யோகி கிரிபாலா அம்மையார்! /> யோகி கிரிபாலா அம்மையார்! />

  • தீபம் - ஆன்மீகம்

காற்றை உண்டு வாழ்ந்த
யோகி கிரிபாலா அம்மையார்!


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 9
- அமிர்தம் சூர்யா

மதுரை அழிய யார் காரணம்? எல்லோரும் உடனே கண்ணகிதான் என்பர். ‘கோவலனால்தான் மதுரை அழிந்தது’ என்பதே எனது பார்வை. குறிப்பாக, அடுத்தவரை மதிக்காமல் புறக்கணிக்கும் கெட்ட பண்பால்தான் மதுரையும் கோவலனின் குடும்பமும் அழிந்தது என்பேன். பணக் கஷ்டத்தால் சிலம்பை விற்க வந்த கோவலனுக்கு எதிரே வந்த ஒரு பொற்கொல்லன், மரியாதை நிமித்தமாய் வணக்கம் தெரிவிக்கிறான். (கூற்ற தூதன் கைத் தொழித்தேத்த) ஆனால் கோவலன், ‘நீ என்ன பெரிய ஆளு... உனக்கு நான் வணக்கம் சொல்ல’ என்று மதிக்காமல் போகிறான் (பொற்றருஞ்சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தன).

அவமானப்பட்ட அவன் சரியான சந்தர்ப்பத்தில் கோவலனுக்கு எதிராக பொய்ச் சாட்சி சொல்கிறான். அதோடு, கோவலன் இறக்கவும் காரணமாகிறான். ஒரு வணக்கம் புறக்கணிக்கப்பட்டதுதான் மதுரை நகரமே எரியக் காரணம். (இது ஒரு பார்வை.) ஆக, அது ஒரு சின்ன அவதூறான செயலோ அல்லது ஒரு காயமாக்கும் வார்த்தையோ, ஏதுவாக இருந்தாலும் அது மனதைக் காயப்படுத்திவிட்டால், அதன் விளைவு வேறுவிதமான விளைவுகளைத் தரும். அது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் அமையலாம். யோகி கிரிபாலாவுக்கு அமைந்த நன்மையைப்போல். ஆம்... ஒரே ஒரு சொல்தான் கிரிபாலாவை, ‘யோகினி கிரிபாலா அம்மையார்’ ஆக்கியது. அதுவும் எந்த வயதில்? வெறும் பன்னிரெண்டரை வயதில்.

இது, கிரிபாலா அம்மையாரின் சொந்த வாக்குமூலம்...

“நான் பன்னிரெண்டு வயது, நான்கு மாதத்தில் இருந்து தற்போதைய 68 வயது வரை, கிட்டத்தட்ட 56 வருடங்கள் சாப்பிடவோ அல்லது நீராகாரமோ எடுத்துக் கொண்டதில்லை” என்று குறிப்பிட்டுள்ளதாக, பரமஹம்ச யோகானந்தரின், ‘ஒரு யோகியின் சுய சரிதம்’ என்ற நூலில் இடம்பெறுகிறது.

யார் அந்தப் பெண் சித்தர்?

கிரிபாலா, வட வங்காளத்தில் பங்கூரா மாவட்டத்தில், ‘ப்யூர்’ என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார். அப்படி என்னதான் நடந்தது கிரிபாலா அம்மையாருக்கு...? பசிதான். அது சாதாரண பசி அல்ல... யானை பசி. அந்த சின்ன வயசில் ஏற்பட்ட அபாரமான பசி. சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பாராம். அதனால் வீட்டில் அவரது அம்மா அவரைத் திட்டிக்கொண்டே இருப்பாராம். ‘இப்படி சாப்பிட்டா புருஷன் வீட்டுக்குப் போனா எப்படி? உனக்கு மாமியார் ஆக்கிக் கொட்டுவாளா? நாலு பேர் நாலு விதமா ஏசுவாங்க’ என்று கவலையுடன் சொன்னாலும், அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டாராம். கிரிபாலாவுக்கு பன்னிரெண்டு வயதில் திருமணம் ஆகி மாமியார் வீட்டுக்குச் செல்கிறார்.

அவரது இந்தப் பசி, புகுந்த வீட்டில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. ஒருமுறை கிரிபாலாவை அவரது மாமியார் மிகக் கேவலமாக மனம் வருந்தி கண்ணீர் விடும்படி அவமானப்படுத்த, அப்போது கிரிபாலா ஒரு சபதம் ஏற்கிறார். ‘இனி எனது வாழ்நாளில் நான் உணவு உண்ணப்போவதில்லை’ என்று. சொல்லிவிட்டாரே தவிர, அதற்கு எந்த வழியும் தெரியாது தவித்த கிரிபாலா, பெரும் பசியோடு ஒரு நதியில் இறங்கி தலை முழுகி, ‘இறைவா... எனக்குப் பசி நீக்கும் ஒரு குருவைக் காட்டு’ என்று மனம் உருகி வேண்டி கரையேறியிருக்கிறார்.

அப்போது எதிரே வந்த ஒரு துறவி, ‘அம்மா நீ அழைத்ததாகவும் உனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளார். உனக்கு என்ன உதவி வேண்டும் கேள்’ என்கிறார். அதற்கு கிரிபாலா, ‘உணவு உண்ணாமல் உயிர் வாழும் உபாயம் வேண்டும்’ என்றதும், ‘சரி அந்த யோகத்தை உனக்கு நான் போதிக்கிறேன். ஆனால், அதை நீ யாருக்கும் உபதேசிக்கக் கூடாது’ என சத்தியம் வாங்கிக்கொண்டு சொல்லித் தருகிறார் அந்தத் துறவி.

இதென்ன வெறும் உடற்பயிற்சியா? யார் வேண்டுமானாலும் செய்து விட? இறை பக்தியுடன் கூடிய யோகப் பயிற்சி. ‘தியானத்தில் அமர்ந்து தண்டுவடத்தின் ஐந்தாவது சக்கரமான விசுத்தி சக்கரத்தின் மீது கவனத்தைக் குவித்துச் செய்யப்படும் யோகம்’ என்று சில குறிப்புகள் சொல்கின்றன.

நமது அகத்தியர் கூட,

‘மருவி நின்ற தலம்தான் விசுத்தியோடு
மகத்தான அறுகோணம் நன்றாய்ப்போட்டு
திரிந்த அறுகோணஞ் சுத்திநல்ல
தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு
குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங்
குணமான அக்கோட்டை நடுவிலேதான்
உருவறிந்து வித்திட்டு ஓங்காரஞ் சுத்தி
உத்தமனே வங் கிலி யங்கென்று போடே’

என்று எழுதியிருப்பார். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக் குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இது சிலரின் குறிப்புதானே ஒழிய, கிரிபாலா அம்மையார் சொன்னது அல்ல.

காவி உடை, ருத்ராட்சம் தரித்து, உணவு உண்ணாமல், ஏன் தண்ணீர் கூட அருந்தாமல், காற்றை மட்டுமே உண்டு வாழும் இந்த அம்மையார் குறித்த செய்தி ஊரெல்லாம் பரவுகிறது. மாமியார், ‘இவள் சாதாரணப் பெண் அல்ல; கடவுளின் அவதாரம்’ என்று அவரது காலில் விழுந்து வணங்குகிறார். ஊரே கைகூப்பி தொழுகிறது. மாகாணத் தலைவனுக்கு இந்தச் செய்தி போகிறது. அவன் அந்த அம்மையாரை அழைத்துத் தனி பூஜையறையில் இருக்க ஏற்பாடு செய்து, சுற்றிலும் ஆட்களை நியமித்து கண்காணிக்கிறான். அதன்பின் அவரைப் பற்றி அறிந்து, ‘அவர் வெறும் கிரிபாலா இல்லை; யோகினி கிரிபாலா அம்மையார்’ என்றே அறிவித்து வணங்கி மகிழ்கிறான்.

கிரிபாலா அம்மையாரை தரிசித்த பரமஹம்ச யோகானந்தர், ‘பசியைப் போக்கும் அந்த யோகக் கலையை நீங்கள் ஏன் பிறர்க்குக் கற்றுத் தரவில்லை’ என்று கேட்கிறார். அதற்கு கிரிபாலா அம்மையார், ‘அந்தக் கலையை நான் மற்றவர்க்குக் கற்றுத் தந்தால் விவசாயம் அழிந்து, இன்னபிற உயிரினங்களும் அழிந்து விடும். உயிர்க்குப் பசிதான் ஆதாரம்.அதற்குத்தான் விவசாயம், தோட்டம், செடி, கொடி வளர்ப்பு எல்லாம். பசியில்லை என்றால் உலக இயக்கம் நின்று போகும். எனவே, அதை யாருக்கும் கற்றுத் தர இயலாது’ என்கிறார்.

இன்னொரு விஷயம், கிரிபாலா அம்மையாருக்கு கடவுள் வழிபாட்டைத் தவிர, வேறு என்ன பொழுது போக்கு தெரியுமா? பிறர்க்குச் சமைத்துப் போடுவது.எவ்வளவு முரண்பாடு இல்லையா?! ‘பசியே எடுக்கக் கூடாது’ என்று யோகம் மூலம் உண்பதை நிறுத்திய ஒரு பெண், அடுத்தவரின் பசிக்கு சமைத்துப் போடுகிறார். அம்மையாரிடம் ஒரு சிவனடியார், ‘சமைக்கும்போது சாப்பிடவேண்டும் என்று சலபம் வராதா?’ என்று கேட்கிறார். அதற்கு அவர், ‘சலபம் வந்தா சாப்பிட்டுத்தான் ஆகணும்’ என்று சிரித்து விட்டு, ‘சபலம் வெல்வதுதான் சாதனை’ என்கிறார்.

ஒரு சராசரி குடும்பப் பெண்ணை சாதனைப் பெண்ணாக, சக்தி சித்தராக மாற்றியது எது? மாமியாரின் ஏளனப் பேச்சுதான். அதனால்தான் சொல்கிறேன்... வாழ்வு என்பது வார்த்தைகளால் ஆனது. வார்த்தை பூமராங்கை போன்றது. கவனமுடன் பயன்படுத்துங்கள். அது உங்களிடமே திரும்பி வரும். கிரிபாலாவிடம் அவரது மாமியார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதைபோல் செய்து விடும். ஒவ்வொரு சித்தரும் இப்படியாக வாழ்வியல் ஆசானாக வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கவே வருகை தருகின்றனர். சரிதானே?

(தரிசனம் தொடரும்)

Comments

ரிஷபன் says :

வாழ்வு என்பது வார்த்தைகளால் ஆனது ! எத்தனை அர்த்தச்செறிவு. திருவாசகம்.

ரமணி ரமா says :

சபலம் வெல்வதுதான் சாதனை’ எத்தனை அழகான சத்தியம். அருமை

விஜிமுருகநாதன் says :

அற்புதம் ..ஒரு பெண் நினைத்தால் மனது வைத்தால் எவ்வளவு தூரம் சாதிக்கலாம் என்பதை சொன்ன சித்தரை உங்கள் வார்த்தைகளால் கொண்டாடி இருக்கிறீர்கள்.. வாழிய நலம்..

Prabhamurugesh says :

கிரிபாலா அம்மையார் பற்றி ஒரு நீண்ட விளக்கம் அல்லது அந்தகாலத்துக்கு பயணித்து வந்தாகிவிட்டது..சாப்பிடாமல் இருப்பது சும்மாவா அது மிக பெரிய கலை..தெரிந்து கொண்டேன்.உண்மை தான் வாழ்வு என்பது வார்த்தைகாளால் ஆனது.. .அடி கூட மறந்துவிடும்.. வார்த்தை ஒரு போதும் மாறாது...கிரிபாலாவின் வாழ்க்கை பாடத்தை எங்கள் சூர்யாவின் மூலம் தெரிந்துகொண்டோம் ..மிக்க மகிழ்ச்சி சூர்யா

வீரமணி says :

"வார்த்தை பூமராங்கைப்போன்றது கவனமாக பயன்படுத்துங்கள்" எத்தனை உண்மை வழமையான கதை கவிதை கட்டுரைகளை வாசித்து சோர்ந்துபோய் இருக்கும் என்னைப்போன்ற வாசகர்களுக்கு உற்சாகமூட்டி வாசிக்கும் ஆர்வத்தை தொடரச்செய்யும் தங்களின் சிறப்பான பதிவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்

MATHIPRIYA S says :

படிக்கும் போதே கண்கள் குளமானது.. பசிதான் அனைத்திற்கும் ஆதாரம்.. எவ்வளவு உண்மை.. மதுரை அழிய கோவலன் காரணம்.. மிகவும் சரியான கருத்து தான்.. நல்ல உறவுகள் அழியவும் இதுதான் காரணம். அருமை

Nandakumar says :

எல்லாவற்றையும் சூழ்நிலையே நிர்மாணிக்கிறது. சொன்னவிதம் அற்புதம். வாழ்த்துகள்.

Devika Nanda says :

அருமை சகோ! சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்து சிவனடியாரில் முடிக்கிறீர்கள்! நல்ல சிந்தனையோட்டம்! வாழ்த்துகள்! பல பஞ்ச் டயலாகும் நல்லாருக்கு!

ப்ரியா பாஸ்கரன் says :

“வாழ்வு என்பது வார்த்தையால் ஆனது” எவ்வளவு நிதர்சனம். வெகு சிறப்பான கட்டுரை. அகத்தியர் பாடலும் அருமை. இனிய வாழ்த்துக்கள் சூர்யா.

Suseela moorthy says :

புதிய புதிய வரலாற்றுத் தகவல்களை அதற்கான ஆதாரங்களுடன் பதிவிட்டு அசத்துறீங்க சூர்யா .. புலன்கள் மற்றும் மனத்தின் செயல்பாட்டினாலும் பூமியின் சுழற்சியாலும் உடலில் ஆற்றல் குறையும் .. குறைந்து குறைந்து ஒருநாள் இறப்பு ஏற்படுகிறது.. இதைத்தான் வள்ளுவர் நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு அதாவது... நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம் என்பது பொருள் பசியைப் போக்க உணவு , நீர் , பூமியின் கதிர்கள், கோள்களின் ஆற்றல் என்று நான்கு வழிகளில் ஆற்றலைப் பெறமுடியும் .. உணவு தவிர்த்து பிற ஆற்றலாகிய பிரபஞ்ச ஆற்றலை ( universal maganatism) இந்த உடலானது விசுக்தி மையத்தின் மூலமே உள்வாங்கிக் கொள்கிறது.. விசுக்தி மையம் என்பது ஆற்றல் களம் .. இந்த மையத்தை முறையாகச் செயல்படுத்தும் யோக சாதனை மூலம் பசியின்றி இருப்பது சாத்தியமே என யோகநூல்கள் கூறுகின்றன .. யோகி கிரிபாலா அவர்களின் வரலாறும் இதற்கொரு சான்று என்பதை உங்கள் பதிவின் மூலமாக அறிய முடிகிறது.. அருமையான தொடர் கட்டாயம் தொகுத்து வெளியிடுங்கள் ..

ப. தாணப்பன் says :

பரமஹம்ச யோகானந்தர் போற்றிய அன்னயாரை வணங்குகின்றேன். உணவுச் சங்கிலியின் மகத்துத்தைச் சொன்னதில் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வின் திண்மையை உணர இயலுகிறது. அடுத்தவரின் பசி துடைத்த அன்ன பூரணமை கண்டு மெய்சிலிர்க்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :