• தீபம் - ஆன்மீகம்

நலமே அருளும் நவ நரசிம்மர்!


- எம்.கோதண்டபாணி

‘எங்கும் நிறைந்தவர் இறைவன்’ என்பதை உணர்த்தும் தத்துவமே நரசிம்ம அவதாரமாகும். இன்று (25.5.2021) ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி திருநாளாகும். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்த அஹோபிலம் திருத்தலமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப்படும் இடமாகும்.

மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை மீண்டும் ஒரு முறை தரிசிக்க விரும்புவதாக ஸ்வாமியிடம் கருடன் விண்ணப்பித்தார். கருடனின் வேண்டுகோளை ஏற்ற பகவான், இத்தலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் அவருக்குக் காட்சி கொடுத்தார். கருடனும் அந்தத் திருமூர்த்தங்களை தரிசித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. பகவான் காட்சி கொடுத்த ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே என்பது குறிப்பிடத்தக்கது!

அந்த நவ நரசிம்ம மூர்த்திகளின் திருநாமங்களையும், அவர்கள் குறித்த பெருமைகளையும் காண்போம்.

1. அஹோபில நரசிம்மர் :
உக்ர மூர்த்தியான இவர் மலை மீது எழுந்தருளியுள்ளார். இவரே இத்தல புராதனப் பெருமாள்.

2. பார்க்கவ நரசிம்மர் :
மலையடிவாரத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளார். இவர் ஸ்ரீராமரால் வழிபடப்பட்டவர். (பார்க்கவன் என்பது ஸ்ரீராமனின் திருப்பெயர்களுள் ஒன்று.)

3. யோகானந்த நரசிம்மர் :
மலை மீது, தென்கிழக்கு திசையில் நான்கு கி.மீ. தொலைவில் அருள்பாலிக்கிறார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர், இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தியும் இவரே.

4. சத்ரவட நரசிம்மர் :
கீழ் அஹோபிலத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோயிலில் பத்ம பீடத்தில் அமர்ந்த வண்ணம் இவர் காட்சி தருகிறார். அரிய வகை கருங்கல்லாலான வடிவம் இவருடையது.

5. க்ரோத (வராக) நரசிம்மர் :
பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோயில் கொண்டுள்ளனர். ‘இரட்டை நரசிம்மர் தலம்’ எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத்தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் இங்கு காணலாம்.

6. கராஞ்ச (சார்ங்க) நரசிம்மர் :
மேல் அஹோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இந்தப் பெருமாள் அருள்பாலிக்கிறார். கராஞ்ச மரத்தடியில் கோயில் கொண்டு, கையில் வில்லேந்தி உள்ளதால் இப்பெயரை இவர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர் :
‘மா’ என்றால் லட்சுமி. ‘லோலன்’ என்றால் பிரியமுடையவன் என்று பொருள். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்தபடியால், லட்சுமிப்ரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அஹோபிலத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இவர் கோயில் கொண்டுள்ளார்.

8. பாவன நரசிம்மர் :
பவானி நதிக்கரையில் கோயில் கொண்டதால் இப்பெருமாள் இப்பெயரைப் பெற்றார். அஹோபிலத்திலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

9. ஜ்வாலா நரசிம்மர் :
மேரு மலையில் இவர் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரை தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் இங்கு உள்ளன.

‘நாளை என்பது நரசிம்மனுக்குக் கிடையாது’ என்பது ஆன்றோர் சொல்மொழி. பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை, செவிமடுத்த அடுத்த நொடியே அதை நிறைவேற்றித் தரும் மகிமை மிக்கவர் ஸ்ரீ நரசிம்மர். ஆகவே, அவரது அவதாரத் திருநாளில் ஸ்வாமியின் திருப்பதம் சிந்தித்து வாழ்வில் நற்பேறுகள் பெறுவோம்.

Comments

பொ. பாலாஜிகணேஷ். கோவிலாம்பூண்டி says :

இன்று நரசிம்மர் ஜெயந்தி எம். கோதண்டபாணி அவர்கள் எழுதிய நலமே அருளும் நவ நரசிம்மர் கட்டுரை படிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன். மிக நேர்த்தியான கட்டுரை. ஆன்மிகம் ஒரு கடல் அதில் தெரிந்துகொள்ள அளவில்லா விஷயங்கள் உண்டு இன்று நவ நரசிம்மர்கள் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி கல்கி தீபம் இதழுக்கும். கட்டுரையாளர்.எம். கோதண்டபாணி அவர்களுக்கும்

பா.கவிதா.சிதம்பரம் says :

இன்று நரசிம்மர் ஜெயந்தி இந்த நன்னாளிலே நவ நரசிம்மர் பற்றி தெரிந்திராத பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். தீபம் இதழைப் படிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த எங்களுக்கு இக்கட்டுரை பெரும் ஆறுதலாக இருந்தது தொடருங்கள் இதுபோன்ற கட்டுரைகளை....

தனுஜாஜெயராமன் says :

கட்டுரை மிக அருமை. இன்று நரசிம்மர் ஜெயந்தி அன்று வந்துளாள இக்கட்டுரை மிகுந்த பயனுள்ளது. கோவிலுக்கு செல்லாமல் வீடடங்கி கிடக்கும் காலகட்டத்தில் மிக சிறந்த பக்தி தரிசனம். மகிழ்ச்சி.

ரெ.வே.ராமானுஜம் says :

நரசிம்ம ஜெயந்தி சிறப்புநாளான இன்று மூல தலமான அஹோபிலம் நவநரசிம்மர் கட்டுரை விவரமாக இருந்தது.மிக்க மகிழ்ச்சி.திரு.கோதண்டபாணி அவர்களுக்கு பாராட்டுகள்.கல்கிக்கு நன்றி.

பா.கண்ணன், புது தில்லி says :

கொரோனா எனும் கொடிய அரக்கன் நம்மை ஆட்டுவிக்கும் இத்தருணத்தில் அதிலிருந்து நம்மை விடுவிக்க இறைஞ்சும் வேளையில் நவ நரசிம்மர்களை நம் மனக்கண்முன் நிறுத்தி நேர்ந்துக் கொள்ள வைத்தக் கட்டுரையாளர் திரு. கோதண்டபாணி அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்.

S.S.Saravanakumar, Senniveerampalayam says :

பக்தனின் அபயக் குரலுக்கு உடனடியாக செவி சாய்த்த அவதாரம் நரசிம்ம அவதாரம். "தூணிலும் இருப்பார் நாராயணன், துரும்பிலும் இருப்பார் நாராயணன்`` என்ற உண்மையை உலகுக்கு நிரூபித்த அவதாரமும் ஆகும். அஹோபிலம் நவ நரசிம்மர் திருத்தலங்கள் குறித்த மகிமையை தீபம் இதழில் வாசித்தது பக்திப் பரவசம் அடையச் செய்தது.

மாலதி சந்திரசேகரன் says :

நரசிம்ம ஜெயந்தியில், நவ நரசிம்ம வைபவம் அனுபவிக்கப் பெற்றோம். திரு. எம். கோதண்டபாணி அவர்களுக்கு நன்றி.

ஆர்.வி.பதி says :

அஹோபிலத்திற்குச் சென்று நவநரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இக் கட்டுரையின் மூலம் நிறைவேறியது. எளிமையான அருமையான கட்டுரை. நன்றி.

திருப்புகழ் மதிவண்ணன் says :

அருமையான தகவல்!வாழ்க கோதண்டபாணியின் பாணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :