• GLITTERS | பளபள

அவத்தொழிலாளர்


கி.ராஜநாராயணன்

’கரிசல்காட்டு இலக்கியப் பிதாமகர்’ என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நேற்று (17.05.2021) மறைந்ததை அடுத்து, நமது கல்கி இதழில் 1965ஆம் ஆண்டு அவர் எழுதிய ’அவத்தொழிலாளர்’ எனும் இந்தக் கதையை அவருக்கு நினைவஞ்சலியாக சமர்ப்பணம் செய்கிறோம்.

``ஐயா எடசெவலுக்குக் காரு எப்போ?"

திக்கட்டு எங்கே போடுராக ஐயா?"

அய்யா... அய்யா..."

காக்கி யூனிபாரம் அணிந்து கண்ணுக்குத் தட்டுப்பட்ட ஒவ்வொரு கண்டக்டர் டிரைவரிடமும்கூட அந்தப் பட்டிக்காட்டுக் கிழவி கேட்டுக்கொண்டே இருந்தாள். பிச்சைக்காரி கேட்பதைப் போலத் தொய்நது.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வார் யாருமில்லை அங்கே.

பஸ் ஸ்டாண்டு ஏஜெண்ட் ஒருவன் கொசுவலை முண்டாபனியன் அணிந்து அதன் மேல் மெல்லிய ஜிப்பாவை அந்தப் பனியன் தெரியும்படி போட்டுக்கொண்டு, இடுப்பில் அகலமான பச்சை நிற துணி பெல்ட், அதில் மணிப்பர்ஸ் எல்லாம் வைத்திருந்ததும் ஜிப்பா வழியாகத் தெரிந்தது. தலை ஜோராக சுருள் சுருளாக மோதிரங்களை வரிசைப்படுத்தி அடுக்கி ஒட்ட வைத்தது போலிருந்த ஒன்றினுள் ஒரு பென்சிலைச் சொருகிக் கொண்டு ராஜகம்பீரமாக ஸ்டேஜினுள் நுழையும் ராஜபார்ட் செட்டான் கேடாக லாந்திக்கொண்டு வந்தான்.

கிழவிக்கு எப்படியோ அவனைப் பற்றித் தெரிந்திருந்தது போலும். ’’ஐயா எடசெவலுக்குத் திக்கட்டு எப்பக் குடுப்பாக?" என்று பொக்கை வாயால் மரியாதைச் சிரிப்போடு கேட்டாள்.

பல் இல்லாத அவளுடைய வாய், சில்லறை எடுக்கத் திறக்கும் ஜிப்பில்லாத மணிபர்சை அவனுக்கு ஞாபகப்படுத்தியது. அவன் ‘யானை மேல் போகும் சுண்ணாம்புக்காரன்.’ இவளுக்கெல்லாம் பதில் சொன்னால் அவனுடைய ‘கவுரதை’ என்னாவது? கிழவையைத் தன் பார்வையிலிருந்து உதறிவிட்டு வேறு ஏதாவது கண்ணுக்கு ‘குளிர்ச்சி’யாகக் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அது கிடைக்காது போகவே கிழவி பேரில் அவனுக்கு எரிச்சலாக வந்தது.

கிழவி அவன் பின்னாலேயே நடந்துகொண்டு அதேபோல கேள்வியையே கேட்டாள். அதற்கு அவன் ’’எடச்சவளா...?" என்று நையாண்டியாகக் கேட்டுவிட்டு அங்கே போயி உக்காளுங்க; பொறவு கூப்டுவாக" என்று சொன்னான்.

டிரைவர்களும் கண்டக்டர்களும் ஒரு ஆனந்தமான விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த பஸ் ஸ்டாண்டில் மூட்டைத் தூக்கிப் பிழைக்கும் கூலிகளில் ஒருவனுக்குப் பதினெட்டு வயசிருக்கும். நல்ல தடியான திரேகம். மொட்டைத் தலை. அரை ஊமை. அதோடு வாய் படு சொன்னல். மேல் துண்டு இல்லாமல் இடுப்பில் மட்டும் எப்போதும் இறுக்கிய தார்ப் பாய்ச்சு. மொழு மொழு என்று கொழுந்த கரு மொழுகாய் இருக்கும் அவன் திரேதத்தைப் பார்க்கிறவர்களுக்கு ஓங்கி அதில் ஒரு இறுக்கு வைக்கக் கை துறுதுறுக்கும் போலும்.

எதிர்பாரா சமயத்தில் ஒரு கண்டக்டரோ டிரைவரோ அவன் முதுகில் ஒரு குடுப்புக் கொடுப்பான். வீல் என்று அவன் அடித்தவன் மேல் பாயும்போது மற்றவன் அதைவிட வேகமாக ஊமையனின் முதுகில் ஒன்று கொடுத்து அவனைத் திசை திருப்புவான். அடிகளும் வேதனையும் தாங்க முடியாமல் போகும்போது அந்த அனாதை ஓடிச்சென்று ஒரு பெரிய கல்லை இரண்டு கைகளாலும் தூக்கிக்கொண்டு வருவான். ஆனால் அவனிடமுள்ள நல்ல குணம் யார் மீதும் அதைப் போட மாட்டான்.

இப்பொழுதுதான் போடப்போவதுபோல் இருக்கும்; அவ்வளவுதான். கொஞ்ச நேரத்திலெல்லாம் அடிகள் திமுதிமு வென்று விழும்; ஆனால் யார் அடித்தார்கள் என்றே அவனுக்குத் தெரியாது; சுற்றி நின்றுகொண்டு அப்படி ஒரு அடிமுறை!

கேவிக் கேவி அழுதுகொண்டே அவன் தன்னை அடித்தவர்களை ஆத்தா அக்கா பெண்டாட்டி, பிள்ளை என்று அவன் மொழியில் தாறுமாறாக ஏசுவான். அதைக் கேட்டு அந்தத் தொழிலாளர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள்.

யார் யாரிடமோ தாங்கள் பட்ட துன்பங்களையும் யார் யார் மீதோ தாங்கள் காட்ட வேண்டிய ஆங்காரத்தையும் எவ்வித முகாந்தரமும் இல்லாமல் இந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் அனாதையிடம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இது தினம் தவறாமல் நேரம் தவறாமல் நடக்கும் கண்கொண்டு பார்க்க முடியாத ‘கங்காச்சி.’

திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுவதாக யாரோ சொன்னார்கள். கிழவியம்மாள் விரைந்தாள்.

பலாச்சுளையை ஈக்கள் மொய்த்ததுபோல கண்டக்டரைச் சூழ ஒரு கூட்டம்.

முதலில் திருநெல்வேலி இருக்கா; என்பதுதான் முதல் கேள்வி. பூராவும் திருநெல்வேலியாகவே இருக்க வேண்டும். அதில் ஒரு சொகம் இருக்கிறது. இடைவழியில் பஸ்ஸை நிறுத்த வேண்டாம். மத்தியில் இறங்குகிறதுகளை எண்ணித் தொலைத்து மீதிகளைக் கணக்குப் பார்க்க வேண்டாம்; டிக்கெட் புத்தகத்தை எடுத்துக் கிறுக்க வேண்டாம்; அதில் ஒவ்வொண்ணு சரியாகச் சில்லறை கொண்டு வராமல் நோட்டுகளை வேறு நீட்டும்; எம்புட்டுச் சிரமம்.

இந்தத் திருநெல்வேலி போகிற சனியன்கள் சரியாக ஒத்தை ரூபாய் நாப்பத்தி ரெண்டு பைசாவைக் கொண்டு வந்து தொலைக்கிறதேயில்லை. இப்போதான் பெரிய இதுகள் மாதிரி அஞ்சு ரூபா பத்து ரூபா நோட்டுகளைக் கொண்டு வந்து நீட்டுகிறது.

யாரோ ஒரு வெளியூர் ஆசாமி; இந்த ஊர்த் தடத்துக்கே புதுசு போலிருக்கு. திருநெல்வேலிக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் நேரே டிக்கெட் கொடுப்பதற்கென்றே கட்டிப் போட்டிருக்கும் கவுண்ட்டர் ரூமைப் பார்த்துப் போனார். சரியான பைத்தார மனுசன் போலிருக்கு. அவர்கள் ஊரில் கண்டு அப்படிக் கொடுக்கிறார்களோ என்னமோ. இது எங்க ஊரு. இந்த ஸ்டாண்ட் இவர்களுடைய ராஜ்யம். கொடி ஒண்ணுதான் பறக்கலை.

கண்ணாடி போட்ட அந்த வெளியூர் ஆசாமி புத்தம் புதிய பத்து ரூபாய் சலவை நோட்டைக் கண்டக்டரிடம் நீட்டி, ஒரு திருநெல்வேலி" என்று சுத்தமான தமிழில் சொன்னார்.

’’சில்லறை மாத்திட்டு வரணும்" என்று பட்டென்று பதில் சொன்னார் கண்டக்டர். இந்த மாதிரி ரூபாய் நோட்டைப் பார்தததே இல்லையென்று நினைத்துவிட்டார் போலிருக்கு என்றிருந்தது கண்டக்டரின் மேல்கொண்ட பார்வை. கண்டக்டரின் எதிரே ‘மலைபோல் சில்லறை குவிந்திருந்தது. குவிந்திருந்தால் என்ன; சில்லறை கொடுக்க வேண்டுமென்று எந்தச் சட்டத்தில் சொல்லி இருக்கிறது?

’’ஐயா, பொம்பளையாளு: ஒரு எடசெவல் குடுங்க ஐயா..." கிழவி தடுமாறி, கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டே வந்து கெஞ்சினாள். ஒரு சிவன் பார்வை பார்த்தார் கண்டக்டர் அவளை. கடவுள் அவருக்கு நெற்றிக்கண் கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்டு விட்டார்; குணம் தெரிந்துதானே குதிரைக்கும் அவர் கொம்பு தரவில்லையாம்.

கிழவியைப் பார்த்த அந்தப் பார்வையில் நகைச்சுவை ஏதும் இல்லை; ஆனாலும், தங்களுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று நம்பி சுற்றிலும் காத்துக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள்.

நல்ல தெறிச்ச திருநெல்வேலி டிக்கெட்டுகளாக மட்டும் ஏற்றிக்கொண்டு அந்த மூக்கு வைத்த பஸ் இடைவழிப் பயணிகளை ‘அத்தாந்தரத்தில்’ விட்டுவிட்டுப் புறப்பட ஆரம்பித்தது. அதே டயத்தில் சங்கரன்கோவில் பஸ்ஸும் புறப்பட்டது. தாலாட்டின்புத்தூர் வரை இரண்டு பஸ்களுக்கும் வேகத்தில் போட்டாப்போட்டி உண்டு; டிரைவர்கள் என்றால் சும்மாவா? அவர்களுடைய பெயருக்கு முன்னால் பட்டங்கள் உண்டு. இந்த பஸ்ஸை ஓட்டுகிறவர் பெயர் சூறாவளி சுப்பையா. அந்த பஸ்ஸை ஓட்டுகிறவர் பெயர் பெரும்புயல் பெரியசாமி.

திருநெல்வேலி பஸ் தன்னை அனதரவாக விட்டுவிட்டுப் புறப்பட்டுப் போவதைப் பார்த்த அந்தக் கிழவிக்குத் தன் பேரன் அப்பையா தன்னை விட்டுவிட்டு உயிர் பிரிவதைப் போல் தெரிந்தது. அவன் உடம்பு மோசமாகி விட்டது என்று தகவல் தெரிந்துதான் புறப்பட்டாள் அவள். ’’கடவுளே, இந்த வயசுக் காலத்தில் என்னைக் கொண்டுட்டுப் போகப்படாதா...?" என்று வாய்விட்டுத் தன்னையே சபித்தாள்.

கண்டக்டர்களின் ’ரொயிற்’ என்ற ரைட் ஒலி கொடுக்கப் பட்டதும் மூக்கு வைத்த அந்த இரண்டு பஸ்களுமே வேகமாகப் புறப்பட்டன போட்டி போட்டுக்கொண்டு.

கொஞ்ச தூரம்தான் வந்திருக்கும். அதுக்குள் ரயில்வேக் காரன் கேட்டை இழுத்துச் சார்த்தி விட்டான்.

அதனாலென்ன: இன்வாய்ஸ் எழுதறது.

’சேங்கரங்கோயில்’’ பஸ் கண்டக்டரின் குரல் வெங்கலத்தினால் செய்தது. முன்பு அவன் காபி ஹோட்டல் சர்வராக வேலை பார்க்கும்போது ஒரு தோசை ஸ்பெஷே...ல்..." என்று குரல் கொடுத்தால் ஏழு ஹோட்டல் சரக்கு மாஸ்டர் களுக்கும் கேட்கும். இப்பவுங்கூட பஸ் ஓடிக்கொண்டிருக்கும் போதே அதே ஸ்பெஷல் தோசை பாணியில் ’’பின்னாலே ஒரு பிளஷா...ர்" என்று டிரைவருக்குக் குரல் கொடுப்பான்.

இப்போது அந்தக் கண்டக்டர் தன் இருப்பிடத்தில் அமர்ந்துகொண்டே டிரைவருக்கு இன்வாய்ஸ் சொன்னான் இப்படி.

ஒம்பது கழுகு
ஏழு வானரம்
மூணு காக்கா
ரெண்டு கல்லு
அஞ்சி குருவி
நாலு ஆடு

அறியாதவர்கள் பஸ்ஸினுள் இருப்பது மனுஷாள் இல்லையோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் அது அவ்வளவும் கழுகுமலை, வானரமுட்டி, காக்காத்தோப்பு, கல்லூரணி, குருவிகுளம், நாலு ஆட்டின்புத்தூர் இப்படி ஊரின் பெயர்கள்.

பஸ் இடைசெவலை அடுத்து வந்து கொண்டிருந்தது. சீந்தரிப்பான குளிர்வாடை பஸ்ஸினுள் சீறித் தாக்கியது. ஒரு பச்சைக் குழந்தையை சளிக் காய்ச்சலோடு மடியில் படுக்க வைத்துக் கொண்டிருந்த ஒரு அம்மாள் குழந்தைமேல் குளிர்க் காற்றுத் தாக்காமல் இருக்க பஸ்ஸின் ஜன்னல் திரையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

யாரு திரையெ அவிழ்க்கிறது?" என்று புலிக்குரலில் கண்டக்டர் ஒரு அதட்டுப் போட்டான்.

இடைசெவலின் ரோட்டோரத்திலுள்ள மயானத்தில் கூட்டமாக இருந்தது. எருவை அடுக்கி அதன்மேல் ஒரு பையனின் உடலைப் படக்க வைத்திருந்தது. தலையிலிருந்து கால்வரை பயணப் பீஸால் மூடப்பட்டிருந்தது. முகத்தில் வாய்க்கு நேராக மட்டும் ஒரு ஓட்டை போடப்பட்டிருந்தது.

கூட்டத்திலிருந்த எல்லோருடைய கண்களும் பஸ்ஸையே பார்த்துக் கொண்டிருந்தன. பஸ் நிற்கவில்லை.

கிழவியால் தன் பேரனுக்கு வாய்க்கரசி போட முடியாமல் போய்விட்டது.

இவைகள் எல்லாம் நடந்து முடிந்து சரியாக ஐம்பது ஆண்டுகள் கழிந்து...

இப்பொழுது அந்த பஸ் நிலையம் அங்கு இல்லை. ஏதோ ஒரு பூங்காவனத்துள் நுழைவது போலிருக்கிறது. பஸ்களெல் லாம் ராட்சச பிளஷர் கார்கள் போல இருக்கிறது. சப்தம் செய்யாமல் தரையை ஒட்டி வேகமாகப் பருந்தைப் போல் பறந்து செல்கின்றன.

இதோ இருக்கும் இவர்களெல்லாம் தேவர்களா? கண்டக்டர்கள்தானா? வயசான ஒரு கிழவியைக் கைலாகு கொடுத்து காரில் ஏற்றி விடுகிறானே!

இப்பொதெல்லாம் கிழவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் முதல் மரியாதை. உட்கார்ந்து கொள்ளும் ஆசனங்கள் கூட பிளஷர் காரில் உள்ளவை போல சுகசௌகரியமுள்ளவை..

இடைவழி ஊர்களுக்கென்று தனி பஸ்களும், நேராகப் போவதற்கென்று தனி பஸ்களும் இருப்பதால் முன்னைப்போல் இடைஞ்சல் இல்லை.

பஸ் போய்க்கொண்டிருக்கிறது. காய்ச்சலோடு அம்மாவின் மடியில் ஒரு குழந்தை படுத்திருக்கும் இடத்திற்கு கண்டக்டர் வருகிறார்.

’’அம்மா காத்து குளிர் அடிக்கிறதே; ஜன்னலை மூடிவிடுங்களேன்" என்று அன்போடு சொல்லி அவனே அந்தக் கண்ணாடி ஜன்னலை மேலே ஏற்றி அடைக்கிறான்.

நாம் வசிக்கிறது இப்பொழுது பூலோகமில்லை; தேவலோகம்.

Comments

Ragothaman says :

நெகிழ்வான அஞ்சலி

T.Bharathi says :

1965 கால கட்ட மனிதர்களையும் பஸ் ஸ்டாண்டையும் கண்முன் நிறுத்தியது

Vadivel says :

இப்போதும் அப்படித்தான்.மதுரை மற்றும் திண்டுக்கல் நகரிலிருந்து புறப்படும் பேருந்துகளில் முதலில் திண்டுக்கல் மற்றும் மதுரை டிக்கெட் மட்டும் ஏறச்சொல்வார்கள்.இடைவழியில் உள்ள ஊர்க்காரர்கள் பேருந்து புறப்படும்போது ஏறிக்கொள்ள சொல்வார்கள்.இடம் கிடைத்தால் உட்காரலாம்.இல்லாவிடில் இறங்கும் வரை நின்றுகொண்டேதான் வரவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :