• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

47. என்ன சேதி?


- அமரர் கல்கி

47. என்ன சேதி?

அமரர் கல்கி

சாஸ்திரியார் கவலை

மகாகனம் ஸ்ரீநிவச சாஸ்திரியார் இந்தத் தள்ளாத வயதில் தடியை ஊன்றிக்கொண்டு எங்காவது கிளம்புகிறாரென்றால், அது லக்ஷ்மீபுரம் வாலிபர் சங்கமாகத்தான் இருக்கும். அப்படி அந்த சங்கத்தில் போய் ஓயாமல் என்ன பேசுவார் என்றும் சொல்லத் தேவையில்லை. உலக சமாதான மகா நாட்டைப் பற்றியும், அந்த மகாநாட்டிற்குக் காந்திஜியும் ஜவாஹரும் பிரŒன்னமாவதைத் தாம் கண் மூடுவதற்குள்ளாகப் பார்த்துவிட வேண்டுமென்ற பேரவாவைக் குறித்துத்தான் இருக்கும்.

சென்ன்ற வாரத்திலும் மேற்படி சங்கத்தில் மேற்படி சாஸ்திரியார் மேற்படி விஷயத்தைக் கூறியிருக்கிறார். அத்துடன் இந்த உலகம் உருப்படுவதற்கான இரண்டொரு யோசனைகளையும் சொல்லியிருக்கிறார்:-

ஜெர்மனியைத் துண்டு போட்டு இதர நாடுகளுக்குத் தானம் செய்யும் மகாபாபத்தை அவர் ஒப்புக்கொள்ள மாட்டாராம். அப்படிச் செய்வதால் அந்த தேசத்தின் விஞ்ஞான ரகசியங்களும் கலை முன்னேற்றமும் தடுக்கப்படுமாம்.

ஜப்பானை அடியோடு நசுக்கும் யோசனையும் கூடாதாம். ஜப்பானும் சீனாவும் சிநேகமாகி அவையிரண்டும் ஆசியாவைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் நடக்க வேண்டுமானால் யுத்தத்துக்குப் பின் கூடப் போகும் உலக சமாதான மகாநாட்டில் காந்திஜியும் ஜவாஹர்ஜியும் கலந்து கொள்ள வேண்டும். அதைத்தான் தமது ஆயுட் காலத்தில் பார்த்துவிட வேண்டுமென்று சாஸ்திரியார் ஆசைப்படுகிறார். சாஸ்திரியாரின் ஆசை நியாயமான ஆசைதான். நமக்கும் அந்த ஆசை பரிபூரணமாக இருக்கிறது. ஆனால், இந்தியர்களுடைய சராசரி வயதை எண்ணி, பிரிட்டிஷ்காரர்களின் பிடிவாத குணத்தையும், அமெரிக்கர்களின் அடுத்த வருஷ யுத்த பட்ஜெட்டையும், நாஜிகளின் வி2 குண்டு வி10 வரையில் வரலாம் என்பதையும் யோசிக்கும்போதுதான் மேற்படி ஆசை நம்முடைய ஆயுள் காலத்திற்குள் நிறைவேறுமா என்று சந்தேகமாயிருக்கிறது.

காசிக்குப் போனார்

“தமிழுக்காகவே உயிர் வாழ்கிறார்” என்று சொல்லக் கூடியவர்கள் நமக்குத் தெரிந்தவர்களுக்குள் மிகச் சிலரே இருப்பார்கள். அன்பர் ஸ்ரீ மு. அருணாசலம் எம்.ஏ, அவ்விதம் தமிழுக்காகவே உயிர் வாழ்கிறவர்களில் ஒருவர். இவர் புலவருக்குப் புலவர்; ரஸிகருக்கு ரஸிகர்; எழுத்தாளருக்கு எழுத்தாளர்; பதிப்பாளருக்குப் பதிப்பாளர்.

கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் ‘பாடிய வாய் தேனூறும்’ பாடல்களை நல்ல பதிப்பாகக் கொண்டு வந்தவர் இவர்தான். ஸ்ரீ டி.கே. சிதம்பரநாத முதியார் அவர்களைத் தூண்டி உண்மையான கம்பன் பாடல்கள் அடங்கிய கம்ப ராமாயணப் பதிப்பைக் கொண்டு வந்தவரும் இவர்தான். டி.கே.சி.க்கு எப்படி அருமைச் சீடரா, அவ்விதமே ஸ்ரீ திரு.வி. கலியாண”ந்தர முதலியாருக்கும் மனதுக்குகந்த மாணவர் - ஆங்கிலம் - தமிழுடன் வடமொழியும் பயின்று புலமை அடைந்தவர்.

இத்தகையவர் சமீபத்தில் காசிக்குப் போயிருக்கிறார். கங்கையில் ஸ்நானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதற்காகவல்ல. காசி சர்வ கலாசாலையில் திருப்பனந்தாள் மடத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள சைவ சித்தாந்த ஆராய்ச்சி பீடத்தில் அமர்வதற்குத்தான். சைவ சித்தாந்தம் என்ற பெயரில் ஸ்ரீ அருணாசலம் காசியிலும் தமிழ்த் தொண்டு சேவாரென்றே நம்புகிறோம். தமிழ்த்தாய் செய்யப்போகும் திக் விஜயத்துக்கு ஸ்ரீ மு. அருணாசலம் முன்னணித் தூதராகச் சென்றிருக்கிறார் என்று கூறுதலும் மிகையாகாது.

(ஜனவரி 14, 1945)

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

ஸ்ரீநிவச; பிரŒன்ன; சென்ன்ற; முதியார்; அருமைச் சீடரா; கலியாண”ந்தர சேவாரென்றே; 7 திருத்தங்கள் . அன்பினாலும் உரிமையாலும் தெரியப்படுத்துகிறேன். நன்றி.

K P Haran says :

How good his thoughts were and how fluent is his style of writing. I love his writing

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :