• தீபம் - ஆன்மீகம்

சாகரம் - சிலிர்க்க வைக்கும் சக்தி சித்தர்கள் : 4 - ‘நானை’ கத்தரித்த லல்லேஸ்வரி!


அமிர்தம் சூர்யா

மறைபொருளை உணரும் பெரும் காரியத்தில் தொடக்கப் பாடம், தன்னை உணர்தல். தன் ஆன்மாவை அறிய ஒருவனுக்கு ஒரு துன்பமுமில்லை. அதை அறியாமல் அவன் கெடுகின்றான். தன் ஆன்மாவை அறிந்துகொள்ளும் அறிவை அறிந்தபின், அவன் தன்னையே வணங்கத்தான் இருந்தான் என்பதைத் திருமந்திரத்தில் திருமூலர்...

‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னையறியாமல் தானே கெடுகின்றான்
தன்னையறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்தானே’

- என்கிறார்.

அப்படி தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் இறையை அறிந்த ஒரு பெண் சித்தரை இந்து, இசுலாம் என இரு பிரிவு மக்களாலும் கொண்டாடப்பட்ட ஆன்மிக சக்திதான் லல்லேஸ்வரி!

‘முனிவர்களின் தோட்டம்’ என வர்ணிக்கப்படும் பனிபொழியும் காஷ்மீரில் ‘Mystic Woman’ என்று அறிவுஜீவிகளால் புகழப்பட்ட லல்லேஸ்வரி சித்தர் மரபில் வந்த பெண் சித்தர் ஆவார். பேரழகியான லல்லாவின் இயற்பெயர் பத்மாவதி ஆகும். லல்லேஸ்வரி 1320ல் பிறந்தவர் என்கிறார்கள்.

இறந்தகாலமும் எதிர்காலமும் அறிந்து, அன்றைய நிகழ்காலத்தின் அதிசயமாக வாழ்ந்த ஆன்மிக துறவியான இவரை, ‘லல்லா’ என்றும் லால்டேட், லால்தீதி, லல்லீஸ்ரீ, மகேஸ்வரி என்றும் இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்களோ இவரை, ‘லல்லா அரிஃபா’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இரு மதத்தவரும் இவரை, ‘லால்டேட்’ என்று செல்லமாக அழைப்பதும் உண்டு. ‘டேட்’ என்றால், பாட்டி என்று பொருள்.

அறிவுஜீவிகளும் இலக்கியவாதிகளும் இன்றும் இவரை ஆன்மிகத்துக்கு அப்பால் கொண்டாட என்ன காரணம்? அவரின் கவிதைதான்.

‘நான் செய்வதெல்லாம் ஆராதனை
நான் சொல்வதெல்லாம் பிரார்த்தனை
என் தேகம் உணர்வதே சாதனை
என் சிவனை நோக்கி நடக்கிறேன்
பொன்னொளிரும் இந்தப் பாதையில்’

- என்பது அவரது கவிதைகளில் ஒன்று.

காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து நாலரை மைல் தூரத்தில் பந்திரேதன் என்ற சிற்றூரில் பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர் லல்லேஸ்வரி. இவருக்கு 12 வயதில் திருமணமாகிறது. லல்லாவுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. கொடுமையான மாமியார், அன்பற்ற கணவன், மகிழ்ச்சியற்ற வாழ்வு என்பதாகப் போகிறது.

சரியான சாப்பாடு இல்லை. தட்டில் கற்களைப் பரப்பி மேலே ஒப்படை வைத்து நிறைய இருப்பது போல் தருவாராம் மாமியார். ஆனால், எந்த முகபாவமும் காட்டாமல் உணவை மட்டும் உண்டு விட்டு, கற்களை மாமியாரிடம் சிவனே சரணம் என்பதாகச் சொல்லி தட்டுடன் கொடுப்பாராம் லல்லேஸ்வரி. கணவன் அதுக்கு மேலே! லல்லேஸ்வரின் அதிகமான கடவுள் பக்தி, யோகப் பயிற்சி எல்லாம் அவனை வெறுப்படைய வைக்கிறது. ‘ஒரு முறை தண்ணீர் பானையைத் தலையில் சுமந்து வரும் போது தடியால் குடத்தை அடித்து நொறுக்க, பானை தூள் தூளானதாம். ஆனால், தலையில் பானை வடிவில் தண்ணீர் அப்படியே இருந்ததாம். அதை இறக்கி பாத்திரத்தில் ஊற்றினாராம் லல்லேஸ்வரி’ என்பது போன்ற வாய்வழிக் கதைகள் உலவுகிறது. குடும்ப வாழ்க்கை இப்படி இருந்தாலும், அவரின் புத்தி முழுக்க சிவனே இருந்தார். எல்லாவற்றிலும் சிவனையே பார்க்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் 24 வயதில், சித்த ஸ்ரீகண்டா என்னும் சைவ குருவிடம் சிவ தீட்சை பெற்று, திருமண வாழ்க்கையை உதறிவிட்டு சந்நியாசி ஆகி, வீட்டை விட்டு வெளியில் வருகிறார். அவர் வீட்டைத் துறந்ததும், அடுத்து தனது ஆடையைத் துறக்கிறார். ஆம்... நிர்வாணமாக நடமாடுகிறார். ஆரம்பத்தில் எல்லோரும் இவர் மனநலம் பாதித்தவர் என எண்ணி, அஞ்சி ஒதுங்குகின்றனர். தமது அபரிமிதமான ஆன்மிகப் பாடல்களாலும் அரிய அமானுஷ்ய சம்பவங்களாலும், பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படாத அக்கால ஆணாதிக்க சமூகத்தில், ஆண்களை வணங்க வைத்த பெண் சித்தர் லல்லேஸ்வரி எனலாம்.

நிர்வாணமாக மக்கள் முன் உரையாற்றும்போது மாமனார் கேட்கிறார், “இப்படி ஆண்கள் முன் ஆடை இல்லாமல் இருக்கலாமா?” என்று. அப்போது, “ஆண்களா...? எங்கே என் எதிரே ஆடுகள்தானே இருக்கின்றன. ஆண்கள் இல்லையே” என்றதும் மாமனார் கண்ணுக்கு எல்லா ஆண்களும் ஆடுகளாகத் தெரிந்தார்கள் என்ற ஒரு வாய்மொழிக் கதையும் உண்டு.

‘ஒரே ஒரு முறைதான் ஷாம்தான் என்னும் மகானை நேருக்கு நேர் சந்திக்கிறார் லல்லேஸ்வரி. அப்போதுதான், “ஆ... இதோ ஓர் ஆணைப் பார்த்து விட்டேன்!” என்று கூவியபடியே, ஒரு மளிகைக் கடையில் நுழைந்து தன்னை மறைத்துக் கொண்டார்’ என்ற கதையும் உண்டு. அப்படியாயின் ஆண்குறி உள்ளவன் எல்லாம் ஆண்மகன் அல்ல. மக்கள் நேசமும் இறை ஞானமும் உள்ளவனை மட்டுமே ஆண்மகனாக அவர் ஏற்றுக்கொண்டார் என்பதே இதன் சாரம் என்று நான் அவதானிக்கிறேன்.

‘அரிய செயல்களை, அமானுஷ்யங்களைச் செய்து காட்டும் யோக வித்தையை இவர் எப்படிக் கற்றார்?’ என்று நமக்குள் கேள்விகளும் தேடலும் பிறக்கும். அதற்கு அவரே தன் கவிதையில் அந்த சூட்சுமத்தைச் சொல்கிறார் இப்படி...

‘ஒவ்வொரு நொடியும் மனதுக்கு
ஓங்காரத்தை உபதேசித்தேன்
நானே சொன்னேன்
நானே கேட்டேன்
அவனே நான் என்பதிலிருந்து
நானைக் கத்தரித்தேன்’

- என்கிறார் லல்லேஸ்வரி

என்னவொரு தீர்க்கத் தத்துவம்! “சிவனும் நானும் ஒன்றுதான் என்பது ஒரு நிலை, பின் அந்த, ‘நான்’ என்பது அகந்தையாகாமல் அதிலிருந்து விடுபடுவது மற்றொரு படிநிலை. அந்த, ‘நானை’ என்ன செய்ய வேண்டும்? ‘அவனே நான்’ என்பதிலிருந்து அந்த ‘நானை’ கத்தரித்தேன்” என்கிறார். நாமும் ‘நானை’ கத்தரிக்க முடியுமா? கத்தரிக்கத் தெரிந்தால் நான் ஏன் கட்டுரை எழுதப்போகிறேன்? நீங்கள் ஏன் இந்த கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? சரிதானே?

நாத்திகர்களும் ஆத்திகர்களும் எல்லா காலகட்டத்திலும் உண்டு. குறிப்பாக, தீவிரவாதம் கொண்ட ஆஸ்திகர் அதிகம் உண்டு. சடங்குகளை, சமூகக் கட்டுப்பாடுகளை மீறவே கூடாது என்கிற மத தீவிரவாதிகளும் உண்டு. அவர்கள் லல்லேஸ்வரியை திட்டினர். வசை பாடினர். பெண்களும் குழந்தைகளும் அவரைப் புகழ்ந்தனர்.

ஒருமுறை அவர், துணி வியாபாரி ஒருவரிடம் ஒரே அளவு எடையுள்ள இரண்டு துணிகளை வாங்கி, அவற்றைத் தன் இரு தோள்களில் போட்டுக்கொண்டு நடந்தாராம். வழியில் சிலர் திட்டத் திட்ட வலது தோளில் தொங்கும் துணியில் ஒரு முடிச்சும், வாழ்த்தும்போது இடது தோளில் தொங்கும் துணியில் ஒரு முடிச்சும் போட்டபடி பயணித்தார். இரண்டு துணிகளும் முடிச்சுகளால் நிரம்பி இருந்தன. அதாவது, வசவும் புகழ்ச்சியும் சமமாக. பிறகு துணியைக் கடைக்காரரிடம் கொடுத்து, எடை போட்டுப் பார்க்கச் சொன்னாராம். இரண்டு துணிகளும் ஒரே எடைதான் இருந்தது. முடிச்சுப் போட்டால் எடை கூடி விடுமா என்ன? ‘ஆமாம்... வாழ்த்தும் வசவும் எனக்கு ஒன்றுதான்’ என்று புன்னகைத்தாராம். தனது காலத்து எதிர்வினையை இவ்விதமாக அவர் எதிர்கொண்டார் என்று சொல்வார்கள்.

இறைவனை எப்படி வழிபடுவது? ‘எல்லா மலரும் அவனாக இருக்க, எல்லா நதியும் அவனாக இருக்க, ஆசையால் கும்பிடு. மனதால் வழிபடு. முகமூடி இல்லாமல் உன் அசல் முகத்திலிருந்து வழியும் உனது உழைப்பின், ஒரு துளி வியர்வைத் துளியே சிவனுக்கு அபிஷேக நீராகட்டும்’ என்று சொன்னவராம் லல்லேஸ்வரி. உழைப்பும் வியர்வையும் சிவனின் ஆராதனை என்று சொன்னால், உட்கார்ந்து சாப்பிடும் மத பண்டிட்டுகள் சும்மா இருப்பார்களா? அதனால்தான் இவ்வளவு இன்னல்கள். உழைக்கும் மக்களோடு இணைந்திருந்ததால் மக்கள் செல்வாக்கு பெற்ற ஆன்மிக அவதாரமானார் லல்லேஸ்வரி.

காஷ்மீரின் அவதாரமாகக் கொண்டாடப்படும் லல்லாதேவி, 1392ல் ஸ்ரீநகரில் ஜீவசமாதி அடைந்தார். ‘அவர் இயற்கை எய்தும்போது அவருடைய உடம்பிலிருந்து பந்து போல ஒரு ஒளிப்பிழம்பு வெளியேறியது’ என்று சொல்கிறார்கள். நமது புத்தியிலும் மனசிலும் இருக்கும் இருள் அகல, அந்த ஒளிப்பிழம்பிலிருந்து ஒரு அகல் விளக்கு ஏற்றி வைப்போம். அந்த அகல் விளக்கை நோக்கி நகர்வதே இந்தத் தொடரின் பணி.

(நன்றி : இந்தத் தொடரில் வரும் இரு கவிதைகளின் தமிழாக்கம் இசைக்கவி ரமணன்.)

(தரிசனம் தொடரும்)

Comments

Viji muruganathan says :

அற்புதமாக மலர்ந்திருக்கிறார் லல்லேஸ்வரி..அருமையான சித்தர் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி சூர்யா

G Srikanth says :

என்னே வல்லமையான தமிழாக்கம்....லல்லேஸ்வரி பானையின்றி தண்ணீர் ஊற்றிய தைப் படித்ததும், அந்நாளில் புதியவார்ப்புகள் படத்தில் ஜி. சீனிவாசன் கவுண்டமணியிடம் அமாவாசை " யாரோ ஒரு பொண்ணு குடத்தை இங்க வச்சுட்டு தண்ணிய மாத்திரம் எடுத்துட்டுப் போகுது எனச் சொன்னதும் நிர்வாணம் எனும் தலைப்பில் கண்ணதாசன் கவிதை எழுதிய நினைவும் என்னுள் வந்து போனது.

Mangalagowri says :

என்ன சொல்ல... அற்புதம் என்பதெல்லாம் சாதா வார்த்தைகள்தான். கண் அகலாமல் வாசித்தேன் என்பதனை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஆன்மீக தேடல் தொடரட்டும் சூரியா. நன்றி

ரிஷபன் says :

வித்தியாசமான சித்தர். பிரமிப்பு

வீரமணி says :

முடிபோடுவதால் துணியின் எடை கூடுவதில்லை தன்னையறிந்தவருக்கு வாழ்த்தும் வசவும் ஒன்றுதான் அருமை அருமை

Aanandhee Kannan says :

அப்பபப்பா மெய் சிலிர்க்க வைக்கிறது ஒவ்வொரு வரிகளும் மிகச் சிறந்த பகிர்வு பதிவு ..

Vijayarani Meenakshi says :

ஒவ்வொரு பெண்சித்தரும் பிரமிப்பே

மருத்துவர்.ம.ஜீவரேகா,தலைவர்,தென்சென்னை தமிழ்ச்சங்கம் says :

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னையறியாமல் தானே கெடுகின்றான் தன்னையறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்தானே" என்ற திருமூலரின் வாக்கிற்கேற்ப தன்னை அறிந்துணர்ந்தவர்களே சித்தர் என்ற உயர்ந்த நிலையை அடைகிறார்கள், தொடர்ந்து பெண்சித்தர்களைத் தேடிக் கண்டடைந்து அவர்களின் சிறப்பம்சங்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கும் அமிர்தம் சூர்யா அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள். ஆண் என்ற தோற்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஆண்களல்ல,அனைவரிடத்தும் நேசமும்,இறை நமக்களித்த திறனை உணர்ந்து தெளிந்து உண்மையான பற்றுடன் எவன் விளங்குகிறானோ அவனே ஆண்மகன்,மற்றவர்கள் எல்லாம் ஆடுகளே என்பதை உணர்த்தியது இத்தொடரின் வாயிலாக உணர்த்தியது சிறப்பு. பற்றற்ற வாழ்வு மட்டுமே சாஸ்வதம்,மற்றவையான பெயர்,புகழ்,இகழ்ச்சி ஆகிய அனைத்துமே உலகின் மாயை மட்டுமே,அவைகளால் இந்த ஆன்மாவிற்குக் கிடைக்கப்போவது ஒன்றுமேயல்ல என்பதை உணரமுடிகிறது. பெண்சித்தர்கள் பற்றிய உங்களின் தொடர்கட்டுரை மேலும் பல மாற்றங்களை சமூகத்தின்பால் விளைவிக்கட்டும். எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

Prabhamurugesh says :

நம் பரத தேசத்தின் அடையாளமே இப்படியான நான் என்பதை அழித்த சித்தர்கள் தான். மனதாலாகி உடம்பு ஒரு பொருட்டல்ல என மலர்ந்த இந்த சித்த புருஷியை அறிந்ததிற்கு நன்றிகள் சூர்யா..அடுத்த தரிசனத்தை நோக்கி..

Ragjabkumar says :

Very different, very useful. For today`s society

ஜி.ஏ.பிரபா says :

அருமை. எல்லாமே பிரம்மத்தின் துளிகள் எனும்போது ஆணென்ன? பெண்னென்ன என்பதுதான் உண்மை. கவிதையும் சித்தர் கதையும் அற்புதம்.

அனுராதா சேகர் says :

விறு விறு ப் பான நடை..ஒரே மூச்சில் படித்து விட்டேன்..ஆன்மீக அவதாரம் லாலேஸ்வரி பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. பாராட்டு சூர்யா. லாலேஸ்வரி சரிதம் எனக்கு அக்கா மகா தேவி என்னும் 12 c பெண் கவிஞரை நினைவு படுத்துகிறது. வீர சைவ நெறியை க் கடைபிடித்த புரட்சிகரமான சித்த புருஷி அவள். போலியான சமய சடங்குகளை வெறுத்த அவரது தத்துவப் பாசுரங்கள் பிரபலமானவை. சிவனையே கணவனாக வரித்துக் கிண்ட இவர்,தமது உடையைக் களைந்து துறவு பூண்டு நிர்வாணமான போது, இறைவனே இவரது உடல் முழுவதும் மயிர்க் கற்றைகளை வளரும்படி செய்து கூச்சத்தைப் போக்கியதாக நம்பப்படுகிறது.

ப்ரியா பாஸ்கரன் says :

வெகு சிறப்பு. என்ன ஆச்சரியம் நிர்வாண பெண் சித்தர். நிர்வாணத்தை மேற்கொள்ளும் சமண சமயத்தில் கூட ஆண்களே நிர்வாண தீட்சை ஏற்கிறார்கள். இப்போது தான் பெண் சித்தர் நிர்வாண தீட்சை ஏற்றார் என்பதனை அறிந்தேன். சிறப்பான கட்டுரை. தொடருங்கள் சூர்யா

சு. ஹரிஹரன் says :

அருமை ஐயா. அற்புதமான சித்தர். பகிர்வுக்கு நன்றி ஐயா.

Iswarya says :

அருமை ஐயா. அற்புதமான பெண் சித்தர் பற்றிய. பகிர்வுக்கு நன்றி .

Kalaiselvy srinivas says :

அருமையான கோப்பு... என்னைக் கத்தரித்தால் நான் ஏன் இதை எழுதப்போகிறேன்.. நீங்கள் இதை ஏன் படிக்க போகிறீர்கள்??

Nandakumar says :

பிரமிப்பு மிக்க தொடரின் முக்கியமான தொடர்.... அடுத்தடுத்து வருவதில் இன்னும் மிளிரும்... வாழ்த்துகள் நண்பா.

Suseela moorthy says :

அபூர்வமான தகவல்கள் சுவாரஸ்யமான நடையில் இருப்பதால் ஒரு வரிவிடாயல் வாசிக்க முடிகிறது சூர்யா ... #இறைவனை எப்படி வழிபடுவது? ‘எல்லா மலரும் அவனாக இருக்க, எல்லா நதியும் அவனாக இருக்க, ஆசையால் கும்பிடு. மனதால் வழிபடு. முகமூடி இல்லாமல் உன் அசல் முகத்திலிருந்து வழியும் உனது உழைப்பின், ஒரு துளி வியர்வைத் துளியே சிவனுக்கு அபிஷேக நீராகட்டும்’ என்று சொன்னவராம் லல்லேஸ்வரி. உழைப்பும் வியர்வையும் சிவனின் ஆராதனை என்று சொன்னால், உட்கார்ந்து சாப்பிடும் மத பண்டிட்டுகள் சும்மா இருப்பார்களா? அதனால்தான் இவ்வளவு இன்னல்கள். உழைக்கும் மக்களோடு இணைந்திருந்ததால் மக்கள் செல்வாக்கு பெற்ற ஆன்மிக அவதாரமானார் லல்லேஸ்வரி.# இதை வாசித்த போது மூவுலகும் விரிந்து பரந்த உன் பாத கமலங்களை நீரூற்றித் துதிக்க என் சின்னஞ்சிறு பாத்திரத்தின் தண்ணீர் போதுமா? விண்ணும், மண்ணும் பரந்திருக்கும் உன் திருமேனியை அலங்கரிக்க நான் போர்த்தும் சிறிய ஆடையால் ஆமோ? உன்னை நமஸ்காரம் செய்தால் என் காலை நீ இல்லாத பக்கமாக என்னால் நீட்ட முடியவில்லையே! சரி! உன்னை பிராத்திக்கலாம் என நினைத்தால் என் மன ஆசையை அறியாதவனாகவா நீ இருக்கின்றாய். எல்லாம் ஆன நீயேதான் நானாகவும் இருக்கின்றாய் என்று தெரிந்து கொண்டு நான் வாழ்வதற்கு நீதான் அருள் புரிய வேண்டும். தாயுமானவர் அற்புதமாக எடுத்துரைத்தது நினைவுக்கு வந்தது .. நெஞ்சகமே கோயில்! நினைவே சுகந்தம்! அன்பே மஞ்சன நீர்! பூசை கொள்ளவாராய்! பராபரமே! என்பது எத்தனை மெய்யான ஒன்று ... இவையெல்லாம் நான் வாசித்து அறிந்தது ஆனால் இறையுணர்வை அவனே நான் என்பதிலிருந்து நானைக் கத்தரித்தேன்’ - என்ற லல்லேஸ்வரியின் வார்த்தை இன்னும் சிலிர்ப்பு கூட்டுகிறது .. வாழ்த்துகள் சூர்யா

கிருஷ்ண திலகா says :

அருமை சூர்யா! அருமையான சொல்லோட்டம்! தொடர வேண்டும்! வாழ்த்துகள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :