• SPARKLES | மினுமினு

கலவரம் ஏற்படுத்தி வரும் கறுப்பு பூஞ்சை நோய்


- ஜி.எஸ்.எஸ்.

கொரோனா என்ற வார்த்தைக்கு அடுத்ததாக அதிகம் பேசப்படும் நோயாக மாறிவிட்டது ‘கறுப்புப் பூஞ்சை நோய்’.

இது இந்தியாவில் பரவலாக இருந்திராத நோய். முதல் கொரோனா அலையிலும் இதன் பாதிப்பு இல்லை. ஆனால் இரண்டாவது அலையில் இது பல மடங்கு பரவி வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவழியாக மீண்டவர்களை நிம்மதிப் பெருமூச்ச விடமுடியாமல் இந்த நோய் அடுத்ததாகத் தாக்க வாய்ப்பு உண்டு என்பதுதான் பிரச்னை. இதனால் பார்வை இழப்பு நேரலாம் என்று முதலில் தகவல் வந்தது. பிறகு பக்கவாதம், உயிரிழப்பு ஆகியவற்றையும் இது ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூற, பதற்றம் கூடியுள்ளது.

இது கொரோனா காலத்தில் உருவான புதிய பாதிப்பு அல்ல. நீண்ட காலமாகவே இருந்து வருவதுதான். (எனவே கொரோனா பாதிப்பு உண்டானவர்களுக்கு மட்டுமே இந்த நோய் உண்டாகும் என்பதில்லை). நோய்த் தடுப்பாற்றல் குறைவானவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துகிறது என்பதுதான் கொரோனாவையும் இந்த நோயையும் இணைக்கும் பாலமாக உள்ளது.

ஒரு வகைப் பூஞ்சைக் கிருமியால் (இதன் பெயர் மியூகார்மைகோசிஸ்) உண்டாகும் நோய் இது. இந்தப் பூஞ்சை அசுத்தத் தண்ணீர், விலங்குகளின் கழிவு மற்றும் அழுகிய காய்கறி/பழங்களில் காணப்படுகிறது. அது காற்று மூலம் நமக்குப் பரவக் கூடும். இநதப் பூஞ்சை மூக்கு, கண், நுரையீரல், மூளை, தோல் ஆகிய உறுப்புகளின் செல்களைச் சிதைத்து இந்த நோயை உருவாக்குகிறது. பார்வை நரம்பு வழியாக மூளையையும் தாக்கக் கூடும்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், இந்தத் தொற்றானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கே நோயாக மாறும். அதாவது தீவிர சர்க்கரைநோயாளிகள், உறுப்புமாற்று சிகிச்சை செய்துகொண்டவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிக நாட்களாக இருப்பவர்கள், புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள், போன்றவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு. இப்போது இந்தப் பட்டியலில் கொரோனா நோயாளிகள்.

எதனால் கொரோனா நோயாளிகள்? தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டு வழங்கப்படுகிறது. இது கொரோனாவிலிருந்து நோயாளியைக் காப்பாற்றுகிறது என்றாலும் அவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடுகிறது.

சர்க்கரைநோய் உள்ளவர்களை அதிக அளவில் தாக்கும் தன்மை கொரோனாவுக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு ஊசிமருந்து ஏற்றப்படும்போது (கொரோனா பாதிப்பு குறைந்தாலும்) ரத்தச் சர்க்கரை அளவு (மேலும்) அதிகரிக்கிறது. இதனாலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால்தான் கொரோனா குணமான பின்னர் இவர்களுக்கு ‘கறுப்புப் பூஞ்சை’ ஆபத்து அதிகரிக்கிறது.

ஆக்ஸிஜன் செலுத்தும் கருவி மற்றும் வென்டிலேட்டரில் உள்ள ஈரமூட்டும் பகுதிகளில் தண்ணீரை உடனுக்குடன் மாற்றுவது (பல நோயாளிகள் ஆக்ஸிஜன் சிகிச்சைக்குக் காத்திருப்பதால்) தாமதப்படுகிறது. அதனாலும் கருவியின் அந்தப் பகுதியில் பூஞ்சை படர்ந்து கறுப்புப் பூஞ்சை நோய் அதிகரிக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன? கண்கள் சிவப்பது, வீக்கம், வலி, இமை இறக்கம், பார்வைத திறன் குறைவது, தலைவலி, மூக்கடைப்பு, மூக்கில் ரத்தம் வழிவது, மூக்கைச் சுற்றி கறுப்புத் திட்டுகள் தோன்றுவது, கன்னத்தைச் சுற்றி வீக்கம் மற்றும் உணர்வின்மை ஆகியவை முக்கிய அறிகுறிகள். சிகிச்சை தாமதமானால் பார்வை இழப்பு உண்டாகும். கண்ணை நீக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அப்படிச் செய்யவில்லை என்றால் பூஞ்சை மூளைக்குப் பரவி உயிரிழப்பை உண்டாக்கக் கூடும்.

கறுப்புப் பூஞ்சை நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

• உடனடியாக கொரோனாவுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

• காற்றின் மூலம் இது பரவுவதைக் கட்டுப்படுத்துவது நம் கையில் இல்லைதான். ஆனால் குடிக்கும் மற்றும் குளிக்கும் நீர் சுத்தமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

• ஆவி பிடிப்பதற்கு சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள்.

• நீரிழிவுக்காரர்கள் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரியானபடி கட்டுப்படுத்துவது மேலும் அவசியம். எனவே சரியான உணவு மற்றும் போதிய உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

• கொரோனாவின் அறிகுறிகள் தெரியத் தொடங்கியவுடனேயே முறையான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஸ்டீராய்டு பயன்பாட்டைத் தடுத்துவிட வாய்ப்பு அதிகம்.

• ஸ்டீராய்டு தேவைப்பட்டாலும் குறைந்த காலத்துக்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.

• கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் அடுத்த சில வாரங்களுக்கு தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உரிய உணவு மற்றும் மருந்துகள் மூலம் கூட்டிக் கொள்ள வேண்டும்.

வெள்ளைப் பூஞ்சை நோய் என்பது பற்றியும் பயமுறுத்துமூ தகவல்கள் பரவி வருகின்றன. சில வட மாநிலங்களில் அது அதிகமாகப் பரவி வருகிறது. இந்தப் பூஞ்சையை கான்டிடியாசிஸ் என்பார்கள். இது அசுத்தமான தண்ணீர் மூலம் பரவக் கூடியது. மற்றவர்களைவிட, இந்த நோய் பெண்களையும் குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கிறதாம்.

கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சை நோய்களுக்கிடையே சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஏற்படுகின்றன. முக்கியமாக, நீரிழிவு நோயாளிகளுக்கும் ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து எடுத்துவருபவர்களுக்கும் இவை ஆபத்தாகின்றன.

உடலின் பல பகுதிகளையும் இது பாதிக்கலாம் என்றாலும் இந்தக் காலகட்டத்தில் நுரையீரல்களைத்தான் ‘வெள்ளைப் பூஞ்சை’ அதிக அளவில் பாதிக்கிறது.

இது நுரையீரலைப் பாதிக்கும்போது, கொரோனா தாக்குதலின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகளே இதிலும் தெரிகின்றன. எனவே ‘ஆர்டிபிசிஆர்’ முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்தவர்களுக்கு அறிகுறிகள் நீடிக்குமானால், மார்பு சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் வெள்ளைப் பூஞ்சை பாதிப்பை அறிய முடியும்.

‘கறுப்புப் பூஞ்சை’யின் பல அறிகுறிகள் முகத்தில் தோன்றுவதால் உடனே கவனிக்க முடிகிறது. ‘வெள்ளைப் பூஞ்சை’யின் அறிகுறிகளோ மார்பு மற்றும் வயிற்று உறுப்புகளிலிருந்து தோன்றுவதால் உடனே கவனிக்கத் தவறி, அது உயிருக்கு வைக்கும் நிலைக்குச் சென்று விடுகிறது.

‘வெள்ளைப் பூஞ்சை’க்குப் பலதரப்பட்ட மருந்துகள் உள்ளன. இதை எளிதில் குணப்படுத்திவிடலாம். மற்றபடி கறுப்புப் பூஞ்சையைத் தடுக்க அளிக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை இதற்கும் பயன்படுத்தித் தவிர்க்கலாம்.

Comments

Prema Narayanan says :

கருப்பு பூஞ்சை நோயைப்பற்றி மிகவும் அருமையாக விளக்கியிருந்தார் கட்டுரை ஆசிரியர்

Jayanti Sundar Rajan says :

Very useful information...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :