• தீபம் - ஆன்மீகம்

சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 5 - ஆண்டவனின் பிரதிநிதி அம்மணி அம்மாள்!


அமிர்தம் சூர்யா

வீரனுக்குப் புல்லும் ஆயுதம் என்று மூத்தோர் சொல்லவில்லை. ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்றே சொல்லியுள்ளனர். (மருத்துவருக்கும் நிபுணருக்குமான வித்தியாசம்) யுத்தக் களத்தில் நீ வீரனாக இல்லை... வல்லமை உள்ளவனாக இருந்தால், நிராயுதபாணியாக இருந்தாலும் உனக்கு புல் கூட ஆயுதமாகி விடும். எந்த வல்லமை? சிவ வல்லமை. சிவ வல்லமை பெற்றவர்களுக்கு ஒரு பிடி சாம்பலும் திருநீறும் மகா வஸ்துதானே!

‘அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்...’ என்று அப்பரும், ‘மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு’ என்று திருஞானசம்பந்தரும், ‘திருவெண்ணீறிடா மூடர்’ என்று அருணகிரிநாதரும் திருநீறு பற்றி கொஞ்சம் நவீன கவிதை போல் சுத்தி சுத்தி சொல்வதைப் பார்த்து நம்ம ஔவையார், ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்று எளிமையாக முடிக்கிறார்.

இவர்களெல்லாம் கொண்டாடும், ‘விபூதி’ என்று செல்ல பெயர் கொண்ட திருநீற்றை வைத்து அப்படி என்னதான் சாதித்துவிட முடியும்? நெற்றியில் பூசிக்கலாம்... நான் சிவனடியாரென்று காட்டிக்கலாம்... சரி, திருநீறு வேறு என்னதான் செய்யும்? நோய் தீர்க்கும் மருந்தாகலாம். பசிக்கு உணவாகலாம். வறுமைக்குப் பொன்னும் பொருளும் ஆகலாம். ஜன்ம இருள் போக்கும் வெளிச்சமாகலாம். கோபுரத்துக் கலசமாக ஏற்றி வைக்கலாம். ஒரு பெரும் கோபுரத்தையே திருநீற்றால் கட்டி முடிக்கலாம்.இதையெல்லாம் செய்து காட்டிய ஒரு பெண் சித்தர் தான் அம்மணி அம்மாள்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரம் என்ற கிராமத்தில் வசித்த கோபால் பிள்ளை - ஆயி தம்பதிக்கு 1735ஆம் ஆண்டு மார்கழி மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

பால்யத்திலிருந்தே சிவன் மீது பற்றும் பக்தியும் கொண்டு இருந்தார். எப்போதும் அவரது வாய், ‘ஓம் நமசிவாய’ என்ற சொல்லையே சொல்லிச் சொல்லி, ‘அந்த சொல்லே அவரது நாவாக மாறிவிட்டதோ’ என்று தோணும்படி, சதாசர்வ காலமும் அவரது வாய் அதை உச்சரிக்க ஆரம்பித்து விட்டது. அம்மணி அம்மாள் என்ற சக்தி சித்தரை பற்றிய இருவிதமான கதையாடல்கள் உண்டு.

ஒன்று - பெற்றோருடன் திருவண்ணாமலை வந்தவர், இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனைக் கண்டு, ‘இனி இவரை விட்டு எங்கும் வரமாட்டேன்’ என்று அடம் பிடித்து திருவண்ணாமலையிலேயே தங்கி விட்டதாகவும், பருவம் வந்த பின்பும் துறவியாகவே வாழ்ந்து இங்கேயே ஜீவசமாதியானதாகவும் சொல்கிறார்கள்.

இரண்டு - திருமணத்தில் நாட்டமில்லாது சிவனையே துதித்துக்கொண்டு இருந்த அருள்மொழிக்கு சொந்த

தாய்மாமனைக் கட்டி வைத்தால்தான் சிவ பைத்தியம் ஒழியும் என்று கட்டாய கல்யாணத்துக்கு ஏற்பாடு

செய்யும்போது அருள்மொழி, “நான் குடும்ப வாழ்வுக்காக இந்தப் பிறவியை எடுக்கவில்லை” என்று சொல்லிக் கொண்டே வேதனை தாங்காமல் வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துக் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கி, வலை போட்டு மீன் தேடுவது போல அருள்மொழியை தேட, குளத்தின் எந்த மூலையிலும் அருள்மொழியை காணோம். பெத்தவங்க துக்கம் தாளாது, குளக்கரையிலேயே உட்கார்ந்து அழ, சரியாக மூன்றாவது நாள் குளத்தில் சலசலப்பு கேட்க, அருள்மொழி குளத்திலிருந்து வெளியே வந்தார் உயிருடன். இந்த அதிசய சம்பவத்தால்தான் அருள்மொழியை ஒரு தெய்வப்பிறவி என மக்கள் வழிபடலாயினர். பெண்களை உயர்வாகக் குறிப்பிடும், ‘அம்மணி அம்மாள்’ என்ற சொல்லையே அந்தப் பெண் பித்தருக்குப் பெயராகச் சூட்டி மக்கள் அழைக்கலாயினர்.

அப்படியான அம்மணி அம்மாளை தேடி, துக்கப்பட்ட, துயரப்பட்ட, வேதனைப்பட்ட, வலிப்பட்ட மக்கள் வரலாயினர். அவர்களுக்கு அவர் கொடுத்தது திருநீறு மட்டும்தான். திருநீறுதான் முதலும் முடிவுமான ஒரே நிவாரண வஸ்து.

ஒவ்வொருவருக்கும் பிறப்பின் கடமை என்று ஒன்று இருக்கும். பலர் அதை உணர்வது இல்லை. அல்லது உணராமலேயே அதை ஆற்றிவிட்டு விடைபெறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்து முடிக்கவே இறைவன் சில சித்தர்களை அனுப்புகிறான். அப்படியாக வந்தவர்தான் அம்மணி அம்மாள்.

ஒருமுறை அம்மணி அம்மாள் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘பாதியில் நிற்கும் திருவண்ணாமலை கோயிலின் வடக்கு கோபுரத்தை கட்டி முடியேன்’ என்றாராம். சட்டென விழித்த அம்மணி, அதற்கான பணியை உடனே தொடங்கி விட்டார்.

பூமிக்குள் இருக்கும் புதையலை வெறும் பார்வையால் கண்டுபிடித்துச் சொல்லும் ஆற்றலையும், ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் உலாவரும் லகிமா சக்தியையும் அவர் பெற்றிருந்தாராம்.

அவரின் சக்தியை அறிந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படிச் சேர்ந்த பணத்தைக் கொண்டு கோயில் கோபுரம் கட்டும் வேலையை அவர் தொடங்கி விட்டார். ஒரு செல்வந்தரிடம் போய் கேட்டபோது, அவர் தன்னிடம் இப்போது பணம் இல்லை என்று சொல்லி ஏமாற்ற, உடனே அம்மணி அம்மாள் அவர் பெட்டியில் என்னென்ன இருக்கிறது, எவ்வளவு தொகை இருக்கிறது, எவ்வளவு பொருள் இருக்கிறது என்பதை வாசலிலிருந்தபடி கணக்குப் போட்டுச் சொல்லச் சொல்ல, அவர் மிரண்டுபோய் அம்மாவை வணங்கி, மன்னிப்பு கேட்டு, கோபுரம் கட்ட பணம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. வேலை தொடங்குகிறது.

கோபுரம் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது. மறுநாளே மைசூருக்கு பயணமாகிறார். மன்னரைப் பார்த்து பொருள் உதவி கேட்க அரண்மனை

வந்தபோது, வாயிற்காப்பாளர் அவரின் கோலத்தைப் பார்த்து உள்ளே விட மறுக்க, வாசல் ஓரம் உட்கார்ந்து விட்டார்.

அதேநேரம் தனது சக்தியைப் பயன்படுத்தி அரண்மனைக்குள் மன்னர் முன் நிற்க, அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்து, “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அம்மணி அம்மாள் தான் உதவி கேட்டு வந்ததையும், காவலன் மறுத்ததையும், தான் வாசலில் உட்கார்ந்திருப்பதாகவும் சொல்ல, மன்னர் ஓடி வந்து வாசலில் பார்த்தால், அம்மணி அம்மாள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டார். இரண்டு இடத்திலும் அம்மணி அம்மாள் தன் உருவத்தோடு வர

முடிந்ததைக் கண்ட மன்னர், அவரை வணங்கி பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

மீண்டும் கோபுரப் பணி தொடங்க, அப்பணி முடியும் கடைசி நாளில் சிற்பிகளுக்கும் பணியாள்களுக்கும் கூலி கொடுக்க பணம் இல்லாதபோது, தன் கையிலிருந்த திருநீற்றை எல்லோருக்கும் கூலியாய் கொடுக்கிறார். அவர்கள் வீடு போய் பார்த்ததும், அது அவரவர் உழைப்புக்குரிய பணமாக மாறியிருந்ததாம். இதெல்லாம் சாத்தியம்தான்.

‘விபூதியை, ஜபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம்... போன்ற பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்த முடியும்’ என நமது தமிழ் அகத்திய மாமுனி, ‘அகத்தியர் பரிபூரணம்’ என்ற நூலில் விளக்கியிருப்பதை நாம் கவனத்தில் நிறுத்த வேண்டும். (அதன் நூல் வடிவம் இணையத்தில் உள்ளது.)

அப்படியாக, பெண்களுக்கு ஆன்மிக சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில் ஒரு பெண் தன்னந்தனியாக 11 நிலைகளையும் 13 கலசங்களையும் கொண்ட 171 அடி உயர கோபுரத்தையே கட்டி முடித்தது சாதாரண காரியமா என்ன?! அவர் வந்த காரியம் முடிந்தது.

ஆம்... ஒரு பெண்ணால் எல்லா சித்து வேலைகளையும் சிவனின் பொருட்டு செய்ய முடியும். ஆண்களால் முடியாத அரிய காரியத்தையும் அவளால் முடிக்க முடியும். அவள் நினைத்தால் புல்லை கொண்டும் பூகம்பத்தைக் கிளற முடியும். அதற்கு யோகம் வேண்டும். தரிசனம் சாத்தியமாக வேண்டும். கவிஞர் தஞ்சை தவசி சொல்வார், ‘ஒரு பொருள், ஒரு இலக்கு தான் யோகம். தத்துவம் என்பது பார்ப்பது. அது மெத்தப் படித்தவனுக்கு சாத்தியம். தரிசனம் என்பது பார்ப்பது அல்ல... பங்கு கொள்வது’ என்பார்.

ஆக, அதீத பக்தி மூலம் சிவனோடு பங்குகொண்ட, தரிசனம் கண்ட சக்தி சித்தர்தான் அம்மணி அம்மாள். அம்மணி அம்மாள் 1875ஆம் வருடம் தனது ஐம்பதாவது வயதில் தைப்பூச தினத்தன்று ஈசனோடு கலந்தார். இந்தப் பெண் சித்தரின் ஜீவசமாதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த மடத்தில் தீபத் திருவிழா வழிபாடு சிறப்பாகும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அம்மணி அம்மாளின் ஜீவசமாதியில் நெய் தீபம் ஏற்றப்படும். இங்கு கொடுக்கப்படும் திருநீறு மகிமை வாய்ந்தது.

மண்ணோடு மண்ணாகப் பிடி சாம்பல் ஆகும் முன் சிவனை உள்வாங்கி திருநீறு அணிந்து அவனோடு பங்குகொள்வது பற்றி இனிமேலாவது யோசிக்கலாம்தானே. நான் பங்குகொள்வது என்பது சிவ தரிசனத்தைச் சொன்னேன்.

(தரிசனம் தொடரும்)

Comments

விஜி முருகநாதன் says :

திருவண்ணாமலை அம்மணி அம்மாள் கோபுரக்கதை மெய்சிலிர்க்க வைத்தது..பாராட்டுக்கள்.

Nandakumar says :

மணக்கிறது நண்பா உன் வார்த்தை திருநீரோடு.... எழுத்துகளால் நீயும் கட்டி எழுப்புகிறாய் இத்தொடரை. வாழ்த்தும் மகிழ்வும்.

G.Selvakumari Ganesan says :

படிக்கும்போதே மெய்சிலிர்க்கும் அனுபவம்......

Santhadevi says :

எங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் மிக இளமையான கோபுரம்... வடக்கு வாசல் அம்மனி அம்மன் கோபுரம் வழியே நுழைகையில் வாழையின் குளுமையும் அனாகத சக்கரத்தின் ஆளுமையும் ஒரு சேர உணர முடியும். முழுமையான பக்தி என்பது எதையும் செய்ய வல்லது என்பதற்கு மிகச் சீரிய உதாரணம். வழக்கமான உங்கள் எழுத்துக்களின் வசீகரிப்புடன் வாசித்ததில் மகிழ்ச்சி சூர்யா

Prabhamurugesh says :

ஏற்கனவே சொன்ன மாதிரி ...பரத தேசம் ஆன்மீக பூமி..அதிலும் திருஅண்ணாமலை சித்த புருஷர்கள் வாழும் மண். சூர்யா பதிவை படித்தவுடன் சொல்லிலடங்கா பரவசம் அடைந்தேன்.மனதானது ஆனந்தமாக அழுகின்றது . நன்றிகள் சூர்யா.

ரிஷபன் says :

அடுத்த முறை கிரி வலம் வரும்போது ஜீவ சமாதியை ஞாபகமாய் தரிசிக்க வேண்டும்.

G Srikanth says :

நீறில்லா நெற்றி பாழ் என ஒளவையார் போல நம்மவர்களுக்கு சுருக்கம் சொல்ல வேண்டும். நாத்திகர்கள் சிலர் , திருநீறு இட்டார் கெட்டார், இடாதார் வாழ்ந்தார் என துண்டுப்பிரசுரம் வினியோகித்ததாக சில மெய்யன்பர்கள் வாரியார் சுவாமியிடம் கூறிய போது , சரியாகத் தானே சொல்கிறார்கள் என்றதும் வந்தவர்கள் திகைத்தனர். வாரியார் விளக்கினார்: திருநீறு இட்டு ஆரு கெட்டார்?, இடாது ஆரு வாழ்ந்தார்?

Anusuya Thiruvengadam says :

இதுவரை திருவண்ணாமலை சென்றதில்லை . இப்பதிவுக்‌கு பின் அம்மணி அம்மாள் கட்டிய கோபுரத்தைக் காண மனம் ஆசை கொள்கிறது. சூர்யா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

K.anuradha says :

விபூதியின் மகிமையை அழகா சொல்லிட்டீங்க.அடுத்த முறை திருவண்ணாமலை செல்லும் போதி அம்மன் பார்க்கனும்

Kalaiselvy Srinivas says :

தரிசனம் என்பது பார்ப்பது அல்ல பங்குகொள்வது... எப்போது பங்குகொள்வேன் என் சிவனே..

மகாலட்சுமி சுப்பிரமணியன் says :

சாகரம் தொடரில் சக்தி சித்தர்அம்மணி அம்மா பற்றி படித்து மெய்சிலிர்த்து போனோம்.

ப்ரியா பாஸ்கரன் says :

ஆஹா.. பெண் சித்தர் கட்டினார் என்ற தகவல் சிறப்பு. திருவண்ணாமலை மிகவும் மனதிற்கு நெருக்கமான கோவில். பல பெளர்ணமிகளில் கிரிவலம் வந்துள்ளேன். இரமண மகரிஷியை அறிந்த அளவிற்கு அம்மணி அம்மாவை அறியவில்லை. பல அரிய தகவலுடன் சிறந்த எழுத்து நடையில் விளக்கமான கட்டுரை சூர்யா. வெகு சிறப்பு. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

sankar subramanian says :

அருமை... உணர வேண்டிய உண்மை

M senthilkumar says :

அம்மனி அம்மாள் பற்றி இப்போது தான் அறிகிறேன் மிக்க மகிழ்ச்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :