• JUST IN | சுட சுட

31-ம் தேதி வரை முழு ஊரடங்கு : தமிழகத்தில் இன்று முதல் அமல்!





தமிழகத்தில் இன்று முதல் 31-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு அறிவித்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்தநிலையில், முழு ஊரடங்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார

இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, டிஜிபி திரிபாதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து, கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

உங்கள் மாவட்டங்களில் கொரோனா நிவாரணத் தொகை அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முதலில் உறுதி செய்தாக வேண்டும்.

* நாளை முதல் (மே-24) நமது மாநிலத்தில் முழு பொது ஊரடங்கு நடைமுறைக்கு வரவிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழவகைகள், பால் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தேவையான தரமான உணவுப் பொருட்கள், பால், குடிநீர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

* பால் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இருப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* வீதிகளில் வாகனம்/தள்ளுவண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் கண்காணித்து வரவேண்டும்.

* முக்கியமாக, இந்த ஊரடங்கு காலத்தில் நீங்கள் மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலமாக சிறப்பாக வீட்டுக்குவீடு சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிவது, நோய்த்தொற்றைக் கண்டறியும் முகாம்கள் நடத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

* நோயாளர்கள், நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை செல்ல போக்குவரத்து சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* தடுப்பூசி போடும் பணிகள் தொய்வின்றிகொண்டு செல்லும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

* மக்களிடையே நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* விவசாய இடுபொருட்கள், வேளாண் விளை பொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்து எவ்வித தடையும் இல்லாமல் இயங்க வேண்டும்.

* உங்கள் மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அவர்களின் கருத்துகளைப் பெற்றும் கட்டுப்பாடு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படலாம்.

* மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பினைத் தொடர்ந்து கண்காணித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணித்து உங்கள் மாவட்டத்தில் நோய்த்தொற்று சதவிகிதத்தை குறைப்பது ஒன்றையே குறிக்கோளாக் கொண்டு செயல்பட வேண்டும்.

* அரசுடன் இணைந்து செயலாற்ற பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றன. மாவட்ட அளவில் அவர்கள் பணியை ஒருங்கிணைத்து மக்களுக்கு அவர்களின் சேவையை கொண்டு சேர்க்க தனி கவனம் செலுத்த வேண்டும். அதற்கென மாவட்ட அளவில் ஒரு தனி அலுவலரையும் நீங்கள் நியமிக்கலாம்.

* தமிழ்நாட்டு மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு நீங்கள் செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :