• தீபம் - ஆன்மீகம்

சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 6 - இப்படிக்கு குருசாமியம்மாள்


அமிர்தம் சூர்யா

‘மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் சிவனை குறித்துச் சிலாகிக்கின்றார். ‘மின்னலுக்கு ஒப்பான தீ போன்ற சடையின் மேலே ஒளிரும் மஞ்சள் நிறக் கொன்றை மலரை அணிந்தவனே’ என்பது இதற்குப் பொருள். சட்டென சிவனை பார்ப்பவர்க்குக் கண்ணில் படுவதும் மனதில் நிற்பதும் அவரது சடைதான். காரணம், அதில்தான் கங்கை குடிகொண்டிருக்கிறாள். பிறை அலங்கரிக்கிறது. மலை போல் சடை இருக்கிறது. அதில் கொன்றை மலர் சூடப்பட்டிருக்கிறது. ஆக, மலை, அருவி, கொன்றை மலர், பிறைச் சந்திரன் இத்தனையும் கொண்ட ஒரு அழகிய சுற்றுலா தலம் போல் சிவபெருமானின் சிரசு இருந்தால் மனசு வேறு எதில் லயிக்கும்? இயற்கையே கடவுளின் குறியீடுதான் என இதை நான் அர்த்தப்படுத்திப் பார்க்கிறேன். ஆக, இதற்கெல்லாம் ஆதாரம் சிவனின் சடா முடி.

பெண் குழந்தை தனது அம்மாவைப் பார்த்து, ஒரு துணியை எடுத்து புடவை போல் கட்டிக்கொள்வதைப் பார்த்து இருக்கிறோம். கடவுளைப் பார்த்து, அவரது தீவிர பக்தர்கள் அவரைப் போல் சடை முடியை வளர்த்துக்கொள்வதும் அப்படித் தானோ?! அது வளர்த்துக் கொள்வதா? அல்லது அதுவாகவே அமைந்து விடுவதா தெரியாது. அது நமக்கு வாதமும் அல்ல. பல சிவனடியார்கள் சடை தரித்து உலா வருகிறார்கள். அது ஒரு சைவ அடையாளம். அப்படி சடா முடியுடன் வலம் வந்த ஒரு பெண் சித்தர்தான், ‘சடையம்மாள்’ என்கிற குருசாமி அம்மையார்.

குருசாமி அம்மையார் சமாதி ஆலயம் உள்ள இடம் பாண்டி மற்றும் தமிழ்நாட்டின் எல்லையில் உள்ளது. அவர்தம் காலத்தில் பிரான்ஸ் நாட்டினர் புதுச்சேரியிலும், தமிழகத்தில் ஆங்கிலேயர்களும் ஆண்டு கொண்டு இருந்தனர். அது விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம். கண்டமங்கலத்தில் காவல் நிலையம் இருந்ததினால் இந்த ஜீவசமாதிக்கு வருகை தர நினைக்கும் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள், ‘தங்களைப் புரட்சியாளர் என்று நினைத்து, அரசு தொல்லை கொடுக்குமோ’ என்று பயந்திருந்த காலகட்டம் அதுவென்பதால், பக்தர்கள் வருகையின்றி அந்த ஜீவசமாதி பாழடைந்துபோனது.

ஒரு சமயம் தஞ்சாவூரிலிருந்து நடைப் பயணமாக வந்து கொண்டிருந்தார் துறவி நடராஜ ஸ்வாமிகள். அப்போது ஒரு இடத்தில், கிட்டத்தட்ட அசரீரியாக ஒரு குரல் அவரது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, “குருசாமி ஆலயத்துக்குப் போ” என்று ஆணையிட்டதாம்.

அதைக்கேட்டு திடுக்கிட்ட அவர், அந்தக் குரல் காட்டிய வழிகாட்டுதலின்படி ஒரு இடத்தில் வந்து பார்த்தபோது, அங்கு முற்களும் சருகுகளும் மண்டிக்கிடந்த புதர் ஒன்றைக் காண்கிறார். அப்போது அந்தக் குரல் மீண்டும் ஒலித்து, “வா... வந்து விட்டாய். உனது ஆன்மிகக் கடமையைக் குருசாமி அம்மையார் சமாதியிலிருந்தே தொடங்கு” என உத்தரவு வந்திருக்கிறது. அதைக் கேட்ட நடராஜ ஸ்வாமிகள், புதரை அகற்றிப் பார்த்தபோது, ஒரு ஜீவசமாதி இருப்பதைக் கண்டு, அங்கு மாடம் ஒன்றை எழுப்புகிறார். இப்படிதான் குருசாமி அம்மையார் ஜீவசமாதி மீண்டும் அடையாளம் காணப்பட்டது.

மிகச் சரியாகச் சொல்லவேண்டுமானால் இந்த பெண் சித்தரின் சமாதி ஆலயம் கண்டமங்கலம், சமரச சுத்த சண்மார்க்க நிலையத்தில் அமைந்துள்ளது.

குருசாமி அம்மையார் யார்? அவர் எங்கிருந்து வந்தார்? அவர் வாழ்ந்த காலம் எது? போன்ற எந்தத் தகவலும் யாருக்கும் துல்லியமாகத் தெரியவில்லை. 1900ஆம் ஆண்டில் கந்தசாமி சாமியார் என்பவருக்கு அவர் எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படும் உயிலில் தம்மை, ‘கண்டமங்கலத்தை சார்ந்த சுதர்சன ஐயங்காரின் குமாரத்தி குருசாமியம்மாள்’ என்று எழுதி கையொப்பமிட்டுள்ளாராம். ஆக, அதுதான் அவருடைய காலமாக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. சுதர்சன ஐயங்கார் என்று தனது தந்தையார் பெயரைக் குறிப்பிட்டிருப்பதால், அவர் வைஷ்ணவ குடும்பத்தைச் சார்ந்த பிராமணர் ஒருவரின் புதல்வியாக இருக்கலாம். பின்னர், அவர் சைவ சமயத்துக்கு மாறி சன்னியாசியாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அம்மையார் கண்டமங்கலத்துக்கு வந்திருக்கிறார். அங்கேயே தங்கி ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் இருந்திருக்கிறார். தினக் கடமைகளையும், உணவையும், தன்னிலையை யும் மறந்து, வனப்பகுதியில் பல நாட்கள் அமர்ந்திருந்ததையும், முகத்தில் நிலவிய தெய்வீகக் களையையும் கண்ட அப்பகுதி மக்கள், ஒரு முதிய அம்மா ஸ்தானத்திலிருந்ததாலும், சடாமுடியோடு ஒரு சாமியார் போல் இருந்ததாலும் தங்கள் மனக்குறையை அவரிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார்கள். அதன் பின்னர் அவர்களது குறை உடனே நிவர்த்தியானதைக் கண்டு, அச்செய்தி ஊர் முழுக்கப் பரவி பலரும் தங்களது குறையைச் சொல்ல வர ஆரம்பித்துள்ளனர்.

சிவனை போல் சடாமுடி வளர்ந்து தொங்கிய குருசாமி அம்மையாரிடம் ஒரு விசேஷ பழக்கம் இருந்ததாம். ஒவ்வொரு பௌணர்மிக்கும் அவர் மிளகாயை விழுதாக அரைத்து உடலெல்லாம் பூசி, அருகில் உள்ள படி இல்லாத கிணற்றில் இறங்கிக் குளித்துக் கரையேறுவாராம். அவர் எப்படிக் கிணற்றில் இறங்கினார்? எப்படி ஏறினார்? என்பதுதான் மாயம்.

ஒரு முறை பெண் ஒருவர் அவரைப் பின் தொடர்ந்து சென்று, கிணற்றில் பார்த்தால் அங்கு குருசாமி அம்மையார் இல்லை. அதற்கு பதில் கிணற்று நீரின் மேற்பரப்பு முழுக்க வெங்காயத் தாமரை போல் அவரின் சடாமுடி மூடி இருந்ததாம். அன்றிலிருந்து மக்கள் அவருடைய நீளமான கூந்தலின் வளர்ச்சி கண்டு அவரை, ‘சடையம்மாள்’ என்றும், ‘சடையத்தாயாரம்மாள்’ என்றும் அன்போடு அழைக்கலாயினர்.

இன்னொரு விஷயம், அவர் கிணற்றில் குளித்து முடித்து தனது சடாமுடியை துவட்டாமல் சிலுப்பும்போது, ‘அவரது தலையிலிருந்து சிதறும் ஒரு சொட்டு தண்ணீர் தம் மேல் படாதா?’ என ஏங்கிக் காத்திருக்குமாம் மக்கள் கூட்டம். அப்போது பேச்சு இல்லை; ஒரு புன்னகை மட்டுமே அவரிடமிருந்து வருமாம்.

தமது பிரச்னைகள், துக்கம் தீர்ந்த செல்வந்தர்கள் சிலர், அவருக்குத் தங்களது சில சொத்துக்களைக் கொடுத்துள்ளனர். ஆனால், அம்மையார் அதனைத் தாம் பயன்படுத்தாமல், ஏழை எளியவர்களுக்கு என்னென்ன தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு உயில் எழுதியுள்ளாராம். அந்த உயிலில்தான் மேற்கண்ட தகவல்களை நாம் அனுமானிக்க முடிகிறது. (இந்த உயில் சாந்தி ப்ரியா என்பவர் எழுதியுள்ள ஆன்மிகக் கட்டுரையில் இடம்பெற்ற நகல் ஆகும்.)

இன்றும் நிறைய பெண்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் குருசாமி அம்மையாரின் ஜீவசமாதிக்குச் சென்று, மிளகாயை அரைத்து அதைத் தண்ணீருடன் கலந்து, அந்தத் தண்ணீரை குருசாமி அம்மையாரின் சிலைக்கு அபிஷேகம் செய்கிறார்களாம். பக்தர்கள் செய்யும் இந்த மிளகாய் தண்ணீர் அபிஷேகத்தினால் மனம் குளிரும் அம்மையார், எரிச்சலோடு கண்ணீர் வரவழைக்கும் மிளகாயின் காரத் தன்மை போன்ற பக்தர்களின் துன்பங்களை தாம் ஏற்றுக்கொண்டு, தம்மை வழிபடுபவர்களின் குறைகளைப் போக்கி அவர்களின் வாழ்வில் குளிர்ச்சியையும் மேன்மையையும் தருவதாக அனுபவத்தில் உணர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

நாமும் நம்முடன் இருக்கும் பிறர் மீதான காழ்ப்பு காரத்தை, சமத்துவம் கொடுக்க முடியா எரிச்சலை இறக்கி வைத்தால், புத்தியிலிருந்து கழுவி விட்டால் ஆன்மா குளிராதா என்ன?!

(தரிசனம் தொடரும்)

Comments

அமிர்தம் சூர்யா says :

அன்புடையீர் வணக்கம் இந்த கட்டுரையில் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தான் ஜீவ சமாதியை கண்டுபிடித்த தஞ்சை துறவி நடராஜ சுவாமிகள் (போட்டோவில் குறிப்பிடவில்லை)

ரிஷபன் says :

ஒவ்வொரு சித்தரும் ஆன்மிக விழிப்புணர்விற்கும் அன்பைப் போதிக்கவும் அவ்வப்போது தோன்றி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையே ஒரு பாடம்.

ஜி.ஏ. பிரபா says :

அருமை. இறைவனுடன் நேரடியாகப் பேசும் பாக்கியம் பெற்றவர்கள் சித்தர்கள். இவர்களிப் ஜீவ சமாதியே கோவில்தான்.

G Srikanth says :

இந்த இக்கட்டான நேரத்தில் இதுபோன்ற தொடர்களில் கட்டுண்டாலேனும் மனம் பக்குவம் அடையாதா எனப் பார்க்கிறேன் சூர்யா..... குருவே சாமியாக.....குரு சாமியாக தொடரட்டும் ஆன்மீகப் பயணம்

Viki muruganathan says :

என்ன எழுத்து சூர்யா.. அருமை..அற்புதம் என்பது தவிர வேறில்லை.. ஒவ்வொரு வார்த்தையும் மனதில் தைக்கிறது

ப்ரியா பாஸ்கரன் says :

வெகு சிறப்பு சூர்யா. குருசாமி அம்மாளைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் உமது சித்தர் பணி.

Nandakumar says :

அழகிய சுற்றுலா தலம் போல் சிவபெருமானின் சிரசு.... இப்படி வார்த்தைச் சித்தராய் உன் எழுத்தில் பெண் சித்தர்களின் மகிமை யுகங்கள் கடந்தும் வாழும். வாழ்த்துகள் நண்பா துரை. நந்தகுமார்

Prabhamurugesh says :

மனதெல்லாம் அயர்ச்சி. சடையம்மாள் பதிவை படித்த பின்பு அடைந்த புத்துணர்ச்சி இறையுணர்வின்றி வேறென்னவாக இருக்க முடியும். பெண் சித்த புருஷர்கள் பற்றிய அறிதல் மிகவும் புதிதே. மிக்க நன்றிகள் சூர்யா

Ramani Rama says :

அடியார்க்கும் அடியேன்னு பெரியபுராணத்துல சொன்னது உண்மைதான் போல. அம்மாவின் புகைப்படம் பார்த்ததும் என்னையறியாமல் கண்ணில் நீர் வந்த காரணம் தெரியல. படிச்சுட்டு ஒரு மாதிரி நெகிழ்வான மனநிலைல இருக்கேன்.. நன்றி சூர்யா

இன்பா சுப்ரமணியன் says :

மனசு மிக அமைதியாய் இருக்கு ம்மா... இது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணி... இதனை இறைவன் உங்களுக்கு கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. விரைவில் இதனை புத்தகமாய்க் கொண்டு வரனும்.. மிகுந்த அமைதியில் இருக்கிறேன்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :