• தீபம் - ஆன்மீகம்

முருகன் தத்தெடுத்த அம்மா


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 8 - அமிர்தம் சூர்யா

பாம்பன் சுவாமிகளிடம் ஒரு குடியானவன் கேட்கிறான், “உங்களை எல்லாரும், ‘சாமி... சாமி’ யென்று கூப்பிடுகிறார்கள். நீங்க சாமியார்தானே. அப்புறம் நீங்க எப்படி சாமி ஆக முடியும்?” என்று. “ஆமாம்... நல்ல கேள்வி. உனக்கு ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணத் தெரியுமா?” என்கிறார் பாம்பன் சுவாமிகள். அவன் தெரியும் என்றதும், “எங்கே சொல் பார்க்கலாம்” என்கிறார்.

அவன் சொல்ல ஆரம்பிக்கிறான். ஒன்றிலிருந்து சொல்லி வந்தவன், எண்பத்து ஒன்பது என்று முடித்து, தொண்ணூறு என்று சொல்ல ஆரம்பித்ததும் பாம்பன் சுவாமிகள், “நில்... நில்... நூறு வர இன்னும் பத்து எண்கள் இடையில் இருக்கு. அதற்குள் ஏன் தொண்ணூறு என்கிறாய்” என்றார்.

குடியானவன் விழித்தான். அப்போது அவர், “ஐயா... சாமி யாரென்று கண்டுபிடிக்க கிளம்பின ஆள்தான் நான். நூறை நெருங்கும்போதே தொண்ணூறு என்று கூறுவதுபோல, சாமியை நெருங்கும்போதே மக்கள் எங்களை, ‘சாமி’ என்று அழைக்கின்றனர்” என்றாராம் பாம்பன் சுவாமிகள்.

‘இந்தத் தொடரில் சிவ பக்தர்களை, துறவிகளை, சித்தர்களை ஏன் கடவுள் போல் சித்தரிக்கிறீர்கள்?’ என்று யாராவது கேட்டால், அதற்கு இந்த பதில் பொருந்தும். அப்படியான ஒரு பெண் சித்தர்தான் சிவகாமி பரதேசி அம்மையார்.

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஊர் பண்பொழி. இவ்வூரில் இருக்கும் முருகன்தான் அருணகிரிநாதருக்கு பண் (பாடலை) பொழிய ஆசி வழங்கினார். அதனால் இத்தலம், ‘பண்பொழி’ எனப் பெயர் பெற்றது என்கிறார்கள்.

அந்தப் பண்பொழி ஊருக்கு அருகிலிருந்த அச்சன் புதூரில்தான் செல்வந்தரான கங்கை முத்து தேவருக்கு மனைவியாக சிவகாமி அம்மையார் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை இல்லை. அது ஒரு பெரும் குறையாக இருக்க, அதை நீக்கும் விதமாகவும் அடுத்த ஜன்மத்திலாவது இந்தக் குறை நீங்க, இப்போதே இறைப்பணி ஆற்றலாம் என்று முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்தார்கள் அவர்கள். கால்நடையாக நடந்து செல்லும் மக்கள் தங்கிச் செல்ல கல் மண்டபம் அமைத்தல், உணவுக் கூடம் அமைத்து அன்னதானம் செய்தல், யாருக்கும் பசி இல்லாமல் பார்த்துக்கொள்ளல் என ஆண்டவன் அகம் குளிரும்படி காரியங்கள் தொடர்ந்தன.

எல்லா வினைக்கும், அதாவது செயலுக்கும் ஒரு எதிர்வினை நடந்துதானே ஆகும். பால் கொதித்து நுரைத்தால் அதில் உயிர் இருக்குன்னு அர்த்தம். அது ஒரு கட்டத்தில் பாத்திரத்தில் அடங்காது வெளியே பொங்கி வரும். கெட்டுப்போன பால் கொதிக்கும்; ஆனால், ஒருபோதும் பொங்கி வழியாது. இறைவனும் அப்படித்தான். கொஞ்சம் சோதிப்பான். பிறகு, ‘ஐயோ... என் செல்லமே’ன்னு கட்டிப்பிடிக்க ஓடி வருவான்... வேறு வேறு ரூபத்தில். அப்படித்தான் அந்த ஊருக்கு ஒரு துறவி வருகிறார், அம்மையாரைத் தேடி.

பெயர் ‘வாலறு மஸ்தான்.’ ஆமாங்க... இசுலாமியர் தான். அட, விளக்குக்கு என்ன பேதம்? எல்லா இருளும் அதற்கு ஒன்றுதான். இருளை விழுங்குவது மட்டுமே அதன் பணி. அகல் விளக்கை எந்தப் பொருளில் செய்தால் என்ன? மதமும் அப்படித்தான். அவருக்குச் சிவகாமி அம்மையார் பணிவிடைகள் செய்கிறார்.

அதில் ஒரு உறவுக்காரனுக்கு கொஞ்சம் ஊழ்வினை அதிகம் போலும். சிவகாமி அம்மையாரை தப்பாக, கேவலமாகப் பேசிவிட, கொதித்த மலைக்குழம்பு எரிமலை என்று பெயர் வாங்குவது போல சிவகாமி அம்மையார், ‘நானல்ல... இந்த ஊரில் எவன் எந்தப் பெண்ணை தரக்குறைவாகப் பேசினாலும் கோடையிலும் அவன் வீட்டில் இடி விழட்டும்’ என்று சபிக்கிறார். நல்ல வெயில் காலத்தில் திடீரென மேகம் திரண்டு மழை தூறி, அவன் வீட்டில் இடி விழுந்து, வீடு தரை மட்டமாகிறது. ஊரில் அப்போதுதான் சிவகாமி அம்மையார் சாதாரண ஆள் அல்ல எனத் தெரிந்து, மக்கள் அனைவரும் வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

அப்போது அந்த வாலறு மஸ்தான் எனும் துறவி சொல்கிறார், “தாயே... நீ தெய்வப் பிறவி. உனக்கு எதற்கு மனிதக் குழந்தை? நீ வணங்கும் கடவுளே உனக்குக் குழந்தையாய் வருவார். பண்பொழி அடிவாரத்திற்குப் போ... அங்கே மிகப்பெரிய பொட்டல் காடு இருக்கும். அதன் மேலே வண்டுகள் ஆடிக்கொண்டு இருக்கும். அங்கே உனக்கு ஒளி கொடுக்கக்கூடிய புதல்வன் கிடைப்பான்” என்கிறார்.அதன்படி, அந்த அம்மையார் அங்கு போய் பார்த்தால், ஒரு குழந்தை படுத்திருக்கிறது. அதைத் தூக்கிக் கொஞ்சும்போது, அந்த முருகப்பெருமானே பெரும் ரூபம் கொண்டு காட்சியளித்து, சிவகாமி அம்மையாரைப் பார்த்து, ‘அம்மா’ என்று அழைத்தாராம்.

அச்சன்புதூர் கவிஞர் சுப்பையா பிள்ளை எழுதியுள்ள சிவகாமி அம்மையார் வரலாற்றில்,

‘மகனே யென்றம்மை
மார்போடு சேயைச் சேர்த்து
தானும்
முகத்தோடு முகத்தை வைத்து
முத்தமிட்டணைத்துக் கொண்டு
மகனே யென்றழைத்தபோது
மார்க்கண்டன் ஒடுங்கி நெஞ்சம்
பகவனை சேர்ந்தணைந்த
பான்மை போல் இருந்த தைய...’

- என்று எழுதி வைத்துள்ளார். அன்றிலிருந்து அந்த ஊர், ‘வண்டும் பொட்டல்’ என்று வழங்கப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பின் சிவகாமி அம்மையார் காவி உடை தரித்து, ருத்ராட்சம் அணிந்து, கமண்டலம் தூக்கி, வேல் தாங்கி ஒரு பெரும் முருக துறவியாக மாறிப்போனார். அன்றிலிருந்து அவர், ‘சிவகாமி பரதேசி அம்மையார்’ என்று மக்களால் அழைக்கலானார்.

அவர் மலைமேல் இருக்கும் திருமலை குமரனுக்கு வசந்த மண்டபம் கட்டுகிறார். தெப்பக் குளத்தைத் தூர்வாரி செம்மைப்படுத்துகிறார். சும்மாவா?! தன்னோட மகன் வசிக்கும் வீடல்லவா? அதனால்தான் தாய் விழுந்து விழுந்து கவனிக்கிறாள்.

ஒருமுறை மலைமேல் மண்டபம் கட்டிக் கொண்டிருந்தபோது, கீழிருந்து கற்தூண்கள், உத்தரங்களைக் கட்டி மேலே இழுக்க பனை நார் தேவைப்பட்டது. திருச்செந்தூரில் நல்ல பனைநார் கிடைக்கும் என்பதை அறிந்த அம்மையார், அங்குச் சென்றார். அப்போது திருச்செந்தூரில் மாசித் திருவிழா நடைபெற்றது. செந்திலாண்டவர் தேரில் வலம் வந்து கொண்டிருந்தார். சுவாமியைக் கண்டதும் கண்ணீர் பெருக்கியபடி தன்னை மறந்து நின்றார் சிவகாமி அம்மையார்.

அம்மையார் நிற்பதை இடையூறாக எண்ணிய கோயில் பணியாளர் ஒருவர் அவரைக் கீழே தள்ளியதோடு, அவமரியாதையாகப் பேசினார். எழுந்த அம்மையார், அமைதியாக ஓரிடத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

விளைவு... ஓடிய தேர் அப்படியே அசைவற்று நின்றது. கூடியிருந்தவர்கள் பலமுறை முயன்றும் தேர் அசையவில்லை. பிறகு, விவரம் அறிந்து சிவகாமி அம்மையாரிடம் மன்னிப்பு கேட்ட பிறகே தேர் நகர்ந்தது என்பது அவரைப் பற்றிய மகிமை.

புளியறை கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 160 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதை அறிந்து, அதை மீட்க திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நம் பெண் சித்தர். அப்போது அந்தச் சொத்துக்கு ஆதாரமாக மண்ணில் புதைந்திருந்த செப்புப் பட்டயம் ஒன்று அவருக்குக் கிடைத்தது.

சிவகாமி பரதேசி அம்மையார் திருவனந்தபுரம் நீதிமன்ற திண்ணையில் அமர்ந்து மரச்சீனிக் கிழங்கையும் சுட்ட நேந்திரங்காயையும் உண்ணும் காட்சியை வெள்ளைக்கார நீதிபதி வியப்புடன் பார்த்துச் செல்வாராம். அந்த வியப்பே தீர்ப்பானது. ‘இவர், தன்னலம் இல்லாத அசாத்திய பெண். அவர் பக்கமே நீதி நிற்க வேண்டும். பட்டயத்தில் உள்ளபடி நிலங்கள் யாவும் கோயிலுக்கே சொந்தம்’ என்று தீர்ப்பை எழுதினார். அப்புறம் என்ன... மீண்ட வறண்ட பூமி, வயலாகச் செழித்தது.

சிவகாமி அம்மையார் தாம் கட்டி வைத்த எந்த கற்றூணிலும் மண்டபத்திலும், தனது பெயர் பொறிக்கப்படாது பார்த்துக்கொண்டார்... பூமியில் செழிக்கும் எந்த பச்சையத்திலும் சூரியன் தனது பெயரை எழுதாததைப் போல.

வண்டும் பொட்டலில் முன்னரே தனக்காகக் கட்டிக்கொண்ட சமாதியில், அவர் விரும்பிய நாளில் 1854 ஜூன் 9 (வைகாசி 28) வெள்ளிக்கிழமையன்று சிவகாமி அம்மையார் முருகனோடு இரண்டறக் கலந்தார். இறையருள் பெற்றவர்க்கே தனக்கு விருப்பமான நாளில் நிரந்தர ஓய்வு கிடைக்கும். இப்போதும் இங்கு வைகாசி விசாகத்தன்று குரு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

‘சரிப்பா... சரியா வழியைச் சொல்லேன்’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நெல்லை மாவட்டம், தென்காசியிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் வண்டும் பொட்டல் அமைந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து ஐந்து கிலோ மீட்டரில் வண்டும் பொட்டலை அடையலாம். தென்காசி, செங்கோட்டைக்கு ரயில் வசதி உண்டு. செங்கோட்டையில் அச்சன்கோவில் செல்லும் வழியில் பண்பொழி என்னும் இடத்தில் அம்மையார் சமாதியும், முருகன் கோயிலும் உள்ளன. ஒருமுறை நீங்களும் இங்கே ஆன்மிக சுற்றுலா போய் வாங்க. உங்க ஆன்மா ஆரோக்கியமாகும்.

சிவகாமி பரதேசி அம்மையார் பற்றி எழுதி முடிக்கும்போது, ‘எந்தப் பெண் மீதும் மனம் புண்படும்படி வசைச் சொல் வீசக்கூடாது. துறவிகளில் மதம் பார்க்காதே. வெறும் மந்திரம் மட்டுமன்றி, மானுட சட்டத்தையும் கையில் எடுங்கள். உண்மை உம் வசம் இருந்தால் உயிர் நாதன் உன் கூடவே இருப்பான்’ என்றெல்லாம் நான் உள்வாங்கிக் கொண்டேன். உங்களுக்கு எப்படியோ...?!

(தரிசனம் தொடரும்)

Comments

Thenmozhi says :

Arumaiyana padaipu. Ungal pani thodarathum. Vazthukal.

ரிஷபன் says :

பிறரை அவதூறு செய்தால் அது கற்களின் மலையாகிப் மரணித்தபின் செய்தவனே அதை உணவாய் விழுங்க வேண்டியிருக்கும் என்பார்கள். சித்தர்கள் பகுதியால் அகத்தூய்மை சுலபமாய் நிகழ்கிறது.

விஜி முருகநாதன் says :

அருமை என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.. உண்மையான பக்தி இருக்கும் தாய் இறைவனையே மகனாகப் பெற்றெடுத்த வரலாறு சிலிர்க்க வைக்கிறது.

Prabhamurugesh says :

சிவகாமி பரதேசி அம்மையார்அவர்களை படிக்க வைத்து மனசு ரொம்ப லேச ஆகிவிட்டது சூர்யா..உண்மை இருந்தால் உயிர் நாதன் கூடவே இருப்பார்.இது மறைக்கமுடியாத உண்மை..அங்கே போய் ஒரு தடவை சாமதியை தரிசித்தது வரணும் சூர்யா. உங்கள் மூலம் தெரிந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சூர்யா

ரமணி ரமா says :

என்ன தவம் செய்தனை..

Manasvi Uma says :

அருகிலுள்ள சித்தர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. படிக்கும்போதே மெஹந்தி கண் கலங்குகிறது. அருமையான கட்டுரை.

G Srikanth says :

படிக்கும் போது என் அம்மாவின் நினைவு வந்தது. முருகனை நேரில்்நிலை வாசற்படியில் பார்த்ததாகக் கூறுவார்.மாடு முட்ட வந்த போது கூட ஐயோ முருகா என அலறியதைக் கண்டேன். அப்பாவின் தம்பி ஒரு முறை ஏதோ பழித்துப்பேச , திண்டாடி மண்டை கலங்கனும் என்றார். சிறிது நாள் மருத்துவ சிகிச்சை பெற்றே அவர் சித்தம் தெளிவானார்.

Suseela moorthy says :

இறைவன் கொஞ்சம் சோதிப்பான். பிறகு, ‘ஐயோ... என் செல்லமே’ன்னு கட்டிப்பிடிக்க ஓடி வருவான்... இந்த சூழலில் மனத்தை லேசாக்கும் வார்த்தைகள் விளக்குக்கு என்ன பேதம்? எல்லா இருளும் அதற்கு ஒன்றுதான். இருளை விழுங்குவது மட்டுமே அதன் பணி. அகல் விளக்கை எந்தப் பொருளில் செய்தால் என்ன? மதமும் அப்படித்தான். சித்தர்கள் பற்றிய வரலாற்றுடன் மனிதத்துக்கும் மதத்துக்குமான உறவை அடிக்கோடிடுவது செம.. இத்தொடரை முழுவதுமாகத் தொகுத்து வெளியிட்டால் என்ன சூர்யா .. ஐடியா இருக்கா .. வாழ்த்துகள்

ப. தாணப்பன் says :

பைம்பொழில் என்பதே மருவி பண்பொழியானது. ஐந்தாறு முறைக்ஞ மேல் அங்கு சென்றிருந்தாலும் சிவகாமி பரதேசி அம்மையார் பற்றி அறியாதது அம்மையின் அருட்பேராற்றல் அதுவரையினில் நம் மேல விழாததே காரணம் என எண்ணுகிறேன். அடுத்த முறை நிச்சயம் போய் தரிசிக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :