• தீபம் - ஆன்மீகம்

திசைகளே ஆடையாய்...


சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 7 - அமிர்தம் சூர்யா

காரைக்கால் அம்மையார் சிவனிடம், ‘தனக்குப் பேய் உரு கொடு’ என்று வேண்டுகிறார். சிவன் நடனம் ஆடும்போது சிங்கி மெய்மறந்து, கண் மூடி மிருதங்கம் வாசித்ததால் சிவபெருமானின் நடனத்தைக் காண முடியாமல் போகிறது. ஆகையால் அவர் சிவனிடம், “எனக்கு நீ தனியாக உனது நடனத்தை ஆடிக்காட்டு” என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

சுந்தரர், திருவொற்றியூரில் இருக்கும் சங்கிலி நாச்சியார் என்ற பெண் மீது காதல் கொண்டு சிவனிடம், “நீ எனக்காக அந்தப் பெண்ணிடம் தூது போக வேண்டும்” என வேண்டுகிறார். இப்படி எத்தனையோ சிவ பக்தர்கள் எதையெதையோ வேண்ட, சிவனும் அதைச் செய்து கொடுத்திருக்கிறார்.

ஆனால், இப்படி ஒரு வேண்டுகோளை இதுவரை யாரும் சிவபெருமானிடம் கேட்டு இருக்க முடியாது. என்ன அது?

‘சிவனே! எனக்கு உணவு கிடைக்காமல் போக வேண்டும்! உன்னில் நான் கலந்திடத் துடிக்கும் என் ஆதங்கத்தை எனது உடலும் உணர வேண்டும்! நான் உணவு உண்டால் அதில் எனது உடல் சுகம் கண்டு திருப்தி அடையும். அப்போது உன் மீதான என் உணர்வு இரண்டாம் பட்சமாகி, அது எனது உடலுக்குத் தெரியாமல் போய்விடக் கூடும். அதனால் எனக்கு உணவு கிடைக்காமல் இருக்க அருள்புரிய வேண்டும். ஒருவேளை அப்படி எனக்கு உணவு வந்து சேர்ந்து விட்டாலும், அதனை நான் என் வாயில் இடும்முன் அது கீழே மண்ணில் விழுந்திட வேண்டும். முட்டாளாகிய நான் ஆசையின் பொருட்டு அதனை எடுக்க முனையும்போது, ஒரு நாய் ஓடி வந்து அதனை எடுத்துச் செல்ல அருள்புரிய வேண்டும் சிவனே!’

இப்படி சிவனிடம் அழுது வேண்டிக்கொண்டார் (தமது கவிதையில்) ஒரு பெண். அவர்தான் அக்கா மகாதேவி.

இத்தனைக்கும் இவர் ஒரு சாதாரண பிரஜை அல்ல; ஒரு மன்னரின் மனைவி... மகாராணி. கண்ணனுக்கு எப்படி மீராவோ, அப்படி சிவனுக்கு ஒரு அக்கா மகாதேவி.

மகாதேவி என்ற இந்தப் பெண் பித்தர் இன்றைய கன்னட மாநிலம், சிமோகா மாவட்டத்தில் உள்ள உடத்தடி என்ற ஊரில் விமலர் - சுமதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.

இவர் 25 வயது வரை மட்டுமே வாழ்ந்தார் என நம்பப்படுகின்றது. அதீத சிவபக்தியால் அல்ல; காதலால். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி, அவரையே தனது உளமார்ந்த கணவனாக பாவித்துக்கொண்டார். அவரையே நினைத்து நினைத்து உருகி, கவிதைகள் புனைய ஆரம்பித்தார். ‘வசனா’ எனப்படும் முறையில் இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். அபரிமிதமான அன்பு கொண்ட மக்கள் இவரை, ‘அக்கா’ என அன்போடு அழைக்கலாயினர்.

சராசரி பெண்ணான இவர், சித்த தன்மைக்கு நகர்ந்ததும், சிவனின் பரிபூரண அன்பைப் பெற்றதும், சில மகத்துவங்களை மக்களுக்கு நிகழ்த்திக் காட்டியதும் எப்படி என்பதுதான் தொடரும் வரிகளின் மூலம் உங்களுக்குக் கடந்த காலக் காட்சியாக விரியப்போகிறது.

அந்நாளில் கௌசிகன் என்ற மன்னன் உலா போகும்போது அக்கா மகாதேவியைக் கண்டு, அவள் அழகில் மயங்கி திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால், சின்ன பெண்ணான அக்கா மகாதேவியோ, ‘தான் ஏற்கெனவே சிவனை மணந்து கொண்டேன்’ என மறுக்கிறாள். மன்னனிடம் இந்த பேச்செல்லாம் செல்லுபடியாகுமா என்ன? ‘அவள் மணத்துக்கு ஒப்புக்கொள்ளாவிடில் அவளது பெற்றோர் உயிரிழக்க நேரிடும்’ என மிரட்டுகிறான். அக்கா மகாதேவி பயந்து போகிறாள். அப்போது அவள் பூரண சிவஞானம் பெறவில்லை.

வேறு வழியில்லாமல் ஒரு நிபந்தனை போடுகிறார் அக்கா மகாதேவி. “நான் சிவனை நினைத்திருக்கும் போதும், வழிபடும்போதும் எனது நினைப்பு, வழிபாட்டு இவற்றுக்குத் தடை போடக்கூடாது. அப்படித் தடை ஏற்படுத்தினால் மூன்று முறை மட்டுமே அதை நான் பொருத்துக்கொள்வேன். நான்காவது முறை உம்மை விட்டு விலகி விடுவேன்” என்கிறார். மன்னனும் கல்யாணமானால் போதும் என்று அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறான்.

ஆனால், விதி வலியது. திருமணம் ஆனதும் அவர் சிவ வழிபாட்டில் இருக்கையில், உறவினர் வந்திருப்பதாகக் கூப்பிட்டு ஒருமுறையும், ‘மகாராணியை பார்க்க மக்கள் வந்திருக்கிறார்கள் வா’ எனக் கூப்பிட்டு ஒரு முறையும், ‘நமக்கு ஒரு வாரிசு வேண்டும் வா’ என தாம்பத்தியத்துக்கு அழைத்து ஒரு முறையும் என மூன்று முறை அவரின் சிவ வழிபாட்டுக்குத் தடை ஏற்படுத்தியதும் அக்கா மகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறி விடுகிறார்.

ஆனாலும், மன்னன் கடும் கோபம் கொண்டு அக்கா மகாதேவியை கட்டாயமாக அழைத்து வந்து அரண்மனையில் வைத்து, அவரை விசாரணை கைதி போல் நடத்துகிறான். அப்போது நடந்த உரையாடல் இதுதான் :

“நீ என் மனைவி. உன்னை அப்படி வெளியே விட முடியாது.”

“ஏய்... முட்டாளே! நான் உனது மனைவியல்ல! சமூகத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வினால் நீ அப்படி நினைத்துக்கொள்ளலாம். ஆனால், அது உண்மை இல்லை!”

“நீ எனக்குச் சொந்தமானவள்.”

“என்னுள் இருக்கும் அனைத்தையும் நான் ஏற்கெனவே சிவனுக்குக் சொந்தமாக்கி விட்டேன். நான் உனக்குச் சொந்தமில்லை.”

“நான் உனக்கு கணவன் மட்டுமல்ல; இந்த நாட்டின் அரசன்! உனக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என அனைத்தையும் கொடுப்பது நான்தான்! இப்படியிருக்க, அந்த சிவனுக்கு எப்படி நீ சொந்தமாவாய்?”

“என்ன? உண்ண உணவு நீ கொடுப்பதா? இனி, யாம் பிச்சை எடுத்தே உண்போம். உடை நீ கொடுத்ததா? இனி, எனக்கு உடையே தேவையில்லை. நான் திசைகளையே ஆடையாக உடுத்திக் கொள்வேன்” என்று கூறி, அரண்மனை சபையில் அவ்வளவு பேர் முன்னிலையில் பதினெட்டு வயது பெண் தனது ஆடைகளைக் கழற்றி வீசி நிர்வாணம் ஆகிறார். அப்போது அவரது கூந்தலே திடீரென சச்சரவென வளர்ந்து பெருகி, அவரது உடலை மூடிக் கொண்டதாம்.

அவர் சபையை விட்டு வெளியேறுகிறார். அவர் எறிந்தது ஆடை மட்டுமல்ல, ‘நான்’ என்ற தன்முனைப்பையும்கூடத்தான். ஒரு நாட்டின் மகாராணி நிர்வாணக் கோலத்திலேயே ஊர் ஊராகச் சென்று சிவ மந்திரம் ஓதி, மக்களின் குறை தீர்த்து, நோய் தீர்த்து, துயரம் தீர்த்து சிவனின் பெயரால் பல மகிமைகள் நிகழ்த்துகிறார்.

இவரது நிர்வாணத்தை அதிர்ச்சியுடன் பார்த்த சமூகத்திடம் மகாதேவி, “நான் பெண்ணில்லை, ஆணுமில்லை. என்னை ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்” என்றாராம். இது என்னைச் சலனப்படுத்திய வரி. ‘ஒரு பூ இருக்கிறது. அது ஆணா? பெண்ணா? ஏனெனில், அதில் ஆணுக்குரிய மகரந்தத் தூளும் இருக்கிறது; பெண்ணுக்குரிய சூல் பையும் இருக்கிறது. ஆக, கர்ப்பம் தரிக்க, கனியாக இரண்டு பால் உறுப்புகளுக்கான அடையாளத்தையும் ஒரு பூ பெற்றிருக்கையில், அது ஆணா? பெண்ணா?’ இப்படிக் கேட்டு நான், ‘கிறுக்கு’ பட்டம் வாங்கியதும் உண்டு.

அல்லம் பிரபு என்பவர், அக்கா மகாதேவியிடம், “உனக்குத்தான் உடல் பற்றிய பிரக்ஞை இல்லையே... பிறகு ஏன் கூந்தலால் உனது உடலை மறைக்கிறாய்?” என்று கேட்டாராம்.

அதற்கு அக்கா மகாதேவி புன்னகை தவழச் சொன்னார், “எனக்கு என் உடல் பற்றிய எந்த நினைவுமில்லை. ஆனால், மற்றவர்கள் சலனமுறாமல் இருக்கவே இந்தக் கூந்தல் மறைப்பு.” - அல்லம் பிரபு அன்றிலிருந்து தேவியின் சிஷ்யரானார்.

சிவனின் மனைவியாகவே தன்னைப் புனைந்து கொண்டு, கவி பல எழுதி, இருபத்தி ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே வாழ்ந்தார் அக்கா மகாதேவி. ஸ்ரீசைலத்தில் உள்ள குகை ஒன்றில் தங்கியிருந்து சிவ பாடல்களைப் பாடியபடியே சிவனிலேயே லயித்து, கி.பி.1,166ஆம் ஆண்டு மல்லிகார்சுனரோடு ஒன்று கலந்தாராம். ஸ்ரீசைலம் ஆலயத்தில் அக்கா மகாதேவிக்கும் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

இன்றும் ஸ்ரீசைலம் செல்பவர்கள், கிருஷ்ணா நதியில் பரிசலில் சென்று அக்கா மகாதேவி தவம் செய்த குகையை தரிசிக்கலாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் பிரார்த்தனைக் குரிய தலமாக இது திகழ்கிறது.

முடிக்கும்போது, இந்த சித்தர் சொல்லும் சேதி என்ன? ‘கடவுளுக்கே நான்தான் மனைவி’ என்று சொல்லிச் சொல்லி, சிவனையே சிந்தையில் நிறுத்தி, எதிர்ப்பட்ட இன்னல்களைச் சிவன் பெயரால் தகர்த்து, வல்லமை பல பெற்று, சிவனிடமே ஐக்கியமாக இவரால் முடிந்தது என்றால், உங்களுக்கும் என்ன வேண்டுமோ அது நிச்சயம் சிவ வழிபாட்டினால் கிடைக்கும். எது தேவையோ அதன் மீது புத்தியை மட்டுமல்ல; ஆன்மாவையும் குவியுங்கள். அப்போது, நீங்கள் விரும்பியது உங்கள் தோளின் மேல் கைபோட்டு, ‘கூப்பிட்டாயா?’ என்று கேட்கும்.

(தரிசனம் தொடரும்)

Comments

ரமணி ரமா says :

அவனருளாலே அவன் தாள் பணிந்து.. அவனை உணர்ந்து அவனில் கலந்து.. ப்பா.. அக்கம்மா தேவி..

விஜி முருகநாதனா says :

தன் அனுமதி இல்லாமல் கணவனின் விருப்பங்களை தன் மீது திணிக்கக் கூடாது என்று அந்தக் காலகட்டத்திலேயே தன் சுயம் உணர்த்திய அக்காமகாதேவியின் கதை சூர்யாவின் எழுத்துக்களில் சுயம்பிரகாசமாய் பிரகாசிக்கிறது.

Nandakumar says :

வீடு முழுக்க விபூதி மணம். நண்பா உன் எழுத்தில். நான் 22 வயதில் சிமோகாவில் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த காலத்தில் அக்கா மகாதேவியை குறித்து அங்குள்ள மக்களிடம் வியந்து கேட்ட நினைவுகள் வருகிறது. இப்போது என் மனைவியும் (கர்நாடகத்தில்) வசித்ததால் நிறைய பேசுவாள்... மகிழ்வும் வாழ்த்துகளும் நண்பா.

ரிஷபன் says :

சித்த பூமி நம்நாடு. ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றி இருக்கிறார்கள். இன்றைய சூழலில் அப்படி ஒருவர் வருவாரா என்று ஏங்க வைக்கிறது உங்கள் பதிவு

sudhakar Sampath says :

அட்டகாசம் தலைவா

MATHIPRIYA S says :

அருமை... படிக்கும் போதே சிலிர்க்கறது.. என்ன ஒரு கம்பீரம், காதல்..

Mangalagowri says :

உண்மைதான் சூரியா. `இந்தாப்பா இதுக்கு மேல தாங்காது... இனி எது வந்தாலும் இந்தக் கட்டை ஒன்னோட பொறுப்பு` என்று பாரத்தை தூக்கி போட்டு விட்டு அக்கடா என்று அமர்ந்து விட்டோம் என்றால், அடுத்தடுத்து நடப்பது எல்லாமே... `அட...` என புருவம் தூக்க வைக்கும். அனுபவம் உள்ளவர்கள் அறிவார்கள். ஆனாலும் இந்த அக்கா மகாதேவிக்கு இருந்த தெனாவெட்டு... அது வரது கொஞ்சம் சிரமம்தான். பார்ப்போம் காலம் என்ன வைத்திருக்கிறது என்று. நன்றியும் அன்பும் சூரியா, திசைகளையே ஆடையாய் உடுத்தியவளை அறிமுகம் செய்தமைக்கு.

G Srikanth says :

அக்கமகாதேவி சிவனருளால் கொரோனா ஒழிந்து மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுகிறேன். ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜேஹம்

Devika says :

Arumai thozhar!

வே.எழிலரசு. says :

சிறப்பாக இருக்கிறது. சீரிசைலத்தில் அக்கமாதேவி... என்பது எனக்கு புதிய தகவல். 2019 ல் சீரிசைலம் போனேன். அப்போதே அறிந்திருந்தால் அக்கமாதேவியின் சந்நிதியில் மனமுருக நின்றிருப்பேன். ஏனெனில் தேவி நவ கன்னட இலக்கியத்தின் பேரன்னை. நான் கன்னடம் அறியேன்.ஆனால் கன்னடத்தை உயிராய் நேசிக்கும் சில நண்பர்கள் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள்.

இன்பா says :

அக்கா மகாதேவியைப் பற்றி ரொம்ப அழகா சொல்லிட்டிங்க. திசைகளே ஆடையாய் ....ச்ச.. என்ன ஒரு துணிவு தைரியம் .. சிறப்பான நல்ல பதிவு.

Prabhamurugesh says :

அக்கா என்று அன்புடன் அழைப்பார்கள்.ஆஹா எவ்வளவு பெரிய விஷயம் இந்த சின்ன வயதில்..ஒவ்வொரு பெண் சித்தர் பிரம்பிப்பு மேலோங்கிறது..சூர்யா மட்டுமே எழுத்துக்கள் மூலம் ..இப்படி ஓரு பிரம்பிப்பை கொண்டவர முடிகிறது..வாழ்த்துக்கள் பல சூர்யா

மதி நிலவு says :

மெய்சிலிர்க்க வைக்கிறது அக்கா மகாதேவியின் கதை...அருமை சூர்யா சார்...

இன்பா சுப்ரமணியன் says :

இது எத்தகைய ஒரு பக்தி? உங்கள் எழுத்தின் வீச்சு... அக்காவுடன் அறுகில் நின்று அந்த வெப்பத்தினை தொட்டது போல் என் கண்கள் தாரையாக என்னை நிறைக்கிறது... #திரௌபதியின் பக்தியினை விடவும் மேலாய் சரசரவென வளர்ந்த முடி உடல் மூட.# அருமை.... எனக்குள் ஏதோ உடைகிறது கண்ணா... ஏனெனில் நானும் பால் கடந்தவள்... என் அன்பு என்றும் ❤️.. என் நாள் ஆசிர்வதிக்கப்பட்டது.. மிக்க நன்றி..

K.anuradha says :

சிவனே சுயம்புதான்.அக்காமகாதேவி சுயத்தை தொலைக்காமல் சுயம்புவை அடைந்தார். சூப்பரா எழுதுறீங்க சூர்யாசார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :