• JUST IN | சுட சுட

வங்கக் கடலில் உருவாகிறது அதி தீவிர யாஷ் புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!





அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ் தே புயல் நேற்று முன்தினம் இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. இதையடுத்து கேரளா, புதுச்சேரி, தமிழக தென் மாவட்டங்கள், மும்பை, கோவா, குஜராத் ஆகியவற்றில் பலத்த சூறாவளி மழையும், குஜராத்தில் பெருத்த சேதமும் ஏற்பட்டது.

இந்நிலையில் வங்கக் கடலில் ஒரு புயல் உருவாகியுள்ளதாக மேற்குவங்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநில வானிலை ஆய்வு மைய அலுவலர் கூறியதாவது:

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற்று "யாஷ் புயலாக" மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த புயலானது காற்றழுத்த தாழ்வு மையப்பகுதியில் தீவிரமடைந்து மே 23 முதல் மே 25ஆம் தேதிகளில் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த புயல் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் உள்ள பகுதிகளை தாக்கக்கூடும்.

- இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த யாஷ் புயல் கொல்கத்தா சுந்தரவனக் காடுகள் வழியாக நிலத்திற்குள் நுழைந்து வங்கதேசத்தை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 23ஆம் தேதி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் புயல் காரணமாக ஐந்து டிகிரி அளவு கூடுதல் வெப்பம் இருக்குமெனவும் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தை ஆம்பன் புயல் 260 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கி பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :