• GLITTERS | பளபள

கொழும்பு போர்ட் சிட்டி : தனி கரன்சி .. சீன ஆதிக்கம் ?!


கட்டுரை : வி. கார்த்திகேயன்.

இலங்கையில் அந்நாட்டு பாராளுமன்றம் கொழும்பு போர்ட் சிட்டி என்கிற பெயரில் சிறப்பு பொருளாதார மண்டலம்் ஒன்றை உருவாக்கும் மசோதாவை பலத்த எதிர்ப்புக்கு இடையே கடந்த வியாழனன்று (மே-20) நிறைவேற்றியுள்ளது. இது கடலில் செயற்கையாக உருவாக்கப் படவுள்ள துறைமுக நகரம் ஆகும் . இதற்காக 269 ஹெக்டேர் நிலத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து, கொழும்பு நகரத்துடன் இணைத்துள்ளது.

இந்த மசோதா மே 20-ம் தேதியன்று இலங்கை பாராளுமன்றத்தில் 149 வாக்குகள் ஆதரவுடனும், 58 எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின் கீழ், கொழும்பு துறைமுக நகரம் எனும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிர்வகிக்க ஜனாதிபதியால் புதிதாக ஒரு ஆணையம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரி.. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று கருதக்கூடிய இந்த வளர்ச்சி திட்டத்துக்கு இலங்கையில் ஏன் எதிர்ப்பு?!

இந்த புதிய துறைமுக நகருக்குள் இலங்கை பணம் மட்டுமல்லாது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தியும் வணிகம் செய்யலாம் என இலங்கை சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இலங்கை நாட்டினரேகூட இப்பகுதிக்குள் சுதந்திரமாக செல்ல முடியாதபடி தடை ஏற்படும் என்று கருதப்படுகிறது.

அதாவது, இந்த துறைமுக நகரம் எனும் பெயரில் சீனா மறைமுகமாக தனது கரன்சியை பயன்படுத்தி வியாபாரம் செய்யவும், ஆதிக்கம் செலுத்தவும் வசதியாக இந்நகரம் உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, போர்ட் சிட்டி மசோதா ஏப்ரல் 8-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதை எதிர்த்து 19 மனுக்கள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான தீர்ப்பு மே-18 அன்று வெளியானது. நாட்டின் அரசியலமைப்பை உறுதிப்படுத்த முக்கிய உட்பிரிவுகள் திருத்தப்பட்டால் மசோதாவை நிறைவேற்றலாம் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியது.

இதையடுத்து கடந்த வாரம் இரு தினங்கள் இது குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட மசோதாவுக்கு பெரும்பான்மையான எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து இந்த போர்ட் சிட்டி திட்டம் மூலம் ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே மே 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதில் பெரும்பான்மையான வேலைவாய்ப்பு இலங்கை நாட்டினருக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த

திட்டம் செயல்படுத்தப் பட்டால், கொழும்பு நகரமானது ஹாங்காங் போல தெற்காசியாவில் ஒரு முக்கிய நிதி மற்றும் சேவை மையமாக மாறும் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

இதில் இந்தியாவுக்கான செய்தி அல்லது எச்சரிக்கை என்ன?

சீட்ரேட்- மேரிடைம்.காமின் அறிக்கையின்படி, "சீனா இப்போது இலங்கையில் வேரூன்றி உள்ள பகுதி இந்தியாவின் கன்னியாகுமரியிலிருந்து 290 கி.மீ தூரத்தில் உள்ளது. ஹம்பந்தோட்டாவை ஏற்கனவே சீனா 99 ஆண்டு குத்தகை எனும் பெயரில் கைப்பற்றிவிட்டது. இதனால், இந்தியாவுக்கு பெரும் சவாலாக அமையக் கூடும்" என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். இதே கருத்தை seatrade maritime என்ற இணையதளம் ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வறிக்கையில் கொழும்பு போர்ட் சிட்டி மற்றும் ஹம்பாந்தோட்டாவிற்கு சீனா தனி பாஸ்போர்ட்டை தயார் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

இலங்கை நாட்டினர் சுதந்திரமாக செல்ல முடியாத வகையில், தனி கரன்சி போன்றவற்றை வெளியிடுவதன் மூலம், இந்த புதிய போர்ட் சிட்டி, இலங்கையில் இருந்து பிரிக்கப்பட்டு சீன ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்ட பகுதியாக மாறிவிடும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், இலங்கை அரசாங்கம் இதுவரை தனி பாஸ்போர்ட் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கவில்லை.

Comments

. says :

This clearly shows that our union government has failed diplomatically in this issue. This is yet another step by china to dominate in indian ocean as well as gulf of mannar. This will help china to have a control on trade routes in indian ocean Even the route from the ports of our west coast to east coast has to pass through that region which includes our naval operations and patrolling. Already indian fishermen are struggling with sri lankan navy. Now they are going to have an additional threat. This will surely be another head ache for forth coming union governments. Entire world knows that china is not a trust worthy nation. In spite of that, Government of sri lanka has allowed china to occupy its land and will soon realize the effects of allowing china in its territory.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :