• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

46. என்ன சேதி?


- அமரர் கல்கி

அமரர் கல்கி

ஒரு காரணமும் இன்றிச் சிறையில் கிடந்து வாடிய தேசபக்தர்கள் பலர் சென்ற ஆண்டின் இறுதியில் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நல்வரவு கூறுகிறோம். அவர்களைப் போலவே அகாரணமாகச் சிறையில் வைக்கப்பட்டுள்ள தேசபக்தர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சிறைக்கதவு திறக்கப்படும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பிரார்த்திக்கிறோம்

நாற்பது கோடி மக்கள் வாழும் இந்தப் பாரத பூமியை ஆளும் பொறுப்பைத் தளபதி வேவல் பெயரளவில் வகித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக நிர்வாக சபை அங்கத்தினர் சிலரும் அலங்காரமாக வீற்றிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் திறமைசாலிகளான சில ஐ.சி.எஸ்.காரர்கள்தான் - ஆங்கிலேயரும் இந்தியருமாகச் சேர்ந்து - தேச நிர்வாகம் செய்யும் பெரிய பாரத்தைத் தாங்க வருகிறார்கள். நாளுக்கு நாள் இந்த பாரம் அதிகமாகியும் வருகிறது.

சிறையிலுள்ள நமது அரும் பெரும் தலைவர்களான ஜவாஹர்லால்ஜி, ராஜேந்திர பிரஸாத், வல்லபாய் முதலியவர்கள் வெளியில் வந்து, இராஜ்ய பாரத்தை ஐ.சி.எஸ்.காரர்களின் தோள்களிலிருந்து இறக்கித் தாங்கள் ஏற்றுக் கொள்ளும் நாள் கூடிய சீக்கிரத்தில் வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.

ஆதரிக்கிறோம்

டில்லி பெரிய சட்டசபையில் காலியாகியிருக்கும் ஒரு ஸ்தானத்துக்குச் சென்னை மாகாணம் முழுவதிலுமுள்ள கௌன்சில் ஆப் ஸ்டேட் வோட்டர்கள் சேர்ந்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஸ்தானத்துக்கு நமது ஆந்திர சதோதரர் ஸ்ரீ.எம். திருமல்ராவ் நிற்பதை முழு மனதுடன் நாம் ஆதரிக்கிறோம். ஸ்ரீ திருமல் ராவ் ஆந்திர நாட்டின் சிறந்த தேசபக்தர்களில் ஒருவர்; பிரபல காங்கிரஸ் வாதி; சிறை சென்ற தியாகி; நல்ல அறிவாளி. சட்டசபையில் ஜனங்களின் கட்சியை எடுத்துச் செல்வதற்கு அவரைக் காட்டிலும் சிறந்த பிரதிநிதியைக் கண்டுபிடிக்க முடியாது. தமிழ்நாட்டிலுள்ள வோட்டர்கள் ஸ்ரீஎம்.திருமல் ராவுகே தங்கள் வோட்டுக்களைக் கொடுக்க வேண்டுமென்று பெரிதும் கேட்டுக்கொள்கிறோம்

ஆசி கூறுகிறோம்

தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் இலக்கிய மறுமலர்ச்சியின் சின்னங்களாகப் பல கையெழுத்துப் பத்திரிகைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தக் கையெழுத்துப் பத்திரிகைக்காரர்கள் ‘நாடோடி’யின் தலைமையில் ஒரு சங்கம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்கிறோம். மேற்படி சங்கம் வளர்ந்தோங்கித் தமிழுக்கும் தமிழ்நாடுக்கும் நல்ல இலக்கியத் தொண்டு செய்யுமாறு ஆசி கூறுகிறோம். (ஜனவரி 7, 1945)

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

மொழி வித்யாசமின்றி மனம் திறந்த தலையங்கம்.

S.Sreevidhya says :

அன்றும் இன்றும் தேசியமும் தேசப்பற்றுமே கல்கியின் தனித்துவ அடையாளங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :