• தீபம் - ஆன்மீகம்

தனிஷ்டா பஞ்சமிக்கு பரிகாரம்!


ராதா





‘தனிஷ்டா பஞ்சமி’ என்பது பதிமூன்று நட்சத்திரங்களைக் குறிக்கும். ‘இந்த தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?’ என்பது பலரது கேள்வியாக இருக்கக் கூடும். இது இறந்தவர்களின் நட்சத்திரத்தைக் குறிக்கும் தினங்களாகும்.

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் பதின்மூன்றில் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.

ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.

கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.

மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, பிறக்கும்போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நினைவில் கொள்வது வழக்கம். ஆனால், ‘இறக்கும்போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம்’ என்று சித்தர்கள்

சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள், ‘அடைப்பு’ என்று வழங்கப்படுகின்றன.

அது என்ன அடைப்பு? அதாவது, கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் இதை, ‘தனிஷ்டா பஞ்சமி’ என அழைப்பதுவும், இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால், இந்த துர்தேவதை அந்த வீட்டில் புகுந்து ஆவி ரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி, அந்த வீட்டில் உள்ளவர்களை பயமுறுத்தி ஆறு மாதத்துக்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பர்.

முக்தி பெற்ற உயிர்கள், கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளி வடிவான இறைவனை அடைகின்றன. ஆனால், முக்தி நிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

முற்காலங்களில் இந்த அடைப்பு காலம் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாகக் கொண்டு செல்லாமல், சுவரை இடித்து அதன் வழியாக எடுத்துச் செல்வது போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப்படுகிறோம்.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறாரோ, அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்துக்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. இருபத்தியேழு நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டா பஞ்சமி நட்சத் திரங்களான பதிமூன்று நட்சத்திரங்கள் போக, மீதமுள்ள பதினான்கு நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய, ‘அடைப்பு’ என்று சொல்லப்பட்டுள்ள அந்த கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே, கருட புராணமும் உறுதிப்படுத்துகின்றது.

இதற்குப் பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம் வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலை நேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து, ‘இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவ வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டு, கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம் வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்துகொள்ள, இறந்த அந்த உயிர் முக்தி பெறும் என்கிறது ஜோதிடம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :