்!” என்று சொல்லக் கூடியவராக நம்மிடையே பகவான் ரமண ரிஷி விளங்கி வந்தார்.

சின்னஞ்சிறு பிராயத்தில், பதினேழாம் வயதில், ஸ்ரீ ரமணர் “கடவுளைக் காணுவேன்” என்று விரதங் கொண்டு பெற்ரோர் இல்லத்திலிருந்து புறப்பட்டார். “ஞானத் தபோதனரை வாவென்றழைக்கும் மலை”யாகிய திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கேயே நிலை பெற்றுக் கடுந்தவம் புரிந்தார். துஷ்டர்களும் அறியாதவர்களும் அவருடைய தவத்தைக் கலைக்க முயன்றார்கள். எனவே, பாதாள லிங்கக் குகைக்குச் சென்று யார் கண்ணிலும் படாமல் மோனத் தவத்தில் ஆழ்ந்தார். பல தினங்கள் இருந்த இடத்திலிருந்து அகலாமல், உணவும் நீருயம் இல்லாமல் தவம் புரிந்தார். தம்முடைய திருமேனியைப் பூச்சி புழுக்கள் அரித்துத் தின்றதைக் குறித்த சிந்தையை இல்லாமல் நிர்விகல்பத்தில் இருந்தார். பழைய காலத்து வேத ரிஷிகளைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் உண்மை என்பதை நாம் உணருமாறு மெய்ப்பித்தார். இத்தகைய நிலையில் காவியகண்ட கணபதி சாஸ்திரிகள் என்னும் பெரியார் அவரைக் கண்டு, “ரமண ரிஷி” என்று கூறிப் போற்றி வணங்கினார்.

அன்று முதல் ரமண ரிஷியின் பெருமையை மக்கள் பலர் அறியலாயினர். தேசத்தின் நாலா திசைகளிலிருந்தும் அறிஞர்கள் பலர் மனச் சாந்தியை நாடி அவரைத் தேடி வந்தனர். அறிவிலும், ஆராய்ச்சியிலும் மிக்க ஐரோப்பியவர்கள் பலரும் ரமண ரிஷியின் ஆசிரமத்திலே வந்து தங்கி வெளி உலகத்தில் வேறு எங்கும் காணாத மன அமைதியை இங்கே பெற்றனர்.

இவ்வாறெல்லாம் புகழ் பரவினாலும் ரமண ரிஷிகளின் உள்ளப் போக்கிலோ தவ வாழ்க்கையிலோ எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை. நடை உடையும் மாறவில்லை. உபதேசமா, உபந்நியாசமோ அவர் செய்யவில்லை. எப்போதும் போலவே அவருடைய பேச்சு மிகக் குறைவாயிருந்தது. சொல்லரிய பொருளை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி” என்ற வாக்கியத்துக்க இலக்காக விளங்கி வந்தார். அவருடைய தரிசனத்தினாலுமே அவர் அருகில் தங்குவதினாலுமே பாரமார்த்திக அநுபவத்தை அடைந்து வந்தார்கள் அவரை நாடி வந்த சீடர்கள்.

“ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்குயிராய் ஆடும் கருணைக் கடல் பரஞ்சோதியின்” அருள் ஒளியிலே ஸ்ரீரமண ரிஷிகள் இரண்டறக் கலந்து விட்டார்.

ஆதி நாளிலிருந்து இந்தப் பாரத புண்ணிய பூமியில் எத்தனையோ மகான்களும், மகரிஷிகளும், அவதார புருஷர்களும், தெய்வ மனிதர்களும் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பூதவுடல்கள் மறைந்தனவே தவிர, அவர்களுடைய அருள் ஒளியானது இந்தப் புண்ணிய நன்னாட்டில் எங்கும் பரவி நிலைத்து நின்று மக்களைத் தூய்மைப்படுத்திப் பரிபாலித்து வருகிறது. அதுபோலவே பகவான் ரமண ரிஷியின் அருள் ஒளியும் என்றென்றைக்கும் இந்தத் திருநாட்டைப் புனிதப்படுத்திக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

(கல்கி, ஏப்ரல் 23, 1950)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :